எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இவர் பாடிய, `நம் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்…’ பாடல் அ.தி.மு.க மேடைகளில் எழுபதுகள் தொட்டு இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இசையுலகுக்கு சீர்காழி கொடுத்த காலத்தில் அழியாத முத்து சீர்காழி கோவிந்தராஜன். வேற்றுமொழிப் பாடல்கள் தமிழக இசை மேடைகளில் அரங்கேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழிசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன். கோயில்களின் மணியடித்ததும் ஒலிக்கும் ரீங்காரம் போல வெண்கலக் குரலைக் கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் இசைமணி என்றே ரசிகர்களால் பெருமைப்படுத்தப்பட்டார்.
சீர்காழியில் 1933ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி பிறந்த கோவிந்தராஜன், 1988ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தனது 55வது வயதில் இயற்கை எய்தினார். இறக்கும்போது `உலகம் வாழ்க’ என்று முருகன் கோயிலைப் பார்த்து கூறியபடியே உயிர்விட்டார். வழக்கமாக 3 மணி நேரம் நடக்கும் தனது இசைக் கச்சேரியை மூன்று பகுப்புகளாகப் பிரித்து வைத்துக் கொள்வார் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன். முதல் ஒரு மணி சாஸ்த்ரீய சங்கீதம், இதை சாம்பார் சாதம் என்பார். அடுத்த ஒரு மணி நேரம் தமிழிசை பக்திப் பாடல்கள், இதை ரசம் சாதம் என்று சொல்லும் அவர், திரையிசைப் பாடல்கள் வரும் மூன்றாவது மணி நேரத்தை மோர் சாதம் என்று பகுத்து வைத்திருந்தார்.
சுருதி சுத்தமாகப் பாடும் சீர்காழி கோவிந்தராஜன், அனைத்து தரப்பு மக்களிடமும் இசையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பார். இதனால்தால், சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற அவரின் 75வது பிறந்தநாள் விழாவில், `தமிழில் பாடினால் தீட்டு என்றிருந்த காலத்தில் இசையால் தமிழ் வளர்த்தவர் சீர்காழி கோவிந்தராஜன்’ என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.
சீர்காழி கோவிந்தராஜனை அடையாளம் காட்டிய சம்பவம் ஒன்றுண்டு. மியூசிக் அகாடமி சார்பில் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் சங்கீதப் போட்டி ஒன்று நடைபெற்றது. சங்கீத மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த அந்த இசைப் போட்டிதான் சீர்காழி கோவிந்தராஜின் பெயரை இசையுலகில் உரக்கச் சொன்ன முதல் தருணம். அந்தப் போட்டியில் பல மாணவர்கள் கலந்துகொண்டு பாடிவிட்டு சென்றனர். இசைமணியும் மாணவர்களோடு கலந்துகொண்டு ஆர்வமாகப் பாடினார். ஒவ்வொரு மாணவரும் ஒரு கீர்த்தனம் பாட, சீர்காழியும் ஒரு கீர்த்தனத்தை மிகவும் சிறப்பாகவே பாடினார்.
போட்டி முடிந்ததும் ஜி.என்.பாலசுப்பிரமணியம் எழுந்து, `தனியாக ராக ஆலாபனை செய்யக் கூடியவர்கள் இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். அங்கு குழுமியிருந்த மாணவர்கள் அமைதியாக இருக்க, சீர்காழி கோவிந்தராஜன் எழுந்து தொடர்ச்சியாகப் பத்து நிமிடங்கள் ஆலாபனை செய்தார். அவரது ஆலாபனையைக் கேட்டு அகம் நெகிழ்ந்துபோன ஜி.என்.பி, சீர்காழியை அப்படியே கட்டியணைத்து உச்சிமோந்தார். மாணவப் பருவத்திலேயே இசை மீது பேரார்வம் கொண்டவராக விளங்கிய அவர், சுவாமிநாதப் பிள்ளையிடம் பெற்ற பயிற்சியால் பல்வேறு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.
விநாயகனே வினை தீர்ப்பவனே...’,
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..’, அறுபடை வீடுகொண்ட திருமுருகா’ போன்ற பக்திப் பாடல்கள் அவரின் வெண்கலக் குரலுக்குக் கட்டியம் கூறுபவை. அதேபோல், கர்ணன் படத்தில் இடம்பெற்ற
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’, காதலிக்க நேரமில்லை படத்தில் இடம்பெற்றுள்ள காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை’ எதிர்நீச்சல் படத்தின்
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவை. அதேபோல், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இவர் பாடிய, `நம் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்…’ பாடல் அ.தி.மு.க மேடைகளில் எழுபதுகள் தொட்டு இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.