பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கரீம்நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்ட நடிகை சௌந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி விபத்தில் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 120 படங்களில் நடித்திருக்கும் சௌந்தர்யாவின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நடிகை சௌந்தர்யா
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருக்கும் கஞ்சிகுண்டே எனும் சிறிய கிராமத்தில் 1972ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பிறந்தார் கே.எஸ்.சௌம்யா என்ற சௌந்தர்யா. தந்தை கே.எஸ்.சத்தியநாராயணா கன்னட திரையுலகில் கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர். பெங்களூரில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த சௌந்தர்யா, முதல் ஆண்டு படிப்போடு வெளியேறினார். 2003ம் ஆண்டு தாய்வழி உறவினரான ஜி.எஸ்.ரகு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
1992ம் ஆண்டு கந்தர்வா எனும் கன்னடப் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான சௌந்தர்யா, அதே ஆண்டில் ரைத்து பத்ரம் தெலுங்குப் படத்திலும் நடித்தார். 1992ம் ஆண்டு தொடங்கி 2004ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பலமொழிகளிலும் நடித்த அவர், டோலிவுட்டில் சாவித்திரிக்குப் பிறகு பிரபலமான நடிகையாக இருந்தார். ரஜினியின் அருணாச்சலம், படையப்பா படங்கள் மூலமும், கமலின் காதலா காதலா படத்தின் மூலம் சௌந்தர்யா தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தமிழில் கார்த்திக்குடன் நடித்த பொன்னுமனி படம் இவரது முதல் படமாகும். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம் ஆகியோருடன் சௌந்தர்யா நடித்திருந்தார்.
விமான விபத்து
தனது கரியரின் உச்சத்தில் இருந்த 2004-ல் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை சௌந்தர்யா, அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்காக பிரசாரம் செய்தார். தற்போதைய தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகை சௌந்தர்யா பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, தனது சகோதரரும் எழுத்தாளருமான அமர்நாத், பா.ஜ.க-வைச் சேர்ந்த ரமேஷ் கடம் ஆகியோருடன் தனி விமானத்தில் கரீம் நகர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரை ஒட்டியுள்ள ஜக்கூர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா 180 வகை விமானத்தில் அவர்கள் புறப்பட்டன. அக்னி ஏரோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தை ஜோய் பிலிப்ஸ் என்ற விமானி ஓட்டினார்.
விமானம் புறப்பட்டு 100 அடி உயரம் மேலெழுந்தநிலையில், மேற்கு நோக்கி சென்று அருகில் இருந்த வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்த விமானத்தில் இருந்த நான்கு பேரும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியிருந்தனர். 2004ம் ஆண்டு காலை 11.05 மணிக்குப் புறப்பட்ட விமானம் ஒரு சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. அப்போது வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் பணியிலிருந்த இரண்டு பேரில் ஒருவரான பி.என்.கணபதி என்பவர், `விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பே தள்ளாடியபடியே வானில் அலை பாய்ந்தது’ என்று சொன்னார்.
பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரசாரத்துக்காக அந்த விமானம் வாடகைக்கு எடுக்கப்படவில்லை. மாறாக, அங்கு விமானப் பயிற்சி கிளப் ஒன்றை நடத்திவந்த பெண் தோழி ஒருவரின் வேண்டுகோளுக்கேற்ப, சௌந்தர்யாவை ஹைதராபாத்தில் இறக்கிவிடுவதற்காக விமானம் புறப்பட்டது என்று விமான உரிமையாளர் தரப்பில் அப்போது சொல்லப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை அப்போது எழுப்பியது. முன் அனுமதி எதுவுமின்றி தேர்தல் பணிகளுக்காக இதுபோன்ற பயணங்களைத் தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு வெளியான சந்திரமுகியின் கன்னட வெர்ஷனான ஆப்தமித்ரா படமே சௌந்தர்யாவின் கடைசி படமாக அமைந்து விட்டது. அவர் உயிரிழந்தபோது, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டிருந்தார் சௌந்தர்யா.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென பெங்களூரில் 3 பள்ளிகளை சௌந்தர்யா நடத்தி வந்தார். அவர் உயிரிழந்தபின்னர், தாயார் மஞ்சுளா `அமர்சௌந்தர்யா வித்யாலயா’ என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
விமானத்தால் ஏற்பட்ட சர்ச்சை
அதேபோல், விமானத்தின் ஸ்திரத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், புதுச்சேரியைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கப்பட்ட அந்த விமானம் நல்லநிலையில் இருந்ததாக உரிமையாளர்கள் கூறினர். அதேபோல், விமானத்துக்கான லைசென்ஸும் 2004 ஜூன் மாதம் வரை இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
அதேபோல், விமான நிலையத்தை ஒட்டிய பிஸியான தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகப்படிய உணவகங்கள் இருந்தன. அந்த உணவகங்களை நாடி வரும் பறவைகளால் விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். பறவைகளைப் பார்த்த விமானி, விமானத்தை வேறுபக்கம் திருப்ப முயற்சித்திருக்கலாம். மிகவும் குறைவான உயரத்தில் பறந்ததால் விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
2004 ஆண்டு ஏப்ரல் 10-17 இடைப்பட்ட தேதிகளில் மட்டும் உலக அளவில் 4 செஸ்னா விமானங்கள் விபத்துக்குள்ளாகின. அதேபோல், நடிகை சௌந்தர்யா பயணித்த செஸ்னா 180 ரக விமானம் 1955 தயாரிக்கப்பட்டது. 7,000 மணி நேரங்களுக்கு மேல் வானில் பறந்திருந்த அந்த விமானம் 1991ம் ஆண்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல்களும் அப்போது வெளியாகி பெரும் சர்ச்சையானது.