சக மனிதர்களை சிரிக்க வைப்பது என்பது மிகச்சிறந்த கலை. அதுவும் சமூகம் சார்ந்த கருத்துகளை நகைச்சுவையில் புகுத்தி சிரிக்க வைப்பது என்பது எல்லோருக்கும் கைவரக்கூடியது அல்ல. அந்த வகையில் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் விவேக்.
இயக்குநர் கே. பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக், திரைத்துறையில் நகைச்சுவைக் கலைஞனாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்கள், பாடல்கள் என தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000 ஆண்டுகளில் நடிகர் வடிவேலுவுக்கு இணையாக முன்னணி நகைச்சுவை கலைஞராகத் திகழ்ந்தார். இந்திய அரசு அவருடைய பங்களிப்புகளை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. டாக்டர் பட்டம், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சமூகம் சார்ந்த கருத்துக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி தன்னுடைய பாதையை அமைத்துக்கொண்டவர். ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கோடு பயணித்த நடிகர் விவேக் இதுவரை 33.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
நடிகர் விவேக்கின் வழிகாட்டுதலின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பிற சமூக ஆர்வலர்களும் மரங்களை நட்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் விவேக்கின் திடீர் மரணம் அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களின் மூலம் நாம் சுவாசித்துக்கொண்டிருப்போம்’ என்று அவருடைய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து, “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் சூரி, “உங்களால் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் அல்ல… நீங்கள் உருவாக்கிய விழிப்புணர்வால் நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்களும் உங்களுக்காகக் கண்ணீர் விடுகின்றன… சென்று வாருங்கள் விவேக் சார்” என்று கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ், ஆத்மிகா, விக்ரம் பிரபு, டி. இமான், தேவி ஸ்ரீ பிரசாத்,மோகன் லால், துல்கர் சல்மான், உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகின்றனர். “எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!!” என்ற் அவர் இட்ட பதிவு அவருக்கும் பொருத்தமாக இருக்கும்.
RIP விவேக் சார்…