பொதுவாகவே தமிழ் சினிமாவுல ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள்ங்கிறது ரொம்ப சகஜம்தான். ஆனா, அப்படிப்பட்ட செண்டிமெண்ட் ஜானர்ல, இயல்பான கதாபாத்திரங்களையும் இயல்பான சிச்சுவேசன்களையும் வைச்சு, வலிந்து திணிக்கப்படாத செண்டிமெண்ட் காட்சிகளைக் கொண்ட படங்கள் ரொம்ப அரிதான் வரும். அப்படியொரு அரிதான செண்டிமெண்ட் படம்தான் ஆனந்தம். 2001 மே 25-க்கு வெளியாகி, நிஜமாகவே குடும்பங்கள் கொண்டாடிய ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு காரணமான 4 காரணங்கள் பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.
லிங்குசாமி
இயக்குநர் ஏ.வெங்கடேஷ்கிட்ட லிங்குசாமி அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தப்ப சல்மான் கான் நடிச்ச ஹம் ஆப் ஹே கோன் படம் பாத்திருக்காரு. அந்தப் படம் அவருக்கு ரொம்பவே பிடிச்சுப்போக இது மாதிரி நாமளும் ஒரு ஃபேமிலி படம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்காரு. அதுக்கப்புறம் தன்னோட சொந்த ஊருக்கு போறப்ப அம்மா, அண்ணன், அண்ணின்னு ஒவ்வொருத்தர் சொல்ற எல்லா விசயத்தையும் ஒரு பாக்கெட் டைரில நோட் பண்ண ஆரம்பிச்சிருக்காரு. மதுரையில பிறந்து கும்பகோனத்துல வளர்ந்த லிங்குசாமி வீட்டுல மளிகை கடைதான் பிரதான தொழில். அதே மாதிரி லிங்குசாமிக்கு 2 அண்ணன் ஒரு தம்பி, இந்த விசயங்களையும் தன் குடும்பத்துல நடந்த விசயங்களையும் அடிப்படையா வெச்சு அவர் எழுதுன கதைதான் ஆனந்தம். இந்தக் கதை ஒரு படமா ஆகுறதுக்கு முன்னாடியே எல்லோரையும் ஈர்க்க ஆரம்பிச்சுதுன்னுதான் சொல்லனும். இப்ப மாதிரி அப்ப இல்ல, இண்டஸ்டிரிக்குள்ள ஒருத்தர்கிட்ட ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்குன்னா அந்த விஷயம் அப்படியே பரவ ஆரம்பிச்சிடும். அப்படி இவர்கிட்ட ஒரு ஃபேமிலி ஸ்கிரிப்ட் இருக்குங்கிறதைப் பத்தி கேள்விப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் லிங்குசாமியைக் கூப்பிட்டு இந்தக் கதையை எனக்கு முறைப்படி தர்றியானு கேட்டிருக்காரு. ஆனா அவர், இல்ல சார் நானே டைரக்ட் பண்ணனும்னு இருக்கேன்னு சொல்லி மறுத்திருக்காரு. அதுக்கப்புறம் லிங்குசாமி இயக்குநர் விக்ரமன்கிட்ட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்துல வேலை பார்த்துட்டு திரும்ப தனியா படம் பண்ண முயற்சி பண்ணியிருக்காரு. அதுக்கப்புறம் விக்ரமன் இயக்கிய படமான வானத்தைப்போல கதையும் ஆல்மோஸ்ட் தன்னோட ஆனந்தம் கதை மாதிரி இருக்கவே ரொம்ப ஷாக் ஆகியிருக்காரு லிங்குசாமி. லிங்குசாமிகிட்ட இருந்துதான் விக்ரமன் கதையை திருட்டிட்டாருன்னுகூட அப்போ டாக் பரவ ஆரம்பிச்சுது. ஆனா எது எப்படியோ தான் இத்தனை வருசமா பாத்து பாத்து செதுக்குன கதை மாதிரியே ஒரு படம் வந்துருச்சு. அது பெரிய ஹிட்டும் ஆகிடுச்சு. ஆனாலும் லிங்குசாமி மனசை தளரவிடலை. இந்தக் கதை எங்க குடும்பத்துல நடந்தது. இதுல ஒரு ஜீவன் இருக்கு. இதை நான் சரியா எடுத்தா அந்த ஜீவன் இந்தப் படத்தை காப்பாத்தும்னு நம்பியிருக்காரு. அதன்படி அவர் திரும்பவும் முழுமூச்சா முயற்சி செஞ்சுதுதான் தன்னோடமுதல் படமா ஆனந்தம் படத்தை இயக்குனாரு லிங்குசாமி.
பொதுவா லிங்குசாமியோட திரைக்கதைகள்ல சினிமாவைத் தாண்டிய எதார்த்தம் கலந்த கமர்சியல் அம்சங்கள் நிறைய இருக்கும். அப்படி ஆனந்தம் படத்துலயும், பெரியவனே சின்னவனேன்னு கூப்பிட்டுறது, உளறுவாய் அப்பா கேரக்டர், திருடனுக்கு சாப்பாடு போடுறது, ஒரு ரூபாயை வெச்சு லவ் சீன்ஸ்னு படம் முழுக்க சின்ன அழகான தருணங்கள் நிறைய இருக்கும். ஒரு சீன்ல மம்முட்டி சாப்பிட்டிருக்கிட்டிருக்கும்போது ரம்பா பிரச்சனை பண்ணுறமாதிரி ஒரு சீன் ஆல் ஆர்டிஸ்ட் காம்பினேசன்ல வரும். அந்த சீனையெல்லாம் பல படங்கள் எடுத்த ஒரு முதிர்ச்சியான டைரக்டர் போல அவ்வளவு அழகா ரிதமிக்கா எழுதி இயக்கியிருப்பாரு லிங்குசாமி. அந்த அளவுக்கு ஸ்டிராங்கா இருந்த லிங்குசாமியின் எழுத்தும் இயக்கமும் ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமா அமைஞ்சுது. ஆனந்தம் படத்தில வர்ற மளிகைக்கடைக்கு திருப்பதி மளிகைன்னு பேர் வெச்சிருப்பாரு லிங்குசாமி. அந்த பேரைதான் பின்னாடி தான் ஆரம்பிச்ச புரொடக்சன் ஹவுஸுக்கு திருப்பதி பிரதர்ஸ்னு வைச்சாரு அந்த அளவுக்கு லிங்குசாமிக்கு இந்தப் படம் க்ளோஸ் டூ ஹார்ட்டா இருக்கு.
மம்முட்டி
முதல்ல மம்முட்டி நடித்த ரோலுக்கு முரளி, சரத்குமார், அர்ஜூன்னு பல ஹீரோக்களை மீட் பண்ணி இந்தக் கதையை சொல்லியிருக்காரு லிங்குசாமி. ஆனா அது எதுவும் மெட்டிரீயலைஸ் ஆகலை. கடைசியா மம்முட்டியா சந்திச்சு ஆனந்தம் கதையை அவர் சொல்ல, கதையைக் கேட்டு ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகியிருக்காரு மம்முட்டி. அதுமட்டுமில்ல, நானே உனக்கு புரோடியூசரும் தரேன்னும் சொல்லியிருக்காரு. இதுக்கு இடையில லிங்குசாமி ஆர்.பி. சௌத்ரிகிட்ட கதையை சொல்லி ஓகே பண்ணியிருக்காரு. அப்போ ஆர்.பி.சௌத்ரி, என்னயா மம்முட்டின்னு சொல்ற அவருக்கு இங்க தமிழ்ல்ல அவ்வளவு மார்க்கெட் இருக்காதேய்யானு லேசா தயங்கியிருக்காரு. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி, இந்தக் கதை கண்டிப்பா ஹிட் ஆகும். இந்தப் படத்துக்கு எனக்கு சம்பளம் வேணாம் அதுக்கு பதிலா மலையாள தியேட்டரிக்கல் ரைட்ஸை எனக்குக் கொடுத்திடுங்கன்னு சொல்லியிருக்காரு. அந்த அளவுக்கு மம்முட்டி இந்த கதையையும் லிங்குசாமியையும் நம்பியிருக்காரு. அதுக்கேத்தமாதிரி படத்துலயும், லிங்குசாமி தன்னோட பெரியண்னனை மனசுல வெச்சு எழுதுன திருப்பதிசாமிங்கிற கேரக்டர்ல மம்முட்டி தனக்கே உரித்தான அலட்டல் இல்லாத அழகான நடிப்பை கொடுத்திருப்பாரு. அதுமட்டுமில்லாம லிங்குசாமிக்கு ஆனந்தம் முதல் படம்ங்கிறதால முதல் ரெண்டு நாள் ஷூட்டிங்ல சின்ன சின்ன குழப்பம் இருந்திருக்கு. அதைக் கவனிச்ச மம்முட்டி, எல்லோரையும் ஸ்பாட்டை விட்டு வெளியில அனுப்பிட்டு, லிங்குசாமியையும் அவரது அசிஸ்டெண்ட்ஸையும் மட்டும் வெச்சுக்கிட்டு தன்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல இருந்து ஒரு அட்வைஸ் கொடுத்திருக்காரு. அதாவது, முதல்ல, அன்னன்னைக்கு என்ன சீன் எடுக்கப்போறீங்களோ அதை நீயும் உன் அஸிஸ்டென்ஸூம் சேர்ந்து ரஃபா ஒரு ஸ்டேஜிங் பண்ணிப் பார்த்திடுங்க, இது உனக்கு மட்டுமில்ல உன் டீமுக்கும் ஒரு கிளாரிட்டி கொடுக்கும்னு சொல்லியிருக்காரு அட்வைஸ் கொடுத்திருக்காரு. அன்னைக்கு மம்முட்டி கொடுத்த அந்த அட்வைஸை லிங்குசாமி இன்னைக்கு வரைக்கும் சின்சியரா ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்காரு.
துணை கதாபாத்திரங்கள்
மம்முட்டிக்கு அடுத்தபடியா நடிச்சா முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ்னு மிக சிறந்த கேஸ்டிங் இந்தப் படத்துல அமைஞ்சிருக்கும். ஒவ்வொரு நடிகரையும் சந்திச்சு கதை சொல்லும்போது, அய்யோ நமக்கு வேலை கம்மியா இருக்கேன்னு அவங்க நினைச்சுடக்கூடாதுன்னு கதை சொல்லிக்கிட்டிருக்கும்போதே அவங்க இம்ப்ரெஸ் ஆகுறமாதிரி அந்த கேரக்டரை நல்லா டெவலப் பண்ணி சொல்வாராம் லிங்குசாமி. இப்படி ஒவ்வொருத்தரையும் இம்ப்ரெஸ் பண்றதுக்காகவே சேர்த்த சின்ன சின்ன விஷயங்கள் அந்த கேரக்டர்களை மட்டுமில்லாம திரைக்கதையையும் அழகாக்கியிருக்கு. இதுல சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னன்னா முதல்ல பெரியண்ணன் கேரக்டர்ல நடிக்க ஒருதடவை முரளிகிட்ட கதை சொன்னப்போ , அப்போ முரளி, அந்த ரெண்டாவது தம்பிக்குலாம் அவ்வளவு வெயிட் இருக்கவேணாம் அதை கொஞ்சம் கம்மி பண்ணிடுங்கன்னு சொல்லியிருக்காரு. பின்னாடி அவரே அந்த ரெண்டாவது தம்பியா நடிக்க வந்தப்ப, சார் அப்போ நான் உங்க பேச்சைக் கேட்டு இந்த கேரக்டரை டம்மி பன்ணியிருந்தா என்னாகியிருக்கும் பாத்தீங்களான்னு கிண்டலா சொன்னாராம் லிங்குசாமி. அப்பாஸ் நடிச்ச கேரக்டர்ல முதல்ல சூர்யாதான் நடிக்க இருந்தாரு. கதைக் கேட்டு சூர்யாவுக்கும் அந்த கேரக்டர் பிடிச்சிருந்திருக்கு. அதேநேரத்துல அவர் நந்தா படம் கமிட் ஆனதால அவரால இந்தப் படத்துல நடிக்க முடியாம போயிருக்கு.அதேமாதிரி தேவயானி நடிச்ச கேரக்டர்ல, முதல்ல ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா இவங்கக்கிட்டலாம் பேச்சுவார்த்தை நடந்திருக்கு அதுக்கப்புறம்தான் தேவயானி இந்தப் படத்துக்குள்ள வந்தாங்க. இப்படி இந்தப் படத்துக்காகவே அழகா அமைஞ்ச கேஸ்டிங்கையும் அவங்களோட அழகான பங்களிப்பையும் மிகப்பெரிய பலம்னு சொல்லலாம்.
Also Read – பாடகர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் – தேவனின் சினிமா பயணம்!
எஸ்.ஏ.ராஜ்குமார்
இந்தப் படத்துக்காக எஸ்.ஏ.ராஜ்குமார் தந்த இசைக்கு பலம் அதிகம். பல்லாங்குழியின் வட்டம் பாத்தேன், என்ன என்னவோ, ஆசை ஆசையாய் இருக்கிறதே மாதிரியான சூப்பர் ஹிட் பாடல்கள் ஒரு பக்கம்னா, படத்தோட பின்னணி இசையும் வேற லெவல்ல இருக்கும். இந்தப் படத்துல வர்ற அவருக்கே உரித்தான லாலல்லா பிஜிஎம்மை அவ்வளவு சீக்கிரம் நீங்க மறக்கமுடியாது. அந்த அளவுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் தன் பங்குக்கு இந்தப் படத்துக்கு பலம் சேர்த்திருப்பாரு.
ஆனந்தம் படத்தை தெலுங்குல சங்கராந்திங்கிற பேர்ல வெங்கடேஷ் நடிப்புல தமிழ்ல தயாரிச்ச ஆர்.பி.சௌத்ரியே தயாரிச்சு அங்கயும் இந்தப் படம் பெரிய அளவுல ஹிட் ஆச்சு. ஆனந்தம் படத்துக்கப்புறம் லிங்குசாமி, ரன், சண்டக்கோழி, பையான்னு ஆக்சன் ரூட் எடுத்தாலும் இன்னைக்கும் அவர்கிட்ட இருந்து ஆனந்தம் மாதிரியான படத்தை எதிர்பார்க்குற கூட்டம் இருக்கதான் செய்யுது. அந்த அளவுக்கு லிங்குசாமி ஆனந்தம் படம் மூலமா தந்த டேஸ்ட் மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிபோயிருக்கு. இன்னைக்கும் இந்தப் படம் கே டிவியில ஓடும்போது நீங்க சும்மா தெருவுல நடந்துப்போனீங்கன்னா குறைஞ்சது ஒரு வீட்டுல இருந்தாவது ஆனந்தம் படம் ஓடுற சத்தத்தை நீங்க கேட்கமுடியும். அந்த அளவுக்கு இந்தப் படம் தமிழ் குடும்பங்கள்ல ஒண்ணா கலந்திருக்கிறதுதான் இந்தப் படத்தோட மிகப்பெரிய வெற்றி.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.