ஐபிஎல் தொடரில் இதுவரை 5 வீரர்கள் 99 ரன்களில் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார்கள். விராட் கோலி தொடங்கி நம்ம ருதுராஜ் கெய்க்வாட் வரையிலான அந்த 5 வீரர்களைப் பத்திதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.
விராட் கோலி Vs டெல்லி, 2013

ஐபிஎல் தொடரில் 99 ரன்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் விராட் கோலிதான். 2013 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்தது ஆர்.சி.பி. கெய்லே, புஜாரா என ஓப்பனர்களை பவர் பிளே ஓவர்களுக்கேயே இழந்தது அந்த அணி. 16 ஓவர்கள் முடிவில் 106/3 என்றிருந்த ஆர்.சி.பியின் ஸ்கோர் கார்டு, 183/4 என்று 20 ஓவர்கள் முடியும்போது இருந்தது. 16-வது ஓவர் முடிவில் 43 பந்துகளில் 47 ரன்கள் என்றிருந்த விராட் கோலி, 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலி – டிவிலியர்ஸ் ஜோடி கடைசி 4 ஓவர்களில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளோடு 77 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
பிரித்வி ஷா Vs கொல்கத்தா, 2019

2019 சீசனில் சூப்பர் ஓவர் வரை போன இந்தப் போட்டி டி20 ரசிகர்களுக்கு பல த்ரில் மொமண்டுகளைக் கொடுத்த போட்டி என்றே சொல்லலாம். முதலில் பேட் செய்த கொல்கத்தா, ஒரு கட்டத்தில் 61/5 என்று திணறிக் கொண்டிருந்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் அரைசதம் மற்றும் ரஸல் அதிரடியாக ஆடி 62 ரன்கள் எடுக்க 185 என்ற சவாலான இலக்கை டெல்லிக்கு நிர்ணயித்தது. சேஸிங்கில் அசத்தலாக ஆடிய டெல்லி வீரர் பிரித்வி ஷா, 55 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து பெர்குஸன் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறுவார். இந்தப் போட்டியில் இரு அணிகளின் ஸ்கோர்களும் டையில் முடியவே, சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றியைப் பதிவு செய்யும்.
இஷான் கிஷான் Vs ஆர்.சி.பி, 2020
முந்தைய போட்டியைப் போலவே இதுவும் டையில் முடிந்ததுதான். ஐபிஎல் வரலாற்றில் டையில் முடிந்த அதிகபட்ச ஸ்கோர் மேட்ச் இதுதான். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்.சி.பி, 20 ஓவர்களில் 201/3 என்ற சவாலான ஸ்கோரைப் பதிவு செய்யும். மும்பையின் சேஸிங்கில் இஷான் கிஷான் – பொல்லார்டு ஜோடி கடுமையாகப் போராடும். குறிப்பாகக் கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் வேண்டும் என்கிற நிலையில், ஆர்.சி.பியின் சஹால், ஆடம் ஜாம்பா ஆகியோர் வீசிய இரண்டு ஓவர்களில் மட்டுமே 49 ரன்களை மும்பை அணி குவிக்கும். கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் 5 ரன்கள் தேவை என்கிற சூழலில் இஷான் கிஷான் 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பார். கடைசி பந்தில் பொலார்ட் பவுண்டரி அடிக்க மேட்ச் டையில் முடியும். சூப்பர் ஓவரில் ஆர்.சி.பி வெற்றிபெறும்.
கிறிஸ் கெய்லே Vs ராஜஸ்தான், 2020

2020 சீசனில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரரான கெய்லே, 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பார். அபுதாபியில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான், 17.3 ஓவர்களில் இந்த டார்கெட்டை 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றிகரமாக சேஸ் செய்தது.
ருதுராஜ் கெய்க்வாட் Vs எஸ்.ஆர்.ஹெச், 2022
புனேவில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சி.எஸ்.கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களான கெய்க்வாட் – டேவன் கான்வோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. அந்த அணியின் அதிகபட்ச முதல் விக்கெட் பாட்னர்ஷிப் இதுதான். இந்தப் போட்டியில் சென்னை அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த ஹைதராபாத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Also Read – IPL 2022: ஃப்ளாப் ஆன டாப் 5 மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் ‘Retentions’
0 Comments