Madurai

ஒரு எல்இடி விளக்குக்கு ரூ.21,666 செலவு… மதுரையை அதிரவைத்த ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் 20 வாட்ஸ் எல்இடி தெருவிளக்கு பொருத்த ரூ.2,304.50 செலவானதாக மாநகராட்சி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்து மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு செய்துவருகிறது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 12 நகரங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மதுரையில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டி பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை மாநகராட்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கார்த்திக் அனுப்பியிருந்தார்.

71 நாட்களுக்குப் பிறகு அவரின் கேள்விகளுக்கு மாநகராட்சி சார்பில் பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. குறிப்பாக தெருவிளக்கு அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த கேள்விக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடி நிதியில் தெருவிளக்கு அமைக்க ரூ.30.25 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 78 வார்டுகளில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை மொத்தம் 30,337 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்ட பதிலில் கூறப்பட்டிருக்கிறது. இதில், 20 வாட்ஸ் விளக்குகள் பொருத்துவது வரையில் ஒரு தெருவிளக்குக்கு ரூ.2,304.50 செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெருவிளக்குகள் பொருத்த ரூ.30.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 30,337 விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 20 வாட்ஸ் தெருவிளக்குகளின் எண்ணிக்கை 18,380. இதற்காக செலவிடப்பட்ட தொகையைக் கணக்கிட்டால் ரூ.4.23 கோடி வருகிறது. மாநகராட்சியின் கணக்குப்படியே மீதமுள்ள 11, 957 விளக்குகளுக்கு ரூ.26.02 கோடி செலவிடப்பட்டிருப்பது தெரியவருகிறது. மாநகராட்சி அளித்த தகவலின்படி 20 வாட்ஸ் விளக்குகள் தவிர 40, 60, 90, 120 மற்றும் 200 வாட்ஸ் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த விளக்குகள் ஒன்றைப் பொருத்துவதற்கான செலவு ரூ.21,666 செலவிடப்பட்டிருப்பதாக மாநகராட்சி கூறும் கணக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top