‘ஜெயிச்சாலும் தோத்தாலும் சண்ட செய்யணும்’ – ஐபிஎல்-லின் டாப் 5 ’போராட்ட’ இன்னிங்ஸ்கள்!

ஐபிஎல் தொடரில் வெற்றிக்கு மிக அருகில் வந்து ஒரு அணி தோல்வியைத் தழுவிய சம்பவஙகள் எத்தனையோ நடந்திருக்கின்றன. அப்படியான போட்டிகளில் மறக்க முடியாத 5 இன்னிங்ஸ்களைப் பார்ப்போம்.

சுரேஷ் ரெய்னா – 87 vs KXIP (2014)

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

மிஸ்டர்.ஐபிஎல் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, தனது அசத்தல் இன்னிங்ஸ்களால் எத்தனையோ மேட்சுகளில் சி.எஸ்.கே-வுக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார். அதேநேரம் சில போட்டிகளில் அவரது இன்னிங்ஸால் கூட தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போயிருக்கிறது. அப்படியான ஒரு பெர்ஃபாமென்ஸ்தான் 2014 சீசனின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான அவரின் அதிரடி ஆட்டம்.

அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 226 ரன்கள் குவித்தது. குறிப்பாக சேவாக், 122 ரன்கள் விளாசியிருப்பார். 227 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கேவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே டூப்ளஸிஸ் ஆட்டமிழந்து வெளியேறுவார். அடுத்து வந்த ரெய்னா, அதிரடியைத் தொடக்க முதலே காட்டத் தொடங்குவார். பவர் பிளேவில் மட்டுமே 12 பவுண்டரிகள் ஒரு சிக்ஸரை ரெய்னா விளாச, சி.எஸ்.கே, 6.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டும். எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், ரெய்னா ரன் – அவுட் ஆகி வெளியேறுவார். அவர் 25 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருப்பார். லோயர் மிடில் ஆர்டர் சொதப்பவே, சி.எஸ்.கே அந்தப் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

விருத்திமான் சாஹா – 115 vs KKR (2014 ஐபிஎல் ஃபைனல்)

விருத்திமான் சாஹா
விருத்திமான் சாஹா

கிங்ஸ் லெவன் பஞ்சாப், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு 2014 சீசனில் முன்னேறியது. ஃபைனலில் வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்க்கொண்டது. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 30 ரன்கள் சேர்ப்பதற்குள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி மற்றும் சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருக்கும். இதையடுத்து, மனன்வோராவுடன் கைகோர்த்து சாஹா, பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு வேகத்தை அதிகப்படுத்துவார். இந்த ஜோடி, 12 ஓவர்களில் 129 ரன்கள் எடுக்கவே, பஞ்சாப் 199 ரன்கள் குவிக்கும். அந்தப் போட்டியில் சாஹா, 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மணீஷ் பாண்டேவின் அதிரடியால் கொல்கத்தா, கடைசி ஓவரில் இலக்கை எட்டி இரண்டாவது முறையாக 2014-ல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

யூசுப் பதான் – 100 vs MI (2010)

யூசுப் பதான்
யூசுப் பதான்

ஐபிஎல் தொடரின் ஆரம்பகாலங்களில் யூசுப் பதான், அதிரடியால் மிரட்டிக் கொண்டிருந்தார். 2010 சீசனில் மும்பை அணிக்கெதிராக அவர் பதிவு செய்த சதம், அப்போது குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் என்ற சாதனையாகப் பதிவானது. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை, 212 ரன்களைப் பதிவு செய்யும். 213 டார்க்கெட்டோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 66 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழக்கும். ஒரு கட்டத்தில் 64 பந்துகளில் 147 ரன்கள் தேவை என்கிற சூழல் ஏற்படும். அப்போது, மும்பை பந்துவீச்சை நொறுக்கிய யூசுப் பதான், 37 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பார். எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட் ஆகி வெளியேறவே, ராஜஸ்தானின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துவிடும். இதனால், அந்தப் போட்டியில் மும்பை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்யும்.

சஞ்சு சாம்சன் – 119 vs PBKS (2021)

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ஐபிஎல்லின் 2021 சீசனின் முக்கியமான பெர்ஃபாமன்ஸ் இது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் சதமடிப்பார். பஞ்சாப் நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தானின் பெஸ் ஸ்டோக்ஸ், மனன்வோரோ ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டமிழப்பார்கள். மறுமுனையில் அதிரடி கட்டிய ஜோஸ் பட்லரும் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆகிவிடுவார். 147 ரன்கள் தேவை என்கிற நிலையில், அடுத்தடுத்து இரண்டு பாட்னர்ஷிப்களை சஞ்சு சாம்சன் பில்ட் செய்வார். ஒரு கட்டத்தில் 42 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்கிற நிலையில், 36 ரன்களை தனியாளாகவே ஸ்கோர் செய்திருப்பார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்கிற நிலையில், பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழப்பார். அந்தப் போட்டியில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களும் சஞ்சு சாம்சன், 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்.

எம்.எஸ்.தோனி – 84 vs RCB (2019)

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

2019 சீசனில் ஆர்.சி.பிக்கெதிரான போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் தோனியின் 84 ரன்கள் அந்த அணி ரசிகர்களால் மறக்க முடியாதது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்.சி.பி 161 ரன்கள் எடுத்தது. 162 இலக்கோடு களமிறங்கிய சி.எஸ்.கே, 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும். அப்போது, அம்பாதி ராயுடு மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களோடு இணைந்து சி.எஸ்.கேவின் சேஸிங்கை ஸ்டெடியாகக் கொண்டு செல்வார் கேப்டன் தோனி. உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை என்கிற சூழலில் முதல் 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி பறக்க விடுவார் தோனி. ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடிக்கவே, கடை பந்தில் சி.எஸ்.கே வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு மேட்ச் தலைகீழாக மாறிவிடும். ஆனால், கடைசி பந்தை உமேஷ் யாதவ் டாட் பாலாக வீச, ஆர்.சி.பி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்யும். தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பார். தோனி ஆட்டமிழக்காமல் இருந்து சி.எஸ்.கே தோற்ற மேட்ச் அது.

Also Read – கெய்ல், மெக்கல்லம் முதல் கும்ப்ளே வரை… ஐபிஎல்-லின் 5 எவர்கிரீன் பெர்ஃபாமென்ஸ்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top