கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால், மக்கள் பலரும் பொருளாதார அளவில் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா நெருக்கடியால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டும் நோக்கில் `செக்மேட் கோவிட்’ என்ற பெயரில் கடந்த ஜூன் 13-ம் தேதி Chess.com – India பிரபலங்கள் விளையாடும் போட்டி ஒன்றை அறிவித்தது.
இதுதொடர்பாக Chess.com – India தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் அனைவரும் காத்திருந்த தருணம்! செஸ் விளையாட்டை அதிகம் விரும்பும் சூப்பர் ஸ்டார் அமீர்கான் மற்றும் முன்னாள் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தன் போட்டியில் விளையாட உள்ளனர். நீங்கள் நன்கொடைகளை அளித்து இந்த நிகழ்ச்சியை வெற்றிபெற செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். நடிகர் அமீர்கான் ஏற்கெனவே, முன்னாள் உலக சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்தனுடன் செஸ் விளையாடியுள்ளார். அமீர்கான் செஸ் விளையாட்டை அதிகம் விரும்புவதால் ஷூட்டிங்கின் இடைவேளைகளில் சக நடிகர்களுடன் அவர் பலமுறை செஸ் விளையாடியுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளனர்.
அமீர்கான் மட்டுமின்றி விஸ்வநாதன் ஆனந்துடன் கிச்சா சுதீப், ரித்தீஷ் தேஷ்முக், பாடகர் அர்ஜித் சிங், பாடகரும் பாடலாசிரியருமான அனன்யா பிர்லா, கிரிக்கெட் வீரர் சஹல், ஜியோமி இந்தியாவின் எம்.டி மனு குமார் ஜெயின், தயாரிப்பாளர்கள் சஜித் நதியாத்வாலா மற்றும் பார்சுரா படகண்ணயா ஆகியோரும் விளையாடியுள்ளனர். Chess.com – India யூ டியூப் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தப் போட்டியின் வழியாக கிடைக்கும் பணமானது அக்ஷயபாத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்ஷய பாத்ரா அறக்கட்டளையானது சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிவாரணங்களை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் சுமார் 128 மில்லியன் மக்களுக்கு உணவுகளை வழங்கியுள்ளது. நேற்று நடந்த போட்டி தொடர்பாக Chess.com – India தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிகழ்வை வெற்றியாக மாற்றிய அனைவருக்கும் நன்றி! இந்த நிகழ்வின் மூலம் பத்து லட்சத்துக்கும் அதிகமான தொகையை எங்களால் திரட்ட முடிந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
Also Read : ரூ.25 கோடி தங்கம், பணம் கொள்ளை; 6 பேர் கைது! – நொய்டாவைக் கலக்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ்
0 Comments