டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 64 – 69 எடைப்பிரிவுக்கான பெண்கள் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த லாவ்லினா போர்கொஹெய்ன் மற்றும் துருக்கியைச் சேர்ந்த பசெனாஸ் சர்மெனெலி ஆகியோர் மோதினர். சர்மெனெலி உலகின் நம்பர் 1 வீரராகத் திகழ்கிறார். முதல் சுற்றில் இருந்தே சர்மெனெலி தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தார். இரண்டாவது சுற்றில் இவர் அதிரடியாக விளையாடினார். கடைசியாக இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். எனினும், வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்தியாவுக்கு இது மூன்றாவது பதக்கமாக அமைந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் பரோமுதியா என்ற கிராமத்தில் பிறந்தவர், லாவ்லினா. தன்னுடைய இரட்டை சகோதரிகளான லிச்சா மற்றும் லிமா ஆகியோரைப் பின்பற்றி தன்னுடைய 13 வயதில் முதலில் கிக் பாக்ஸிங்கின் வடிவம் ஒன்றைக் கற்றுக்கொண்டார். தன்னுடைய முதல் பயிற்சியாளரான படம் போரோவை சந்தித்த பின்னர் குத்துச்சண்டை பயிலும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவின் மிகவும் முக்கியமான குத்துச்சண்டை வீராங்கனையாகத் திகழ்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் மேரிகோமுக்குப் பிறகு எந்த இந்திய வீராங்கனையும் பதக்கம் வெல்லாமல் இருந்தனர். ஆனால், தற்போது 23 வயதே ஆன லாவ்லினா பதக்கத்தை வென்றுள்ளார். லாவ்லினா ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்த அதே நேரத்தில் அவருடைய கிராமத்துக்கு பெரிய விடிவுகாலம் பிறந்துவிட்டது என்றே கூறலாம். லாவ்லினா தன்னுடைய இளம் வயதில் இருந்தே மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்தவர். அவரது கிராமமும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லாவ்லினா தன்னுடைய வீட்டுக்குச் செல்ல சரியான சாலை வசதிகூட கிடையாது. அதிகாரிகளும் சாலை வசதிகளை அந்த கிராமத்துக்கு ஏற்படுத்தித்தரவில்லை.
லாவ்லினா பதக்கத்தை உறுதி செய்த செய்தியை அறிந்தவுடன் அவரது கிராமத்துக்கு அதிகாரிகள் சாலைகளை அமைத்து வருகின்றனர். பதக்கம் வென்று லாவ்லினா வீடு திரும்புவதை முன்னிட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிஸ்வாஜித் புகான் பேசும்போது, “ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று வரும் லாவ்லினாவுக்கு பரிசாக இதனை கொடுக்க உள்ளோம். இளம் தலைமுறைக்கு லாவ்லினா எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.இந்தத் தொகுதியில் விளையாட்டுத்துறை மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு முதல்வர் தகுந்த ஒத்துழைப்பினை வழங்குவார் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் லாவ்லினாவின் போட்டியைக் காண அவரது சொந்த மாநிலமான அசாமில் மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் சுமார் 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
பரோமுதியா கிராமத்து மக்கள் லாவ்லினாவின் வெற்றி தொடர்பாக பேசும்போது, “எங்களுடைய கிராமத்து சாலை சீரமடைக்கப்படுவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். லாவ்லினா அரையிறுதிக்குள் நுழைந்ததும் சாலை பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன” என்று தெரிவித்தனர். லாவ்லினா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும், அவர் வெண்கலப்பதக்கம் வென்றதும் அக்கிராமத்து மக்கள் மட்டுமின்றி மாநில அளவில்.. ஏன் இந்திய அளவில்கூட மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதக்கத்திற்கு முன்னதாக லாவ்லினா, 2019-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2018 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இவருக்கு 2020-ம் ஆண்டு அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டது.
Also Read : கோவை வழியாக கேரளா செல்வோருக்கு வரப்பிரசாதம் – குதிரான் சுரங்கப்பாதையில் என்ன ஸ்பெஷல்?