Social Media

சமூக வலைதளங்களுக்கு இந்தியா வகுத்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?

சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா செய்தி நிறுவனங்களுக்கென இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு (Intermediary Guidelines and Digital Media Ethics Code) என்ற பெயரில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சமூக வலைதளங்கள் சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல், பெருந்தொற்று காலம் போன்ற அசாதரண சூழல்களில் இவற்றின் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படும் நிலையும் இருக்கிறது. இந்தசூழலில் சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கொண்டுவந்தது. இந்த விதிமுறைகளைப் பின்பற்ற இந்தியாவில் இயங்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு 3 மாத கால அவகாசத்தையும் (மே 26,2021) மத்திய அரசு கொடுத்திருந்தது.

Social Media

புதிய விதிமுறைகள் – முக்கிய அம்சங்கள்

மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி, சமூக வலைதள நிறுவனங்கள் குறைதீர்க்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இந்தக் குழுவில் ரிசைடிங் ஆஃபிஸர், சீஃப் கம்ப்ளெய்ன்ஸ் ஆஃபிஸர் மற்றும் நோடல் தொடர்பு அதிகாரி என மூன்று பேர் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். மேலும், மாதந்தோறும் பெறப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ரிப்போர்டை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும். இதுதவிர, தவறான நோக்கத்தில் அல்லது வதந்திகளைப் பரப்பும் நோக்கில் பரப்பப்படும் மெசேஜ்களை முதன்முதலில் அனுப்பிய நபர் குறித்த தகவலை அரசு கேட்டால் சமூக வலைதள நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ் சமூக வலைதள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கிடைக்காது.

ஐ.டி சட்டத்தின் 79-வது பிரிவு சொல்வதென்ன?

ஐ.டி சட்டத்தின் 79-வது பிரிவின்படி, இடைநிலையாளர்களாகக் (intermediary) கருதப்படுபவர்கள் மீது வழக்குப் பதிய முடியாது. உதாரணமாக, வன்முறை பரப்பும் நோக்கில் சமூக வலைதளங்களில் தவறாக ஒரு செய்தி ஏ என்பவரிடமிருந்து பி என்பவருக்கு அனுப்பப்பட்டால், அந்த செய்தியைப் பகிர உதவிய ஒரே காரணத்துக்காக குறிப்பிட்ட சோஷியல் மீடியாவை நீங்கள் குற்றவாளியாக்க முடியாது. அந்த பாதுகாப்பை இந்த சட்டப்பிரிவு வழங்குகிறது. அதாவது, செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் தளமாக மட்டும் செயல்படும்போது குறிப்பிட்ட சமூக வலைதளத்தை நீங்கள் குற்றம் சுமத்த முடியாது.

அதேபோல், சர்ச்சைக்குரிய ஒரு செய்தி, வீடியோ அல்லது புகைப்படம் போன்றவை குறித்து அரசுக்கோ அல்லது அது தொடர்பான விசாரணை அமைப்புகளுக்கோ சமூக வலைதள நிறுவனங்கள் தெரிவிக்காவிட்டால், இந்த சட்டப்பிரிவின் கீழ் பாதுகாப்புக் கோர முடியாது. மேலும், குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கண்டெண்டுகள் ஆதாரங்களாகும் நிலையில், அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ செய்தாலும் இந்த சட்டப்பிரிவின் கீழ் பாதுகாப்புப் பெற முடியாது.

Social Media

புதிய விதிமுறைகள் ஏன் வகுக்கப்பட்டன?

சமூக வலைதளங்களுக்கென புதிய விதிமுறைகள் வகுக்கப்பட காரணமாக இருந்தது 2004-ம் ஆண்டு டெல்லி போலீஸ் பதிவு செய்த வழக்கு ஒன்றே. 2004-ல் ஐஐடி மாணவர் ஒருவர் bazee.com என்ற இணையதளத்தில் ஆபாச படம் ஒன்றை விற்பனைக்கு என்ற டேக்லைனில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான புகாரில், அந்த மாணவர் மட்டுமல்லாது, இணையதள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அவ்னிஷ் பஜாஜ், மேனேஜர் ஷரத் டிகுமார்டி ஆகியோரையும் டெல்லி குற்றப்புலனாய்வு போலீஸார் கைது செய்தனர். நான்கு நாட்கள் திகார் ஜெயிலில் கழித்தபின்னர் அவ்னிஷ், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில், `குறிப்பிட்ட வீடியோவைப் பதிவிட்ட மாணவர், அதை வாங்க முயற்சித்தவர்கள் இடையிலான பரிமாற்றத்துக்குத் தங்கள் இணையதளம் எப்படி பொறுப்பேற்க முடியும்? அவர்கள் இருவர் இடையிலான பரிமாற்றத்தில் நேரடியாகத் தங்களுக்குத் தொடர்பில்லை’ என அவ்னிஷ் பஜாஜ் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த வீடியோ குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதால், ஐ.டி சட்டம் 85-ன் கீழ் பஜாஜ் மற்றும் அவரது நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட முகாந்திரம் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடையீட்டாளர் என்கிற நிலையில் இணையதளம் மீது குற்றம்சாட்ட முடியாது என வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை அடுத்தே, ஐ.டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 79-வது பிரிவு சேர்க்கப்பட்டது.

தற்போதைய நிலை என்ன?

இப்போதைய சூழ்நிலையில் சோஷியல் மீடியா நிறுவனங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவை இதுவரை சீஃப் கம்ப்ளையன்ஸ் ஆஃபிஸரை (CCO) நியமிக்கவில்லை. ஐ.டி சட்டத்தின் 4ஏ பிரிவின்படி, சமூக வலைதள நிறுவனங்கள் சி.சி.ஓ-வை நியமிப்பது கட்டாயம். குறிப்பிட்ட நிறுவனங்கள் வகுக்கப்பட்ட வழிமுறைகள், விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் ஒரே இரவில் சூழல் மாறிவிடாது. சோசியல் மீடியா யூஸர்ஸ் வழக்கம்போல் அந்த பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்த முடியும். உடனடியாக அவற்றுக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்பில்லை.

Social Media

என்ன சிக்கல்?

உதாரணமாக, வாட்ஸப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ ஒருவர் தவறான தகவலையோ அல்லது வன்முறையைத் தூண்டும் நோக்கிலோ ஒரு செய்தியைப் பதிவிட்டால், புதிய விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நபரை மட்டுமல்லாது, அந்த நிறுவனங்களின் அதிகாரிகளையும் அரசால் கைது செய்ய முடியும். ஐ.டி சட்டத்தின் பிரிவு 69ஏ-வின் கீழ் இது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதே சமூக வலைதள நிறுவனங்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இந்த புதிய சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கூறி வாட்ஸ் அப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

Also Read – நெட்ஃபிளிக்ஸ் பத்தி இந்த 6 விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top