தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள், வாக்களிப்பதற்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வர சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஓட்டுப்போட ஊருக்குப் போறீங்களா…
வாக்களிக்க நீங்கள் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறீர்களா… நீங்கள் நோட் பண்ண வேண்டிய முக்கியமான விஷயங்கள்…
குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்று வரத் திட்டமிட்டிருந்தால், உங்கள் பயணம் குறித்து முன்னரே திட்டமிட்டுவிடுவது சாலச் சிறந்தது.
சொந்த வாகனங்களில் ஊருக்குப் போய்த் திரும்ப முடிவு செய்திருந்தால், உங்கள் வாகனத்தை மெக்கானிக்கிடம் காட்டி டயர், என்ஜின் ஆயில், என்ஜினின் செயல்பாடு போன்றவற்றை செக் செய்துகொள்ளுங்கள்.
குழந்தைகளோடு பயணம் என்றால், நீங்கள் பகல் நேரத்தில் பயணத்தைத் திட்டமிடுவது சிறந்தது. உணவு, எரிபொருள் என பயணத்துக்குத் தேவையானதை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்குத் தேவையான உடைகள், மருந்து, மாத்திரைகளை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பொதுப்போக்குவரத்தில் ஊருக்குப் போகத் திட்டமிட்டிருந்தால், முடிந்தவரை முன்பதிவு செய்து பயணப்படுவது நல்லது. பேருந்தா அல்லது ரயிலிலா என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துவிட்டால், கடைசி நேர தவிப்புகளைத் தவிர்க்கலாம்.
குறிப்பிட்ட தேதியில் நீங்கள் முன்பதிவு செய்திருந்த பேருந்து, புறப்படும் இடம் குறித்துத் தெளிவாகக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். முன்பதிவு செய்யும்போதே ஏறுமிடத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், முடிந்தவரை வசிக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் பகுதியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்றுவிடுங்கள். அதேபோல், வீட்டிலிருந்து வாடகைக் கார் அல்லது மாநகரப் பேருந்தில் செல்வதாக இருந்தால், அதையும் அடிப்படையாக வைத்து நேரத்தைக் கணக்கிட்டு செயல்படுங்கள். கடைசி நேர எதிர்பாராத தாமதத்தால் பேருந்தை மிஸ் பண்ணாமல் இருக்க இது உதவும்.
பண்டிகைக் காலம் போல் சென்னையின் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உங்கள் ஊருக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் ஏற வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு பயணத்தைத் திட்டமிடுங்கள்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்க்குடன் பயணிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல், சானிட்டைசர் அல்லது சோப் மூலம் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏசி வசதியுடன் கூடிய பேருந்து என்றால் சொந்தமாக நீங்களே பெட்ஷீட் எடுத்துச் செல்லுங்கள்.
ரயிலில் பயணமென்றால் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், ரயில் புறப்படும் நேரத்துக்கு முன்பாகவே ரயில் நிலையம் சென்று உங்கள் இருக்கையை சரிபார்த்து செட்டில் ஆகுங்கள். ஆரோக்கிய சேது மொபைல் ஆப் உங்கள் செல்போனில் பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
முக்கியமான விஷயம்… உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, அடையாள ஆவணங்கள் போன்றவற்றை வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டிவரும். ஒருவேளை உங்களது ஆவணங்கள் சென்னையில் இருந்தால், ஊருக்குப் போகும்போது மறக்காம எடுத்துட்டுப் போங்க மக்களே.
அதேபோல சென்னைக்கு ரிட்டர்ன் பயணத்துக்குமான திட்டமிடுதலோடு உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.