தீபிகா குமாரி

`கணவருடன் சேர்ந்து வில்வித்தையில் கலக்கிய தீபிகா!’ – யார் இவர்?

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியானது பாரீஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலப்பு பிரிவில் கணவன் மற்றும் மனைவியான அட்டானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி ஜோடி கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இந்த ஜோடியானது நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெப் வான் டென் மற்றும் கேப்ரிலா ஷ்லோஸர் ஜோடியை 5-3 என்ற கணக்கில் தோற்கடித்து சாதனையை படைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பெண்கள் பிரிவில் தீபிகா, கோமாலிக்கா மற்றும் அங்கிதா ஆகியோர் அடங்கிய இந்திய குழு, மெக்சிகோ குழுவை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. பெண்களுக்கான தனிநபர் பிரிவில் ரஷ்யாவைச் சேர்ந்த எலினாவை தீபிகா 6-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். இவ்வாறு உலகக் கோப்பை போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி உலக வில்வித்தை பெண்கள் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். யார் இந்த தீபிகா குமாரி?

கணவருடன் தீபிகா குமாரி

தீபிகா குமாரி, ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றில் 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி பிறந்தார். தீபிகாவின் தற்போதைய வயது 27. குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே வில்வித்தைக்கு பயிற்சி எடுக்கத் தொடங்கினார். ஆனால், அவரது பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையாக இருந்ததால் தீபிகாவின் கனவுக்கு உதவ முடியாத நிலை இருந்துள்ளது. தீபிகாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் கற்கள், மாம்பழங்கள் மற்றும் மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி பயிற்சி எடுத்துள்ளார். தீபிகாவின் உறவினர் ஒருவர் அவரை ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா வில்வித்தை அகாதமியில் சேர்த்து பயிற்சி பெற உதவியுள்ளார். இதனையடுத்து, 2006-ம் ஆண்டு முதல் அவருடைய புரொஃபஷனல் கெரியர் தொடங்கியது.

டெல்லியில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தீபிகா குமாரி சிறப்பாக விளையாடி புகழ்பெற்றார். தனிநபர் மற்றும் பெண்கள் அணி பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு பிரிவில் வெண்கலம் வெல்ல முக்கியமான நபராக விளங்கினார். உலகக் கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைத் தொடர்ந்து வாங்கினார். 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 30 வயதுக்குட்பட்ட மதிப்பு மிக்கவரின் பட்டியலில் இவரும் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தனது தடத்தைப் பதித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி அட்டானு தாஸ் என்பவரை காதலித்து மணந்துகொண்டார். இவரும் ஒரு வில்வித்தை வீரர் ஆவார். அட்டானு ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

தீபிகா குமாரி

கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து தங்கப் பதக்கம் வாங்கியது தொடர்பாக தீபிகா பேசும்போது, “வில்வித்தைப் போட்டியின் வெற்றியின் மூலம் நாங்கள் மேட் ஃபார் ஈச் அதர் என்று நினைக்கிறேன். அதனால்தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மூன்று தங்கப் பதக்கங்கள் வாங்கியது தொடர்பாக தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இதற்காக சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது மூன்று பிரிவுகளிலும் அவர் தங்கம் வென்றுள்ளதால் ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தங்க வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என பேசப்பட்டு வருகிறது.

Also Read : விடுதலைப் போராட்டத்தின் முதல் குரல் – மருது சகோதரர்களின் ஜம்புத் தீவு பிரகடனம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top