stalin

சிபிஐ, விசிகவுக்கு 6 தொகுதிகள்… காங்கிரஸ், மதிமுகவுக்கு எத்தனை… திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என பிஸியாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமக-வும் திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகேவும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமையை ஏற்று கூட்டணியை இறுதி செய்திருக்கின்றன. இந்தசூழலில் திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம் என்கிறார்கள். இதனால், 2016 தேர்தலைப் போல அதிக இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க திமுக முன்வரவில்லை. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் தொடக்கம் முதலே திமுக கறார் காட்டியதாகச் சொல்கிறார்கள்.

தி.மு.க – வி.சி.க ஒப்பந்தம்

திமுக கூட்டணியில் காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலா மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த ஒன்றாம் தேதியே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, ஐயூஎம்எல் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் என ஒப்பந்தமாகியது. அதேபோல், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர் இழுபறி நீடிக்கிறது. இரண்டு இலக்கங்களில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதிகளைக் கேட்டதுதான் பிரச்னை என்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், திமுக ஒதுக்க முன்வந்த 6 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றது. இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் இருதரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதேநேரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

மதிமுக

வைகோ – ஸ்டாலின்


மதிமுக எதிர்பார்க்கும் தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வரவில்லை என்கிறார்கள். திமுகவுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு மதிமுகவுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. இது வைகோவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள். திமுக என்னதான் சொல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற மனநிலைக்கு மதிமுக வந்துவிட்டது. இதையே வைகோவும் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். அவர் கூறுகையில், `திமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. விசிகவை திமுக கௌரவமாக நடத்தியிருக்கிறது’ என்றார்.

காங்கிரஸ்

கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியிலேயே அதிக மனவருத்தத்தில் இருப்பது காங்கிரஸ்தான். கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. அதில் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. திமுக ஆட்சியமைக்க முடியாததற்கு கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதே காரணம் என்றும் அப்போது பேசப்பட்டது.

இந்தசூழலில் திமுகவிடம் 27 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. ஆனால், முதலில் 18 தொகுதிகள்தான் என்று கறார் காட்டியது திமுக. அதன்பின்னர் இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தையில் திமுக 23 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறது. ஆனால், 27 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதுபோன்ற சூழலை இதற்கு முன்பு வரை சந்தித்ததே இல்லை என ஒருகட்டத்தில் கண்கலங்கியிருக்கிறார். பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயம் சென்றபோது திமுக தரப்பில் உரிய வரவேற்புக் கொடுக்கவில்லை என ராகுல் காந்திக்கு கே.எஸ்.அழகிரி இ-மெயிலில் புகார் கூறியிருப்பதாகவும் கதர் கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள். இரு கட்சிகள் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் மார்ச் 6ம் தேதி மாலையில் இறுதியாக இருக்கிறது.

ஸ்டாலின்

“கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுத்துவிட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் மனசங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சிகளுக்கும் 234 தொகுதிகளிலும் அமைப்புரீதியாக இருப்பார்கள். காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, மதிமுகவாக இருந்தாலும் சரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என எல்லாக் கட்சிகளுக்கும் எல்லா தொகுதிகளிலும் நிர்வாகிகள் இருப்பார்கள்’’ என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். அவரது பேச்சு தி.மு.க கூட்டணியின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

திருச்சியில் 7-ம் தேதி நடைபெறும் `விடியலுக்கான முழக்கம்’ மாநாட்டுக்கு முன்பாகவே கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடிக்க தி.மு.க திட்டமிட்டிருக்கிறது. தொகுதிப் பங்கீடு முடிவுக்குப் பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top