மார்பகப் புற்றுநோய்
இன்று, பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் பெரும்பான்மையானவை மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றது. மார்பகப் புற்றுநோய் வெறும் பெண்களுக்கானது மட்டுமல்ல, ஆண்களுக்கும் இது வரலாம். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிலிருந்து மீண்டு, உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 5௦ சதவிகிதம் மட்டுமே உள்ளது. அதனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் உலகமெங்கும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய சுகாதாரப் பதிவேட்டின்படி இந்தியாவில் பரிசோதனைக்காக மட்டும் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையானது 2018-2019 ஆண்டுகளில் 3.5 கோடியிலிருந்து 6.6 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் மார்பகப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. மார்பகப் புற்றுநோய் குறித்து, இன்றளவில் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
அறிகுறிகள் – எப்படி கண்டுபிடிப்பது?
மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளில் முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும், கட்டிகளும்தான். வலி இருக்கிறதோ, இல்லையோ எத்தகைய மாற்றங்கள் இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல மார்பகத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால் உடனடியாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதிப்பானது ஆரம்பக் காலங்களில் கண்டறியப்பட்டால் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். உயர்தர தொழில்நுட்பத்தின் மூலம் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முறைகளுக்கு அதிக செலவாகிறது. உலகில் உள்ள 90 சதவிகிதம் பெண் நோயாளிகளுக்கு இன்றளவும் இந்நோயானது கையாலே தொட்டுணர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது பரிசோதனை முறையானது மேமோகிராஃபி (Mammography) என்னும் அதிநவீன கருவியைக்கொண்டு செய்யப்படுகிறது. இந்நோயைக் கண்டறிவதற்காக ஒரு தனிநபர் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இலவச பரிசோதனை
இந்த செலவைக் குறைக்கும் விதமாக மக்களுக்கு இலவசமாக மேமோகிராஃபி கருவி மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பில்ராத் மருத்துவமனை மற்றும் ஜி.பி.ஆர் ஸ்டீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்பரிசோதனை திட்டத்தை நடத்துகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பில்ராத் மருத்துவமனையின் Chennai Turns Pink என்ற பெயரில் ‘மொபைல் மேமோகிராஃபி’ நடமாடும் மருத்துவ முகாமை கொளத்தூரில் கடந்த அக்டோபர் 16 அன்று தொடங்கி வைத்தார். இதற்காகக் கைதேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு, ஒன்று அமைக்கப்பட்டு அக்டோபர் 31 வரை இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் தினமும் 100 பேருக்குப் பரிசோதனை செய்யப்படும். 1,000 ரூபாய் மதிப்புள்ள மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை இலவசமாக வழங்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறித்தும், நோயைக் கண்டறியும் முறை குறித்தும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். துல்லியமான பரிசோதனைகள் மற்றும் மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 15,000 மக்கள் பயனடைவார்கள். இம்முகாமை ஜிபிஆர் ஸ்டீல்ஸ் நிறுவனம் ஒருங்கிணைக்கிறது.

இத்திட்டத்தின் தொடக்க விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பில்ரோத் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் கல்பனா ராஜேஷ், துணைத்தலைவர் டாக்டர் தீபா, ஜிபிஆர் ஸ்டீல்ஸ் அசோக் ராட்டி, லேடர் கமர்சியல்ஸ் செழியன், சேகர், இளங்கோ, நாகராஜ், அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.