ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போகும் முதல் திருநங்கை என்ற சாதனையை நியூசிலாந்தின் லாரெல் ஹப்பார்ட் படைக்கவிருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளும் பெண்கள் பிரிவில் போட்டியிட முடியும் என்ற விதி கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த விதியின்படி, ஒருவரின் டெஸ்டோஸ்டீரோன் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு 10 நானோமெல் அளவுக்கும் கீழ் இருந்தால் போட்டியிடலாம். இதன்படி, டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்து சார்பில் போட்டியிட தகுதிபெற்றிருக்கிறார் லாரெல் ஹப்பார்டு. 43 வயதான இவர் 87+ கிலோ சூப்பர் வெயிட் லிஃப்டிங் பிரிவில் நியூசிலாந்து சார்பில் கலந்துகொள்வார் என அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இது மறுபுறம் சர்ச்சைக்கும் வித்திட்டிருக்கிறது. ஆணாகப் பிறந்த இவர், பெண்கள் பிரிவில் போட்டியிட்டால் அவர்களை விட வலுவான இவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்கள் பிரிவில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது போன்ற கண்டனக் குரல்களும் எழுந்திருக்கின்றன.
லாரெல் ஹப்பார்ட்
இதற்கு முன்பாக இவர் பங்கேற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டி மிகப்பெரிய சர்ச்சையில் முடிந்தது. 2019ம் ஆண்டு சமோவாவில் நடைபெற்ற பசிபிக் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையும் காமன்வெல்த் சாம்பியனுமான Feagaiga Stowers-ஐ லாரெல் வென்றார். இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையானது. போட்டியை நடத்திய சமோவா விளையாட்டு சங்கம் லாரெலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் போட்டியிட அனுமதிப்பது, ஊக்க மருந்து பயன்படுத்திய வீரரை போட்டியிட அனுமதி கொடுப்பது போன்றது என சமோவா பளுதூக்கும் சங்கம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. அதேபோல், 2018 காமன்வெல்த் போட்டிகளில் இவர் பங்கேற்பதை ஆஸ்திரேலிய பளுதூக்கும் சங்கம் தடை செய்ய முயன்றது. ஆனால், அதை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்க மறுத்துவிட்டன. ஆனால், முழங்கையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் லாரெல் போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
2013-ல் திருநங்கையாக பாலின மாற்றம் செய்துகொள்ளுவதற்கு முன்பு வரை லாரெல் ஆண்கள் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வந்தார். `நியூசிலாந்து மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சி செய்வேன்’ என்று லாரெல் நெகிழ்ந்திருக்கிறார். அதேபோல், இதுகுறித்து பேசிய நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கெரின் ஸ்மித்,விளையாட்டு உலகிற்கும், நியூசிலாந்து அணிக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய எங்கள் அணியின் முதல் வீரர் அவர். திருநங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் எழும் என்பதை நான் அறிவேன். ஆனால், அப்படி விமர்சிப்பவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒலிம்பிக் கமிட்டி விதிகளின் அடிப்படையிலேயே அவர் தகுதிபெற்றிருக்கிறார்’’ என்று கூறினார்.
Also Read – சுஷில் குமார் முதல் மைக்கேல் பெல்ப்ஸ் வரை… வழக்குகளில் சிக்கிய 5 ஒலிம்பிக் மெடலிஸ்ட்!