இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதை #14YearsOfViratKohli என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விராட் கோலி வசமிருக்கும் சில ரெக்கார்டுகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
விராட் கோலி
டெல்லியைச் சேர்ந்த டீனேஜ் சென்சேஷனான விராட் கோலியின் பெயர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முதலில் சலசலப்பை ஏற்படுத்தியது 2008-ம் ஆண்டில்… அந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வாகை சூடியது. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளிலும் ஜொலித்த கோலி, முதல்முறையாகக் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தார். அதன்பிறகு, பல போட்டிகளில் தனியொருவனாக இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து, Most Dependable பேட்டராக உருவெடுத்தவர், தோனிக்குப் பிறகு கேப்டனாகவும் உயர்ந்தார். கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினார்.

கோலியின் ரெக்கார்டுகள்
- சர்வதேச போட்டிகளில் இதுவரை 70 சதங்கள்.
- மூன்று ஃபார்மேட்டுகளிலும் சேர்த்து 23,726 ரன்கள்.
- 57 முறை ஆட்ட நாயகன் விருது.
- 19 முறை தொடர் நாயகன் விருது.
- ஆண்கள் கிரிக்கெட்டில் ஐசிசி-யின் ‘Player of the Decade’ விருது.
- ஐசிசி வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்றவர்.
- ஐசிசி-யின் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதை மூன்று முறை வென்றவர்.
- மூன்று ஃபார்மேட்டுகளிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் வீரராகப் பெருமை பெற்ற ஒரே ஆக்டிவ் கிரிக்கெட் வீரர்.
- அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வென்ற கிரிக்கெட் வீரர்.
ரன் மெஷின் கோலி

தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லாவுக்குப் பிறகு, விரைவாக 2000, 3000, 4000, 5000, மற்றும் 6000 ரன்களைக் குவித்த வீரர் என்கிற பெருமை கோலியிடம்தான் இருக்கிறது. அதேநேரம், 9000, 10,000, 11,000 மற்றும் 12,000 ரன்களைக் குவித்த வீரர் கோலிதான். ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களைக் குவித்திருக்கும் கோலி, இந்தப் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
கேப்டன் கோலி
இந்திய அணியில் வீரர்கள் ஃபிட்னெஸ் என்கிற விஷயம் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட்டது கோலி கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகுதான். களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்படும் கோலியின் கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய பௌலர்களும் ஆக்ரோஷமாகவே மாறிப்போனார்கள். கேப்டனாக 95 போட்டிகளில் 5,449 ரன்கள் குவித்திருக்கும் இவரின் ஹைஸ்கோர் 160. 2017 – 2022 காலகட்டத்தில் இவரின் கீழ் இந்திய அணி விளையாடிய 95 மேட்சுகளில் 65 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்தது.

இன்னும் முடியல பாஸ்..!
சமீபகாலமாக கோலியின் ஃபார்ம் தொடர்ச்சியாக விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, மூன்று ஃபார்மேட்டுகளிலும் சேர்த்து 2019-க்குப் பிறகு அவர் ஒரு சர்வதேச சதத்தைக் கூட பதிவு செய்யவில்லை. இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் பிரையன் லாராவிடம் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு லாரா சொன்ன பதில், `நீங்க எப்பவும் விராட்கோலியோட சேப்டர் முடிஞ்சிருச்சுனு சொல்லவே முடியாது, குறிப்பா ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தடுத்து வரப்போற சூழல்ல… எப்பவும் போலவே இந்த விமர்சனங்களை எல்லாம் அவரோட பேட் மூலமே பதிலடி கொடுப்பார்’.
0 Comments