ரொம்ப ரொம்ப சிம்பிளான கதை..இன்னும் சொல்லப்போனால் ஒரே வரியில் கதையே சொல்லிடலாம். அப்படியான ஒரு கதையை வைத்துக் கொண்டு ஆடியன்ஸை சிரிக்க வைக்க, அழவைக்க, ஏன் அவர்களை ஆச்சர்யப்படுத்த முடியும் என்று இயக்குநர் ராதாமோகன் நிரூபித்த ஃபீல் குட் படம் மொழி. 2007 பிப்ரவரி 23-ம் தேதி ரிலீஸான மொழி படம் தமிழ் சினிமாவுக்குப் பல காரணங்களால் முக்கியமான படமாகப் பதிவாகியிருக்கு… அப்படியான 4 காரணங்களைத்தான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
தமிழ் சினிமாவுல முக்கியமான ஒரு மார்க்கெட்டிங் உத்தியைத் தொடங்கி வைச்சதுல மொழி முதல் படம்… அது என்ன தெரியுமா.. அதேமாதிரி, படத்தோட 100-வது நாள் வெற்றிவிழாவுல படத்துல வர்ற அர்ச்சனா மாதிரியே நிஜவாழ்வில் ஜெயித்த ஒருவரைக் கூப்பிட்டு கௌரவிச்சாங்க.. அவங்களப் பத்தியும் சொல்றேன். வீடியோவை முழுசா பாருங்க.
* `நோ’ கிளிஷேக்கள்
வலிமையான ஹீரோ கிடையாது, அரிவாள் அட்டாக்குகள் இல்லை; முக்கியமா ரத்தம் இல்ல… சத்தமா பேசுற வில்லனுக்கு வேலையே கிடையாது. ஓவர் அழுகை டிராமா கிடையாது. அதேமாதிரி, பஞ்ச் டயலாக்குகளோ, ஐட்டம் சாங்குகள் என கவர்ச்சிகள் எதுவும் இல்லை. தமிழ் சினிமா அதுவரை பார்த்த இப்படியான பல விஷயங்கள் எதுவும் இல்லாமலேயே ஒரு கமர்ஷியல் சினிமாவை எடுக்க முடியும்னு மொழி மூலமா புது வரையறையை எழுதியிருப்பார் ராதா மோகன். Infact தமிழ் சினிமா மியூசிஸியன்ஸா பிருத்திவிராஜ், பிரகாஷ்ராஜ் கேரக்டர்கள் ஒரு இடத்தில், `ஆனாலும், தமிழ் சினிமாவுல பண்ணையார் பொண்ணுங்க பாவம்டா… எல்லாப் படத்துலயும் பிச்சைக்காரங்களா பார்த்து லவ் பண்றாங்க’னு நேரடியாவே கலாய்ச்சிருப்பாங்க.
* கதாபாத்திரங்களும், அவர்களின் நடிப்பும்
அர்ச்சனா, கார்த்திக், விஜி, ஷீலா, அனந்த கிருஷ்ணன், புரஃபஸர் ஞானப்பிரகாசம், பிரீத்தி, ஜானு-னு இந்தப் படத்தோட மெயின் கேரக்டர்களை விரல் விட்டு எண்ணிடலாம். அந்த அளவுக்கு ரொம்பவே சின்ன காஸ்டை வைச்சுக்கிட்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேலான படத்தை நமக்கு போரடிக்காமக் கொடுத்து அசத்தியிருப்பாங்க. படத்தோட பலமே வாய் பேசமுடியாத, காது கேட்க இயலாத அர்ச்சனா கேரக்டர். அந்த கேரக்டர்ல ஜோதிகாவோட அலட்டல் இல்லாத நடிப்பு தேசிய விருது வரைக்கும் பேசப்பட்டுச்சு. இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா, பெண் கதாபாத்திரங்களை மையமா வைச்சு எடுக்குற படங்கள்ல மிகச்சில படங்கள்லதான் ஹீரோக்களோட நடிப்பு பேசப்படும். அந்த வரிசைல தமிழ் சினிமாவுல முக்கியமான படம் மொழி. கார்த்திக்காக வரும் பிருத்விராஜின் நடிப்பு பரவலான கவனம் பெற்றதோட, பாராட்டுகளையும் அள்ளுச்சு. அதேமாதிரி, அவரோட ஃப்ரண்டா ஒன்லைனர்ல பொளந்து கட்டியிருப்பாரு பிரகாஷ் ராஜ். இதேமாதிரி, புரஃபஸர் ஞானப்பிரகாசமா வர்ற எம்.எஸ்.பாஸ்கர், அனந்தகிருஷ்ணனா வர்ற பிரம்மானந்தமும் ஆடியன்ஸ் மனசுல நிறைஞ்சுடுவாங்க. தமிழ் சினிமாவில் இந்தப் படத்தில் மட்டும்தான் பிரம்மானந்தம் என்ற கலைஞனை முடிஞ்ச அளவுக்கு சரியாப் பயன்படுத்தியிருப்பாங்க.
* உறுத்தாத வசனங்கள்
வசனங்கள், இந்தப் படத்தோட ஆகப்பெரும் பலம்னே சொல்லலாம். பிரகாஷ் ராஜ் அடிக்கும் ஒன்லைனர்கள் யாரோட மனசையும் உறுத்தாமல் பகடி செஞ்சிருக்கும். `நீ பேச்சுலர்னு சொன்னா வீடுதான் தரமாட்டேங்குறாங்க… நான் பேச்சுலர்னு சொன்னா, பொண்ணே தர மாட்டேங்குறாங்கடா’ வசனம் இது மிகச்சிறந்த உதாரணம்னு சொல்லலாம். அதேமாதிரி, மியூசிக் பத்தி ஜோதிகா கண்கள் விரிய விவரிக்குற இடம் எல்லாம் வேற லெவல். `உங்க எல்லாருக்கும் மியூசிக்னா சந்தோஷம். என்னைப் பொறுத்தவரை மியூசிக் இன்னொரு மொழி. எனக்கு இந்தி தெரியாது. சைனீஷ் தெரியாது. அதேமாதிரி மியூசிக் தெரியாது. ஆனா, எனக்குத் தெரிஞ்ச ஒரு மொழி உங்க யாருக்கும் தெரியாது. மௌனம்’னு ஜோதிகா பேசுற மொமண்ட் ஒரு அழகான கவிதை மாதிரி அவ்ளோ அம்சமா இருக்கும். மகன் இறந்ததால், 1984-லேயே நின்றுபோன மெமரியோடு அலையும் புரஃபஸர் ஞானப்பிரகாசத்திடம், பிருத்விராஜ் உடைந்து அழுதபடியே பேசும் வசனம் பலர் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கும். இப்படி எல்லா எமோஷன்களுக்குமான வசனங்களும் கச்சிதமாப் பொருந்திப் போயிருக்கும்.
* உண்மைக்கு நெருக்கமான கதை
ஒரு பெரிய அழிவு, வில்லன்கிட்ட இருந்து உலகத்தைக் காப்பாத்துற ஹீரோக்கள், பயங்கர ஹீரோயிஸம்னு எந்தவொரு அலட்டலும் இல்லாத, ஆடியன்ஸ் ஈஸியா தங்களோட ரிலேட் பண்ணிக்குற மாதிரியா கதை. உண்மைக்கு மிக நெருக்கமானது. தன்னோட வீட்டு பக்கத்துல இருந்த ஒரு பொண்ணைப் பார்த்து இன்ஸ்பைர் ஆகித்தான் இந்த கதையையே எழுதுனதா டைரக்டர் ராதாமோகனே ஒரு பேட்டில சொல்லிருப்பார். அப்படியான ஸ்டோரி லைனும் நல்லாவே வொர்க் அவுட் ஆகவே, படம் விமர்சன ரீதியில் மட்டுமல்லாம, கமர்ஷியலாவும் பெரிய சக்ஸஸ் கொடுத்துச்சு.
முன்னாடி சொல்லிருந்த மாதிரி, கோலிவுட்டில் படம் ரிலீஸானபிறகு கொஞ்ச நாட்கள்லயே வீட்டுக்கே கொண்டுபோகுற டைரக்ட் ஹோம் மார்க்கெட் உத்தியை முதன்முதலா அறிமுகம் செஞ்சது மொழி படம்தான். படத்தோட தயாரிப்பாளரான பிரகாஷ்ராஜ், மோசர்பேர் நிறுவனத்தோட கைகோர்த்து மொழி படம் சிடிகள் ரூ.28 மற்றும் டிவிடிகள் ரூ.34 என்கிற விலையில் அறிமுகப்படுத்துனாரு. அதேமாதிரி, ஈ.சி.ஆர் மாயாஜால்ல நடந்த மொழி படத்தோட 100-வது நாள் வெற்றிவிழாவில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறையோட ஆலோசகரா வேலை பார்த்துட்டிருந்த பார்வை மாற்றுத்திறனாளி வழக்கறிஞரான அஞ்சலி அரோராவை தலைமை விருந்தினராக் கூப்பிட்டு மரியாதை செஞ்சது மொழி படக்குழு… செமல்ல!
மொழி படத்துல உங்களோட மனசுக்கு நெருக்கமான சீன் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!