சாய்னா நேவால்… `இந்தியாவின் சண்டைக்காரி’ ஜெயித்த கதை!

பேட்மிண்டன் விளையாட்டில் உலக அளவில் இந்தியாவின் கொடி உயரப் பறக்கக் காரணமான வீரர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பவர் சாய்னா நேவல். எட்டு வயதில் பேட்மிண்டன் ராக்கெட்டைக் கையில் எடுத்த சாய்னாவின் பயணம் சர்வதேச டோர்னமெண்டுகளை எட்டியது எப்படி… சாய்னாவுக்கு ஊக்கம் கொடுத்த அவரது தாய் உஷாவின் ரோல் தெரியுமா… ஹரியானாவில் இருந்து ஹைதராபாத்தில் குடியேறிய பிறகு அவரது வாழ்வில் நடந்த முக்கியமான மாற்றம் தெரியுமா… சாய்னா நேவால் சாதித்தது எப்படி.. அவரோட கரியர் எங்க தொடங்குச்சு… இந்தியாவின் பேட்மிண்டன் ஸ்டார் சாய்னா நேவால் பத்திதான் இந்த வீடியோவில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

பெற்றோரும் இளம் வயதும்

ஹரியானாவின் ஹிஸார் பகுதியில் ஹர்விர் சிங் – உஷா ராணி தம்பதியினரின் மகளாக 1990 மார்ச் 17-ம் தேதி பிறந்தார். அங்கிருக்கும் சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பள்ளியில்தான் பெரும்பாலான ஸ்கூலிங்கை முடித்திருக்கிறார். இவரது தாய் உஷாராணி ஹரியானா மாநில அளவிலான பேட்மிண்டன் வீராங்கனை. சிறுவயதில் இருந்தே தாய் பேட்மிண்டன் விளையாடுவதைப் பார்த்து, தானும் அவரைப் போல் ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தோடு எட்டு வயதிலேயே ராக்கெட்டைக் கையில் எடுத்தார்.

சிறுவயதில்
சிறுவயதில்

ஒருகட்டத்தில் அவரது குடும்பம் ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்தது. மெஹ்திபட்டணம் பகுதியில் இருக்கும் St.Ann’s கல்லூரியில் பிளஸ் டூவை முடித்த சாய்னா, ஹைதராபாத் வந்தபிறகு பேட்மிண்டனில் பெரிய பிளேயர் ஆக வேண்டும் என கடினமாக உழைக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் பேட்மிண்டன் தவிர, அவருக்கு இன்னொரு விஷயத்திலும் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. அது தற்காப்புக் கலையான காராத்தே. அதில், அவர் brown belt வரை பெற்றிருக்கிறார்.

தொடக்க கால பயிற்சிகள்

ஹைதராபாத்தில் இருக்கும் Pullela Gopichand badminton academy-யில் அவர் பயிற்சி பெறத் தொடங்கினார். அவரது பேட்மிண்டன் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த அகாடமிதான். துரோணாச்சாரியார் விருது பெற்ற பயிற்சியாளர் எஸ்.எம்.ஆரிஃப் அவருக்குத் தொடக்க காலங்களில் பயிற்சி அளித்தார். அதன்பின்னர், 2014-ம் ஆண்டு வரை கோபிசந்த் அவருக்கு கோச்சிங் கொடுத்தார். கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்முடைய சமூகத்தில், பல்வேறு தடைகளைத் தாண்டி சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனையாக ஆவது சாதாரண விஷயமில்லை. ஆனால், அந்த விளையாட்டில் தான் ஒரு துருவ நட்சத்திரம் என ஜூனியர் லெவலிலேயே காட்டத் தொடங்கியிருந்தார் சாய்னா.

தேசிய, சர்வதேச கரியர்

2004-ம் ஆண்டு தொடங்கி தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 2004 மற்றும் 2005 என தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவரது கரியரில் 2006ம் ஆண்டு வென்ற Asian Satellite Badminton Tournament-ன் அண்டர்-19 சாம்பியன் பட்டம் மிகப்பெரிய பூஸ்டாக அமைந்தது. அந்தத் தொடரிலும் அதற்கு முன் எவரும் செய்யாத வகையில், தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை அடித்தார். 2009-ல் தனது முதல் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற அவர், 2008 லண்டன் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைத் தன்வசமாக்கிய அவருக்கு, வெற்றி ஒன்றே இலக்காக இருந்தது. ஒலிம்பிக் பதக்கத்துக்கான விதையையும் அங்கேயே அவர் விதைத்திருந்தார்.

பெற்றோருடன்
பெற்றோருடன்

2010-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் Wong Mew Choo-வை வீழ்த்தி தங்கம் வென்ற சாய்னா சொன்ன வார்த்தைகள் அவரது போராட்ட குணத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. ` மேட்ச் பாயிண்டில் நான் டௌனாக இருந்தது எனக்கு மிகப்பெரிய ஷாக்காக இருந்தது. இது மிகப்பெரிய போட்டி; வெற்றி ரொம்பவே முக்கியம். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், இங்கே இருந்தவர்கள் சாய்னா எப்படி தங்கம் வென்றார் என்பதை மறக்கவே மாட்டார்கள். அது ஒரு பெருமையான தருணம்’ என்று இளம் சாய்னா நெகிழ்ந்திருந்தார்.

அதன்பின்னர், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அவர், ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாம் இடத்தை 2009-லேயே எட்டிய அவர், 2015-ல் நம்பர் ஒன் வீராங்கனையாக உயர்ந்தார். இந்த இடத்தை எட்டிய முதல் இந்திய வீராங்கனை இவர்தான். அதேபோல், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோனுக்குப் (1980) பிறகு அந்த இடத்தைப் பிடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

பத்ம விருது
பத்ம விருது

அதேபோல், பேட்மிண்டனில் மதிப்புமிக்க தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் சூப்பர் சீரிஸ் டைட்டிலை வென்ற முதல் இந்தியர் சாய்னாதான். 2014 உபர் கப் சீரிஸில் சாய்னா தலைமையில் களம் கண்ட இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை. புள்ளிகள் அடிப்படையில் அந்த சீரிஸில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இந்தியாவின் பேட்மிண்டன் விளையாட்டு பிரபலமாக சாய்னாவின் கரியர் நிறையபேருக்கு இன்ஸ்பிரேஷனாகவே இருந்தது என்றே சொல்லலாம்.

திருமணம்
திருமணம்

சாய்னா, தனது சக வீரரான காஷ்யப்பைக் கடந்த 2018-ல் திருமணம் செய்துகொண்டார். அவரின் பயணத்தில் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கும் காஷ்யப், சாய்னாவுக்கு கோச்சாகவும் இருந்திருக்கிறார். 2018-ல் அவரது கோச்சிங்கின் கீழ்தான் ஆசியக்கோப்பை தொடரில் சாய்னா வெண்கலம் வென்றார். சாய்னாவின் கரியரில் அவரின் தந்தை ஹர்வீர்சிங், தாய் உஷாவின் பங்களிப்பும் அளவிட முடியாது. தனது கரியரில் 10 சூப்பர் சீரிஸ் டைட்டில்கள் உள்பட 24 சர்வதேச சாம்பியன் பட்டங்களை சாய்னா வென்றிருக்கிறார். இவரது பயணம் எத்தனையோ இந்திய சிறுமிகள், பெண்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியது. இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் கேல்ரத்னா உள்ளிட்ட விருதுகள் அளித்து இவரைக் கௌரவப்படுத்தியிருக்கிறது.

பிரணீதி சோப்ராவுடன்
பிரணீதி சோப்ராவுடன்

இவரது சுயசரிதை, Playing to Win: My Life On and Off Court என்கிற பெயரில் கடந்த 2012-ல் வெளியானது. அதேபோல், Saina என்கிற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாகவும் ரிலீஸாகியிருக்கிறது. அமோல் குப்தே இயக்கிய அந்தப் படத்தில், சாய்னா கேரக்டரில் பிரணீதி சோப்ரா நடித்திருந்தார். இளம் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் சொந்த மாநிலமான ஹரியானாவில் பேட்மிண்டன் அகாடமி அமைக்கும் திட்டத்தில் இருக்கிறார் சாய்னா….

வாழ்த்துகள் சாய்னா.. உங்கள் முயற்சிகள் வெற்றியடையட்டும்!

சாய்னா நேவால் கரியரில் முக்கியமான காலகட்டம்னு எதை நினைக்கிறீங்க… உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – உக்ரைனில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்ட 24 வயது பெண் விமானி – மஹாஸ்வேதாவைத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top