விராட் கோலி

Virat Kohli: `கிங்’ கோலியின் தரமான 5 Thug Life மொமண்ட்ஸ்!

டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டெஸ்ட் கேப்டன்ஷிப்பையும் துறந்திருக்கிறார் விராட் கோலி. களத்தில் ஆக்ரோஷமானவராக அறியப்படும் கோலி, எதிரணியினர் சீண்டும்போது பல தருணங்களில் உரிய பதிலடியும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, ஸ்லெட்ஜிங்கில் அதிகமாக ஈடுபடும் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடங்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர் வரை களத்தில் தன்னிடம் வம்பிழுப்பவர்களுக்குப் பல நேரங்களில் தனது பேட்டிங்காலும் சில இடங்களில் வார்த்தைகளாலும் பதில் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களால் `கிங்’ கோலி என்றழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 5 தக் லைஃப் மொமண்ட்ஸ் பத்திதான் இப்போ நாம தெரிஞ்சிக்கப்போறோம்.

ஜேம்ஸ் ஃபால்க்னர்

எதிரணி வீரர்களை வம்பிழுப்பதில் வல்லவர்களாக ஆஸ்திரேலிய வீரர்கள் அடிக்கடி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதுண்டு. அப்படி 2016 இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் சீரிஸின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஃபால்க்னர் அப்போது இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்த விராட் கோலியை வம்பிழுப்பார். ஆனால், விராட் பேட்டாலும், தனது அதிரடியான கருத்துகள் மூலமும் பதிலடி கொடுத்திருப்பார்.

`நீ உன்னுடைய எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் வாழ்நாளில் போதுமான அளவு ரன்களை உனது பந்துவீச்சில் நான் குவித்துவிட்டேன். பேசாமல் போய் பவுலிங் போடு’ என்கிறரீதியில் விராட் கோலி கொடுத்த பதில் ஸ்டம்ப் மைக்கில் ரெக்கார்ட் ஆனது. இந்திய அணி முதலில் பேட் செய்த நிலையில், விராட் கோலியின் சதத்தின் (117) உதவியோடு 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நோட்புக் செலிபிரேஷன்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெஸ்ரிக் வில்லியம்ஸ், விக்கெட் எடுத்தபிறகு அந்த பேட்ஸ்மேனின் பெயரைத் தனது நோட்புக்கில் குறித்துக்கொள்வதைப் போல செய்வது கிரிக்கெட் உலகில் நோட்புக் செலிபிரேஷன் என்று பெயர் பெற்றது. அங்கு நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக்கில் சாத்விக் போல்டனுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் புகழ்பெற்றது. இந்தநிலையில், கடந்த 2017-ல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்தது இந்திய அணி. ஜமைக்காவில் நடந்த டி20 போட்டியில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழக்கவே, தனது பேவரைட் நோட்புக் செலிபிரேஷன் செய்து அவரை வழியனுப்பி வைப்பார்.

இதை மறக்காத விராட் கோலி, 2019-ல் வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது பதிலடி கொடுத்திருப்பார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அரை சதம் விளாசியதோடு கெஸ்ரிக் பந்துவீச்சில் சிக்ஸர்களையும் பறக்க விட்டிருப்பார் கோலி. அப்போது, கெஸ்ரிக் வில்லியம் ஸ்டைலிலேயே நோட்புக் செலிபிரேஷனை இமிடேட் செய்து ரசிக்க வைத்திருப்பார் கோலி. சிபிஎல்-லில் நடந்த சம்பவத்தைத்தான் கோலி குறிப்பிடுகிறார் என்று கருதப்பட்ட நிலையில், போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷனில் தனக்கு 2017-ல் நடந்த சம்பவத்தை விராட் கோலி நினைவுகூர்ந்து விளக்கம் கொடுத்திருப்பார்.

மைக் டிராப் செலிபிரேஷன்

2018-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருந்தது இந்திய அணி. இரு அணிகள் இடையில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சதமடித்த இங்கிலாந்தின் ஜோ ரூட், தனது கையில் இருந்து பேட்டைக் கீழே போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மைக் டிராப் செலிபிரேஷன் என்றழைக்கப்படும் இந்த செலிபிரேஷனை அதற்கடுத்து நடந்த டெஸ்ட் சீரிஸில் வெளிப்படுத்தி பதில் கொடுத்திருப்பார் விராட் கோலி.

ஒருநாள் தொடருக்குப் பின்னர் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டைத் தனது துல்லிய த்ரோ மூலம் விராட் கோலி ரன் அவுட் செய்வார். அதுவரை 216/3 என்றிருந்த இங்கிலாந்தின் ஸ்கோர், ரன் அவுட்டுக்குப் பிறகு முதல் நாள் முடிவில் 285/9 என்று அப்படியே மாறும். ஜோ ரூட்டை அவுட்டாகிய பிறகு விராட் கோலி, வாய் மீது கை வைத்து `உஷ்’ என்று சொன்னதோடு, ஜோ ரூட்டின் மைக் டிராப் செலிபிரேஷனையும் இமிடேட் செய்து கொண்டாடியிருப்பார். இது அப்போது, சர்வதேச மீடியாக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

மிட்செல் ஜான்சன்

2014 விராட் கோலியின் கரியரில் மறக்க முடியாத முக்கியமான ஆண்டு என்றே சொல்லலாம். அந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இடையிலேயே தோனி டெஸ்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து விடுவார். இதனால், அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி களமிறங்குவார். அடிலெய்டின் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் உள்பட ஒரு பேட்ஸ்மேனாகவும் அந்த சீரிஸில் ஜொலித்திருப்பார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் பவுலரான மிட்செல் ஜான்சன், விராட் கோலியைச் சீண்டுவார். அந்த இன்னிங்ஸின் 83-வது ஓவரில் செஞ்சுரி அடிக்க 16 ரன்களே தேவை என்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி டிஃபண்ட் செய்த பந்தை எடுத்து அவரைக் குறிவைத்து மிட்செல் ஜான்சன் எறிந்துவிடுவார். இதில், காலின் பின்பகுதியில் பட்டு விராட் கோலி நிலைகுலைந்து கீழே விழுவார். அதன்பின்னர், அந்த இன்னிங்ஸில் மிட்செல் ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கிய கோலி சதமடித்து அசத்தியிருப்பார். அதற்கு முந்தைய மேட்சில் பவுன்சர் மூலம் விராட் கோலியின் ஹெல்மெட்டை மிட்செல் ஜான்சன் ஒருமுறை பதம்பார்த்திருப்பார்.

Take a Bow

2016 ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டனான விராட் கோலி லாங் ஆனில் நின்றிருப்பார். அப்போது, குஜராத் வீரர் ஸ்மித் அடித்த பந்தை முன்பக்கம் டைவ் அடித்து கேட்ச் செய்வார் விராட். ஆனால், அதன்பிறகு அந்தப் பந்தைக் கோபமாக தரையில் எறிந்துவிடுவார். இதனால், அதை அவுட் இல்லை என்று அம்பயர் தர்மசேனா அறிவித்துவிடுவார். இதனால், விராட் கோலி அதிருப்தியடைவார். அதன்பிறகு, மூன்றாவது அம்பயரின் தலையீட்டுக்குப் பிறகு தர்மசேனா அதை அவுட் என்று அறிவிப்பார். அம்பயரின் முடிவுக்குத் தலைவணங்குவது போல் தனது கேப்பைக் கழற்றி தலை வணங்குவார் விராட் கோலி.

Also Read – `புயல்’ கோலி…`செயல்’ ரோஹித்… `அமைதியோ அமைதி’ ரஹானே – 3 கேப்டன்கள், 3 ஸ்டைல்கள், 3 பாயிண்ட்!

1 thought on “Virat Kohli: `கிங்’ கோலியின் தரமான 5 Thug Life மொமண்ட்ஸ்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top