டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மெண்டாராக முன்னாள் கேப்டன் தோனி இணைந்தது முதல் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பங்கு என்னவாக இருக்கும், அவரும் தோனியின் பணிகளை எப்படிப் பிரித்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மெண்டார் தோனி
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறாத நிலையில், 2021 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சென்றதோடு கோப்பையையும் வென்றது. ஐபிஎல் நடந்துகொண்டிருக்கும்போதே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ, 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனியை இந்திய அணியின் மெண்டாராக நியமித்திருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு மட்டும் இந்திய அணியின் மெண்டாராக தோனி இருப்பார்.
டி20 உலகக் கோப்பை – இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
டி20 உலகக் கோப்பை தொடரோடு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக இருக்கிறார். அதனால், இந்தத் தொடரை வெற்றியோடு முடிக்க இந்திய அணி முயற்சிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கேப்டனாக ஐசிசி கோப்பைகள் எதையும் வென்றதில்லை என்ற சோகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் கோலி அண்ட் கோ போராடும். மேலும், இந்த உலகக் கோப்பை தொடரோடு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலமும் முடிவடைய இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தொடர்களை வென்றிருந்தாலும், உலகக் கோப்பை வெற்றியோடு விடைபெற கேப்டன் கோலி – பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இணை தீவிரமாக முயற்சிக்கும்.
பயிற்சிப் போட்டிகள்
ஐபிஎல் தொடர் முடிந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிரான அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வென்றது. ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்த அடுத்த சில நாட்களில் இந்திய அணியோடு இணைந்தார் தோனி. வலைப் பயிற்சியின்போதும், பயிற்சிப் போட்டிகளின்போது கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்டோரின் தோனி அதிக நேரம் செலவிட்டார். அதேபோல், இளம் வீரர்களான பன்ட், இஷான் கிஷான் ஆகியோருக்கு தோனி ஆலோசனைகள் வழங்குவது போன்ற புகைப்படங்களும் வைரலாகின. இவற்றில் ரவி சாஸ்திரி இடம்பெற்றிருந்தபோதும், தோனியே வீரர்களிடம் அதிகம் உரையாடுவது போன்ற சூழல் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
ரவிசாஸ்திரியின் ரோல் என்ன?
தோனி மெண்டாராக அறிவிக்கப்பட்டபோதே, அவரும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் எந்த அடிப்படையில் தங்கள் பணிகளைப் பிரித்துக் கொள்வார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பியிருந்தனர். அந்த கேள்விக்கு நியாயம் கற்பிப்பது போன்றே பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்கள் இருந்ததால், இந்த விவகாரம் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக மீம்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், ரவி சாஸ்திரி – தோனி – விராட் கோலி இடையே நல்ல புரிதல் இருக்கிறது. கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்டிருக்கும் அவர்கள் தங்களுக்கான இடத்தை நன்கு புரிந்துவைத்து இந்திய அணியின் வெற்றி மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் விளையாடுவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது.. இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லை என்று ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இந்தியா வெற்றிபெற்றால் தோனிக்கு ஆதரவாகப் பேசும் சிலர், தோல்வியடைந்தால் ரவி சாஸ்திரி – கோலி மீது பழிபோடுவார்கள் என்றும், இந்திய பயிற்சியாளர்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானவர் ரவி சாஸ்திரிதான் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.