டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை 5-4 என்ற் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது. 1980 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்துக்குப் பின் ஹாக்கியில் இந்தியா வென்றிருக்கும் முதல் பதக்கம் இதுவே.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனியின் தைமுர் ஓரஸ் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் 15 நிமிடங்களில் இந்திய அணியின் டிஃபன்ஸை ஜெர்மனி ஆட்டம் காண வைத்தாலும், அதன்பிறகு இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு அந்த அணியை முடக்கியது. இரண்டாது 15 நிமிடத்தில் இந்தியா சார்பில் சிம்ரன்ஜித் சிங் ஒரு கோலடித்தாலும், டிஃபன்ஸில் செய்த சிறிய தவறுகளால் ஜெர்மனி இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.
இந்தியா பின்தங்கியிருந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இரண்டு பெனால்டி வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் நமது வீரர்கள். ஹர்திக் சிங் ரீபவுண்டை கோலாக மாற்றவே, ஹர்மன்ப்ரீத் சிங், சூப்பர் ஃபிளிக் மூலம் அடுத்த கோலை அடித்தார். இதனால், ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. போட்டியின் மூன்றாவது 15 நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங் மற்றும் சிம்ரன்ஜித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியின் கோல் கணக்கை ஐந்தாக உயர்த்தினர். ஜெர்மனி தரப்பில் கடைசி 15 நிமிடங்களில் லூகாஸ் விண்டர்ஃபீல்ட் ஒரு கோலடித்தாலும், அது அந்த அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. இறுதியில் 5-4 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய ஹாக்கி அணி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக்கில் 1980-ல் தங்கம் வென்ற ஹாக்கி அணி, அதன்பிறகு 41 ஆண்டுகள் கழித்து வெண்கலம் வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் 41 ஆண்டு பதக்க தாகத்தைத் தணித்திருக்கும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Also Read – அசாமின் குக்கிராமத்தில் தொடங்கிய ஒலிம்பிக் பயணம் – லாவ்லினாவின் இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி!