Bhavani Devi

ஒலிம்பிக் வாள் சண்டைக்குத் தேர்வான முதல் இந்தியர்… பவானி தேவி தாண்டிய தடைகள்!

வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக்கின் வாள் சண்டை தனிநபர் பிரிவில் போட்டியிடத் தேர்வாகியிருக்கிறார். இதன்மூலம் ஒலிம்பிக்குக்குத் தேர்வான முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் எழுதியிருக்கிறார் பவானி.

யார் இந்த பவானி தேவி

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடுத்தரக் குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் சடலவாடா ஆனந்த சுந்தரராமண பவானி தேவி. சுருக்கமாக சி.ஏ.பவானி தேவி. தந்தை கோயில் பூசாரி. தண்டையார் பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், பின்னர் செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார்.

ஐரோப்பிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட வாள் சண்டைப் போட்டி பணக்கார நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கான உபகரணங்களும் விலை உயர்ந்தவை. எளிய குடும்பத்துப் பின்னணி கொண்ட பவானி தேவி ஒலிம்பிக்கின் வாள் சண்டை தனிநபர் பிரிவுக்குத் தேர்வாவது என்பது நிலவுக்குப் பயணம் போவது போன்றது. ஆனால், அந்த மாபெரும் வரலாற்றுச் சாதனையை நனவாக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் 9 வயதாக இருக்கும்போது வாள் சண்டைப் போட்டிகள் பற்றி அவர் முதல்முறையாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். பின்னர், அந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தால் கேரள மாநிலம் தலசேரியில் இருக்கும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் இணைந்தார். அங்கு 2008 முதல் 2015ம் ஆண்டு வரை சாகர் லாகு என்பவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாக முயற்சி செய்தபோது, அந்த முயற்சி கைகூடவில்லை. எட்டு ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பின்னர் அவரின் முயற்சி பலித்திருக்கிறது.

பொருளாதாரம் மட்டுமல்லாது சில நேரங்களில் சூழ்நிலைகளும் பவானி தேவிக்கு எதிராகவே இருந்திருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் முறியடித்து ஒலிம்பிக் கனவை நனவாக்கியிருக்கிறார். எட்டு முறை தேசிய சாம்பியனான பவானி தேவி, 14 வயதில் முதல்முறையாக துருக்கியில் நடைபெற்ற சர்வதேச வாள் சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால், போட்டி நடைபெறும் இடத்துக்கு 3 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக அவர் கறுப்பு அட்டை கொடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதேபோல், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றும், போதிய நிதி ஆதாரம் இல்லாததால் அவரால் பங்கேற்க முடியாமல் போயிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் பங்குபெற பவானி தேவி தகுதி பெற்றிருந்தார். ஆனால், இத்தாலி போய் வருவதற்கான பண வசதி அவரிடம் இல்லை. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட இயக்குநர் சசிக்குமார், உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி செய்து அவரை இத்தாலி போட்டியில் பங்குபெறச் செய்தார். இத்தாலி சென்று திரும்பியதும், தாயுடன் ஆட்டோவில் சசிக்குமாரின் அலுவலகத்துக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

சர்வதேச தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறினாலே டோக்கியோ ஒலிம்பிக்குக்குத் தயாராக முடியும் என்ற நிலை பவானிக்கு இருந்தது. அதனால், ஆசிய அளவில் நடக்கும் இரண்டு தொடர்களைக் குறிவைத்துப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், கொரோனா பெருந்தொற்று சூழலால் அந்தப் போட்டிகள் ரத்து செய்யப்படவே, ஹங்கேரி தொடர் மட்டுமே மீதமிருந்தது.

கொரோனா அதிகரிப்பால் வான்வெளிப் பயணத்துக்கு மொத்தமாகவே ஹங்கேரி தடை போட்டிருந்தது. ஆனால், வாள் சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள் சாலை வழியாக வரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என ஹங்கேரி அரசு அறிவித்திருந்தது. இத்தாலியின் லிவர்னோ நகரில் அந்நாட்டைச் சேர்ந்த நிகோலா ஜானோட்டியின் அகாடமியில் கடந்த சில மாதங்களாகப் பயிற்சியில் இருந்தார் பவானி.

டூட்டி சந்தைத் தோற்கடித்த திருச்சிப் பொண்ணு… யார் இந்த தனலட்சுமி?

அங்கிருந்து 10 மணி நேரம் சாலை மார்க்கமாக ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகருக்குப் பயணித்து அங்கு உலகக் கோப்பை வாள் சண்டை தொடரில் கலந்துகொண்டார். ஹங்கேரியில் கொரோனா மூன்றாவது அலை அச்சத்தால் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. அந்தவகையில், ஹங்கேரியில் நுழைந்ததும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஹோட்டல் அறையொன்றில் தங்கவைக்கப்பட்ட பவானி, போட்டி நடைபெறும் இடத்தைத் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தரவரிசையில் மாற்றம் ஏற்படும் முறையின் (Adjusted Official Ranking) கீழ் ஆசியா மற்றும் ஓசியானா பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறலாம். ஒலிம்பிக் போட்டிகளுக்கு பவானி தகுதிபெற, ஹங்கேரி உலகக் கோப்பை தொடரின் குழு விளையாட்டுப் பிரிவில் தென்கொரியா அணி முதல் நான்கு இடங்களுக்குள் வர வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில் தாமாகவே தகுதிபெற்றுவிடுவார். போட்டியை நடத்தும் ஹங்கேரியை காலிறுதிப் போட்டியில் எதிர்க்கொண்ட தென்கொரியா வெற்றிபெற்றது. இதன்மூலம் பவானி தேவி, ஆசியா மற்றும் ஓசியானா பிரிவில் இருந்து ஒலிம்பிக் வாள் சண்டை தனிநபர் பிரிவில் போட்டியிடத் தேர்வாகியிருக்கிறார். கோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ராகுல் டிராவிட் ஸ்காலர்ஷிப்பில் தேர்வாகியிருக்கும் பவானி தேவிக்குத் தேவையான நிதியுதவியை அந்த நிறுவனமே செய்து வருகிறது.

[infogram id=”371ea36c-0dd6-4be3-b7dc-2b59e555070f” prefix=”Fy0″ format=”interactive” title=”Bhavani Devi”]

வாள் சண்டை பயிற்சிக்காகக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான நாட்களில் குடும்பத்தை விட்டு பிரிந்தே இருந்திருக்கிறார் பவானி. முதலில் கேரள மாநிலம் தலசேரியிலும் பின்னர் இத்தாலியிலும் பயிற்சியைத் தொடர்ந்த பவானி, இன்று வரலாற்றுச் சாதனையைச் சொந்தமாக்கியிருக்கிறார்.

ஒலிம்பிக் தேர்வு குறித்து பேசிய பவானி தேவி, “ஒரு வழியாக என் மனது நிம்மதியடைந்துவிட்டது. ஒலிம்பிக்குக்குத் தேர்வானது முதல்படிதான். அங்கு பதக்கம் வெல்வதே எனது இலக்கு’’ என்று கண்கள் மின்னப் பேசியிருக்கிறார். சிவகங்கைச் சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரால் ஈர்க்கப்பட்டவர் பவானி தேவி.

2020 ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஒலிம்பிக்கிலும் ஜொலிக்கட்டும் பவானியின் வாள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top