மாரடைப்பு காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சென்னை இல்லத்தில் நடிகர் விவேக்குக்கு இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், `மாரடைப்பு ஏற்பட்டதால் நடிகர் விவேக் காலை 11 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் சுயநினைவில் இல்லை. உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அவரது நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரச ஆஞ்சியோ சிகிச்சை கொடுத்தனர். அவர் இப்போது எக்மோ கருவியின் உதவியோடு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராஜூ சிவசாமி, “நடிகர் விவேக்குக்கு இடதுபுற ரத்தக் குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஆஞ்சியோ சிகிச்சை கொடுத்து அவருக்கு இதயத்தில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. தற்போது எக்மோ கருவி உதவியுடன் விவேக்கின் உடல்நிலையை 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. 24 மணி நேரத்துக்குப் பிறகே உறுதியாக எதையும் கூற முடியும்’’ என்று தெரிவித்தார். கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக்குக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.