கவுண்டமணினு சொன்னதும் அவரோட கவுண்டர்கள்தான் முதல்ல நம்ம நினைவுக்கு வரும். இன்னைக்கு இருக்குற பல காமெடியன்களுக்கு கவுண்டர் லைப்ரரினா அது கவுண்டமணிதான். அவரோட காமெடிகளைச் சும்மா பார்த்தாலே போதும் நாமளும் நம்மகூட இருக்குறவங்க, சாதாரணமா பேசும்போது அவர் டயலாக்கை சொல்லி கலாய்க்க ஆரம்பிச்சுருவோம். கவுண்டமணி – செந்தில், கவுண்டமணி – சத்யராஜ், ஏன், கவுண்டமணி – விஜய் காம்போகூட செமயா வொர்க் அவுட் ஆகியிருக்கும். சின்ன சின்ன விஷயங்கள்தான் அவர் காமெடியோட மிகப்பெரிய அஸ்திவாரம்னே சொல்லலாம். அப்படிப்பட்ட காமெடி லெஜன்ட் ஆஃப் ஸ்கிரீன்ல சொன்ன நாய் ஜோக் தெரியுமா? சட்டை காமெடி ஒண்ணு இருக்கு… அதை கேட்ருக்கீங்களா? சத்யராஜை, கவுண்டமணி வைச்சு செஞ்ச கதை இருக்கே… அது வேற லெவல்ல இருக்கும்..! இதெல்லாம் சொல்றேன் முழுசா படிங்க!
நாய் ஜோக்
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், விசாரணை, யுத்தம் செய், காக்கி சட்டை, விக்ரம் வேதானு ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சவரு, இயக்குநர் இ.ராம்தாஸ். ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தோட ஆடியோ லாஞ்ச்ல ராம்தாஸ் பேசும்போது கவுண்டமணியை குறிப்பிட்டு பேசுவாரு. என்ன சொல்லுவாருனா, “உலகத்துல கவுண்டமணினா. கவுண்டமணி மட்டும்தான். எனக்கு கல்யாணம் 89-ல நடந்துச்சு. கல்யாண பத்திரிக்கை வைக்க அவர் வீட்டுக்கு போய்ருந்தேன். ஹால்ல உட்கார்ந்துட்டு, ‘வா ராம்தாஸ்’ன்னாரு. உட்கார்ந்தேன். பக்கத்துல ஒரு நாய் உட்கார்ந்துருந்துச்சு. இதுக்கு என்னங்க பேருனு கேட்டேன். அதுக்கு கவுண்டமணி, ‘அதுக்கென்ன பேரு. நாய்தான். அதுக்கு ஒரு பேரு வைச்சு. அதை வேற நியாபகம் வைச்சு கூப்டுனு கிடக்கணுமா?”னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிப்பாரு. அந்த மேடையே கொஞ்ச நேரத்துக்கு ரணகளமா மாறி இருக்கும். அவரு கல்யாணத்துக்கு வந்ததும் ராம்தாஸ் மனைவி கவுண்டமணியைப் பார்த்து சிரிச்சிட்டாங்களாம். காரணம் என்னனா. நாய் ஜோக்கை அவங்ககிட்டயும் மனுஷன் சொல்லியிருக்காரு. சரியான, தக் லைஃப் இதெல்லாம்.
சத்யராஜ் சம்பவம்
சீமானோட வீரநடை படத்துல கவுண்டமணியும் சத்யராஜும் நடிச்சிட்டு இருந்துருக்காங்க. அந்த சமயத்துல சத்யராஜ்க்கு அவ்வளவா மார்க்கெட் இல்லை. படங்கள் எதுவுமே அவர்க்கு வரலை. அவர் கையில இருந்த கடைசி படம் வீரநடைதான். அந்தப் படம் ஷூட்டிங் அப்போ ஒருநாள் ஒரு டைரக்டர் சத்யராஜ்க்கு கதை சொல்ல வர்றேன்னு சொல்லியிருக்காரு. அதைக்கேட்டு சத்யராஜ் தலைகால் புரியாம குதிச்சிருக்காரு. “என்னை சீக்கிரம் விட்ருங்க”னு சீமான்கிட்டலாம் சொல்லியிருக்காரு. கவுண்டமணிக்கிட்டவும் பந்தா பண்ணியிருக்காரு. உடனே கவுண்டமணி அவரைக் கூப்ட்டு “சத்யராஜ்… எப்படி இருந்தாலும் அந்தக் கதைய நீங்க வேண்டாம்னு சொல்லப்போறதில்லை. ஏன்னா, நம்ம கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் எவனும் வரலை. எப்படினாலும் கதவை சாத்தி தாழ் போட்டுட்டுதான் கதை கேக்க போறீங்க. ஏன்னா, அவன் எந்திரிச்சு போய்ட்டா நமக்கு படம் இல்லை. அதுனால எதுக்கு இவ்வளவு பில்டப்”னு கேட்ருக்காரு. இதை 49 ஓ ஆடியோ லாஞ்ச்ல சத்யராஜ் சொல்லுவாரு. அவராலயே சிரிப்பைக் கண்ட்ரோல் பண்ண முடியலை. அப்போ, அஸிஸ்டண்ட் டைரக்டர் வந்து ஷார்ட் ரெடினு சொல்லியிருக்காரு. உடனே கவுண்டமணி, “வர முடியாது. போ”ன்றுக்காரு. “சார், ஷார்ட் ரெடி சார்”னு திரும்பவும் சொல்லியிருக்காரு. “வரமுடியாதுயா. இருக்குறது ஒரேபடம். அதையும் நாங்க நடிச்சு தீர்த்துட்டோம்னா. அடுத்து எங்கப்போறது”னு கத்தியிருக்காரு, மனுஷன்.
சட்டை ஜோக்
சட்டை ஜோக்குக்குலாம் கவுண்டமணியைத் தவிர அப்படி ஒரு கவுண்டரை வேற யாராலும் போட்டுருக்க முடியாது. இதுவும் சத்யராஜ் 49 ஓ ஆடியோ லாஞ்ச்ல சொன்னதுதான். சத்யாராஜ் சொல்லும்போது, “ஷூட்டிங் முடிஞ்ச அடுத்தநாள் டைரக்டர்லாம் ரஷ் போட்டு பார்ப்பாங்க. ஒரே ஒருநாள் ஷூட் எடுத்துட்டு, அடுத்தநாள் தெய்வமகன் சிவாஜி மாதிரி செட்டுக்கு அவர் நடந்து வந்தாரு. உடனே, கவுண்டமணி ‘அவன் நடையைப் பாருங்க. ஒரே ஒருநாள் ரஷ் பார்த்துட்டு பண்றதை. இந்தப் படம் ஓடுமா, ஓடாதானு கண்டுபிடிக்க முடியுமா? மொத்தப் படத்தைப் பார்த்தாலே தெரியமாட்டேங்குது. இதுல ஒருநாள் ரஷ் பார்த்துட்டு இவன் நடையப் பாருங்க” அப்டின்னாரு. அந்த டைரக்டர் பேண்ட கொஞ்சம் மேல தூக்கி இன் பண்ணுவாரு. அதுக்கு இவரு, “இவனுக்கு சட்டைக்கு அரை மீட்டர் எடுத்தாபோதும், பேண்டுக்குதான் மூணு மீட்டர் எடுக்கணும்”னு சொல்றாரு. இதெல்லாம் கேட்டு ஏற்கெனவே சொன்னேன்ல… அதேதான் மொத்த ஸ்டேஜ், ஆடியன்ஸ் எல்லாரும் சிரிப்புதான். எப்படிதான் இப்படிலாம் யோசிக்கிறாரோ?!
ஆடியோ லாஞ்ச் அலப்பறைகள்!
கவுண்மணி பண்ண பல அட்டகாசங்கள் எல்லாம் ஆடியோ லாஞ்ச் நடக்கும்போது அவர்கூட நடிச்ச நடிகர்கள், அவரோட ஃப்ரெண்ட்ஸ், கூட இருக்குறவங்க சொல்லிதான் நமக்குத் தெரியவரும். இல்லைனா, அதுக்கு வாய்ப்பே இல்லை. சந்தானம் சொல்லுவாரு, கவுண்டமணி அந்த காலத்து அஜித்குமார் அப்டினு. ஏன்னா, அந்தக் காலத்துல ஆடியோ ஃபங்ஷன், சக்ஸஸ் மீட்னு எங்கயும் கவுண்டமணி போக மாட்டாராம். படத்துல மட்டும்தான் அவரைப் பார்க்க முடியுமாம். மேடைல இருக்குற, பேசுற ஒருத்தரையும் கவுண்மணி விடமாட்டாரு. யார் பேசுனாலும், என்னப் பேசுனாலும் காலாய்தானாம். கவுண்டமணி கலாய்ச்சத சந்தானம் வரிசையா சொல்லும்போது, “சீனுராமசாமி பேசும்போது அந்தக் காலத்துலனு பேசுனாரு. உடனே, அவரு ‘என்ன இவன் கட்டபொம்மன் காலத்துல இருந்தவன் மாதிரி. ஜீன்ஸ் பேண்ட்லாம் போட்ருக்கான்’னாரு. அடுத்து வேல்முருகன் சார் வந்து, ‘நான் கவுண்டமணி சார்கூட நடிச்சிருக்கேன். எல்லாரும் கைதட்டுங்க’ன்னாரு. அதுக்கு உடனே அவரு, ‘என்ன இவன் வித்தைக் காட்றவன் மாதிரி கைதட்டுலாம் கேட்டு வாங்குறான்’ன்னாரு. இப்படி ஒருத்தரையும் அவர் விட்டு வைக்கலனு சொல்லுவாரு.
சந்தானத்தைப் போல சிவகார்த்திகேயன் ஒரு மேடைல பேசும்போது, “லைஃப்ல ரொம்ப கஷ்டமான நேரம் எதுனா… கவுண்மணி சார் பக்கம் உட்கார்ந்திருந்த இந்த 5 நிமிஷம்தான். இப்படி திரும்புறதுக்குள்ள ஒரு பஞ்ச் அடிச்சு முடிச்சிருவாரு. ‘இந்தப் படத்துல லவ் இல்லை. மக்கள் வருவாங்களா?’ அப்டினு எங்கிட்ட கேட்டாரு. அதுக்கு சத்யராஜ் சார், ‘அதுனால கண்டிப்பா வருவாங்க’ அப்டின்னாரு. உள்ள வரும்போது சார்க்கு கைகொடுத்துட்டு உட்காருங்க சார்னு சொன்னேன். உடனே அவரு, ‘நான் உட்கார்ந்துட்டேன். நீங்க உட்காருங்க’ அப்டின்னாரு. ஆத்தி, போறது வரைக்கும் வாயத் தொறக்கக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்”னு சொல்லுவாரு.
கவுண்டமணி பத்தி பேசும்போது எல்லாரும் சொல்ற பொதுவான ஒரு விஷயம். ‘அவர் சொல்ற, கலாய்க்கிற எந்த விஷயத்தையும் வெளியில சொல்ல முடியாது’ அப்டின்றதுதான். விஜய், சிவகார்த்திகேயன் ரெண்டு பேருமே சத்யராஜ்கூட நடிக்கும்போது சத்யராஜ் சாரோட ஆஃப் ஸ்க்ரீன் சம்பவங்களை அதிகமா கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பாங்களாம். சரி, கவுண்டமணியோட எந்த டயலாக் உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு கமெண்ட்ல மறக்காமல் சொல்லுங்க!
Also Read: `ஒரே படம்… மொத்த நெகட்டிவிட்டியும் க்ளோஸ்’ – மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ மேஜிக்!