சர்வதேச அரங்கில் மிகப்பெரிய தொடராக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. உலகின் பல மூலைகளில் இருந்தும் வரும் போட்டியாளர்களைச் சமாளித்து அங்கு பதக்க நாயகனாக வலம்வர வேறலெவல் திறமை வேண்டும். அப்படி வெற்றியாளர்களாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிலர், வாழ்க்கைப் பாதை திசைமாறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
அப்படி திசைமாறி சர்ச்சையில் சிக்கிய 5 ஒலிம்பிக் மெடலிஸ்டுகள் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
மைக்கேல் பெல்ப்ஸ்
அமெரிக்க ஒலிம்பிக் டீமில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர். நீச்சல் போட்டிகளின் பல பிரிவுகளிலும் கெத்து காட்டிய கில்லி. ஒலிம்பிக்கின் ஆல்டைம் வின்னராக ஜொலித்த மைக்கேல் பெல்ப்ஸ், இதுவரை 23 தங்கம் உள்பட 28 ஒலிம்பிக் மெடல்களை வென்றிருக்கிறார். இவர் மீது பலமுறை குடித்துவிட்டு வண்டி ஒட்டியது உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
க்ளேட் கெல்லர்
பெல்ப்ஸ் போலவே நீச்சல் போட்டியில் அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற க்ளேட் கெல்லர், இதுவரை இரண்டு பதங்களை வென்றிருக்கிறார். சமீபத்திய அமெரிக்கத் தேர்தலின்போது நடைபெற்ற கேப்பிட்டல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. அமெரிக்க அணியின் ஜெர்ஸியோடு வன்முறைச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டதற்கு ஆதரவாக வீடியோ, போட்டோ ஆதாரங்கள் பல இருப்பதால், ஒரு சில ஆண்டுகளை இவர் சிறையில் கழிப்பது உறுதி என்கிறார்கள்.
சுஷில் குமார்
இந்திய மல்யுத்தத் துறையின் அடையாளமாக சர்வதேச அளவில் பார்க்கப்பட்ட சுஷில், இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். இளம் வீரர்கள் பலருக்கு ரோல் மாடலாக இருந்த சுஷில், இப்போது 23 வயது மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸின் கஸ்டடியில் இருக்கிறார். டெல்லி மைதானம் ஒன்றின் வெளியே சுஷில் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சாகர் உள்பட 3 பேர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில், சாகர் ராணா உயிரிழக்கவே, சுஷில் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மீது கொலை வழக்குப் பாய்ந்திருக்கிறது.
ஆஸ்கர் பிஸ்டோரியஸ்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸை தடகள உலகில் பிளேட் ரன்னர் என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள். பாரா ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவுக்குப் பதக்கம் வென்றுகொடுத்த ஆஸ்கர், தனது கேர்ள் பிரண்ட் ரீவா ஸ்டீன்காம்பைக் கொலை செய்ததாக 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். வீட்டுக்குள் யாரோ ஒருவர் நுழைந்துவிட்டதாகக் கருதி தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகச் சொன்ன ஆஸ்கருக்கு, தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை விதித்தது. ஒரு ஆண்டுக்குப் பின்னர் பரோலில் வெளிவந்த அவர், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
டிம் மாண்ட்கோமரி
நூறு மீட்டர் தடகளத்தில் அமெரிக்காவின் வேகமான வீரர் என்று சாதனை படைத்திருந்த டிம் மாண்ட்கோமரியின் சாதனை மற்றும் ஒலிம்பிக் மெடல் என இரண்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்டது. காரணம், தனது பெர்ஃபாமென்ஸை அதிகரிப்பதற்காக தடை செய்யப்பட்ட பொருளை டிம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதே. அது மட்டுமல்லாது, கடந்த 2006ம் ஆண்டில் வங்கி மோசடி வழக்கு தொடர்பாகவும் டிம் கைது செய்யப்பட்டார்.
Also Read – யோ யோ டெஸ்ட் என்பது என்ன… வீராட் கோலியை சேஸ் செய்த 3 வீரர்களைத் தெரியுமா?