கொளத்தூரில்தான் நான் போட்டியிடுவதாக இருந்தது. ஒருவரை மோதித் தோற்கடிப்பதை விட, என் மக்களுக்காக நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்பதே முக்கியம் – சீமான்
நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 117 பெண், 117 ஆண் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அவர் பேசுகையில், “அரசியலை லாபம் பார்க்கும் தொழிலாக மாற்றிவிட்டனர். கட்சிகளை குடும்பச் சொத்துகளாக மாற்றிவிட்டார்கள். ஆனால், மாற்றத்துக்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. பெண்களுக்கு 50 சதவிகிதம் கொடுப்பது கடமை. நாங்கள் விரும்பும் மாற்றத்தை எங்களிடமிருந்தே தொடங்குகிறோம்.
அரசு ஊழியர்கள், அமைச்சர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கும் வகையில் சட்டம் இயற்றுவோம். அரசுப் பள்ளி, கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் வரும் சூழலை வென்றெடுப்போம். நாம் தமிழர் ஆட்சியில் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கினால் அடுத்த நாளே ராஜினாமா செய்வேன். வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது. தொடர்ந்து பயணிப்போம். இது ரத்தம் சிந்தாத போர். தற்காலிகத் தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை. விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும்; விவசாயி செத்தால் அது நாடல்ல… சுடுகாடு. 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு நாம் தமிழர் ஆட்சியில் ஓய்வூதியம் வழங்கப்படும். படித்தவர்களும் விவசாயம் செய்ய வேண்டும்’’ என்றார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து ஒரு பேட்டியிலும் சீமான் பேசியிருந்தார். இந்தநிலையில், அவர் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய சீமான், “கொளத்தூரில்தான் நான் போட்டியிடுவதாக இருந்தது. ஒருவரை மோதித் தோற்கடிப்பதை விட, என் மக்களுக்காக நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்பதே முக்கியம். அந்தத் தொகுதி மக்களிடம் ஓட்டைக் கேட்பதைவிட நாட்டைக் காப்பது எனக்கு முக்கியமானதாக இருப்பதால், சீமானாகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று சீமான் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “நாம் தமிழர் மேடையில் பாரதிராஜா பேச வேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால் நான் தமிழன். ஆகையால் இந்த மேடையில் பேசுகிறேன். என்னுடைய நீண்டநாள் கனவு. நான் அரசியல்வாதியல்ல. நான் யார் அழைத்தாலும், ஏன் சீமான் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன். இந்த மண்ணை மண்ணின் மைந்தன் ஆள வேண்டும் அல்லது இந்த மண்ணின் மகள் ஆளவேண்டும்.
சீமானுக்கென்று ஒரு தனி சக்தி இருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. சீமானை சிறுபிள்ளை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் தீப்பொறி. இருண்டு கிடக்கும் இந்தத் தமிழகத்துக்கு வெளிச்சம் சீமான் மூலம் வரும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மேடையில் நிற்கிறேன். வேறு எந்த ஆசையும் இல்லை’’ என்று பேசினார்.