Club House என்பது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளம்தான். ஆனால், என்ன ஒரு வித்தியாசமென்றால் ஆடியோ வழியாக மட்டுமே இதில் கலந்துரையாட முடியும்.
Club House வரலாறு
கொரோனா முதல் அலையின்போது கடந்த 2020-ல் கிளப் ஹவுஸ் அமெரிக்க மக்களிடம் பிரபலமடையத் தொடங்கியது. முழுக்க முழுக்க ஆடியோவை மட்டுமே மையப்படுத்திய இந்த ஆப்பில் பயனாளர்கள் யாரும் எந்த டாபிக்கைப் பற்றியும் ஆடியோ டிராப் இன் – ஆடியோ டிராப் அவுட் மூலம் குழுவாகக் கலந்துரையாட முடியும். ட்விட்டர் ஸ்பேசஸ் வசதிக்கெல்லாம் கிளப் ஹவுஸ்தான் முன்னோடி. அடிப்படையில் ஒரு மீட்டிங் அல்லது ஹேங்க் அவுட்டைப் போன்றதுதான் இது. ஆனால், ஆடியோ வடிவில் மட்டுமே நீங்கள் கருத்துகளைப் பரிமாறக் கொள்ள முடியும்.
கிளப் ஹவுஸின் பாப்புலாரிட்டிக்கு மற்றொரு முக்கியமான காரணம் Invite – Only சிஸ்டம்தான். மற்ற சமூக வலைதளங்களைப் போல ஆப்பை டவுன்லோடு பண்ணி இதில், உடனடியாக உங்களால் லாக் இன் பண்ண முடியாது. 2020-ல் ஆப்பிள் ஐ ஓஎஸ் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகமான கிளப் ஹவுஸ், கடந்த மார்ச்சில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனாக வெளிவந்தது. அதையடுத்து, கடந்த மே மாதத்தில் இந்தியா உள்பட பல நாடுகளிலும் ஆண்ட்ராய்டு வெர்ஷனும் அறிமுகமானது.
Club House-ல் என்னதான் பண்ணலாம்?
கொரோனா முதல் அலை முன்னெப்போதும் இல்லாத வகையில் லாக்டௌன் என்ற புதிய நடைமுறையை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய அவர்களுக்கு கிளப் ஹவுஸ் புதிய வரவாக இருந்தது. கிளப் ஹவுஸ் மூலம் எதாவது ஒரு டாபிக்கை எடுத்துக்கொண்டு அதிகபட்சமாக 5,000 பேர் ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும். பரஸ்பரம் கருத்துகளை ஆடியோ வழியாக மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். பாட்காஸ்டைப் போலத்தான் இதுவும் என்றாலும், யூஸரின் பிரைவசிக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து கிளப் ஹவுஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தனித்துவமான இன்வைட் – ஒன்லி என்ற கிளப் ஹவுஸின் ஸ்ட்ரேட்டஜி செமையா வொர்க் அவுட் ஆகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் கிளப் ஹவுஸ் இன்வைட்டுக்காகக் குவிந்துவரும் போஸ்டுகள் அதற்கு சாட்சி சொல்லும். ஒருமுறை நீங்கள் கிளப் ஹவுஸுக்குள் நுழைந்துவிட்டால், அதிலிருக்கும் `Reach and Features’ வசதி மூலம் யாருக்கு வேண்டுமானாலும் இன்வைட் கொடுக்க முடியும்.
எல்லாவற்றையும் விட கிளப் ஹவுஸின் திடீர் பாப்புலாரிட்டிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஒரு செஷன் கிளப் ஹவுஸ் ரீச் உச்சம்தொட உதவியது என்றே சொல்லலாம். `விண்வெளி பயணம், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது, செயற்கை அறிவு, கொரோனா தடுப்பூசி’ என வெரைட்டியான டாபிக்குகள் பற்றி தனது கருத்துகளை கிளப் ஹவுஸின் ஒரு ரூமில் வெளிப்படையாகப் பேசவே, இது டாக் ஆஃப் தி அமெரிக்காவானது. கிளப் ஹவுஸின் விளம்பரம்தான் இது என்றும் ஒருபக்கம் விமர்சிக்கப்படுகிறது.
யார் தொடங்கியது?
பால் டேவிசன் மற்றும் ரோஹன் சேத் என இருவர் சேர்ந்து உருவாக்கிய ஐடியாதான் கிளப் ஹவுஸ். ஏற்கெனவே சொன்னதுபோல், கடந்த ஆண்டில் அமெரிக்க ஐஓஎஸ் யூஸர்ஸுக்கு மட்டும் இன்வைட் ஒன்லி ஆப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், அடுத்த அடியை மெதுவாக எடுத்து வந்த அவர்கள், 2021 மே மாதத்தில்தான் இந்தியா உள்பட உலக மார்க்கெட்டுகளில் ஆண்ட்ராய்டு வெர்ஷனை அறிமுகப்படுத்தினார்கள். 2021 ஏப்ரல் மாத கணக்கின்படி கிளப் ஹவுஸின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.29.21 ஆயிரம் கோடி).

ஆண்ட்ராய்டில் டவுன்லோட் செய்வது எப்படி?
கூகுள் ப்ளே ஸ்டோரில் நீங்கள் வழக்கமான ஆப் போல் இதையும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும். ஆனால், மற்ற ஆப்கள் போன்று உங்கள் தகவல்களைக் கொடுத்து லாக் இன் செய்ய முடியாது. அதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன.
- கிளப் ஹவுஸ் ஆப்பில் கணக்குத் தொடங்கி வெயிட்டிங் லிஸ்டில் இணையலாம். யூஸர்ஸுக்கான விண்டோ ஓபனாகும்போது அந்தத் தளத்தைப் பயன்படுத்த நீங்கள் அனுபதிக்கப்படுவீர்கள்.
- ஏற்கனவே கிளப் ஹவுஸில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நண்பர் ஒருவரின் இன்வைட் கிடைத்தால், அதன்மூலம் உடனடியாக நீங்கள் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி பயன்படுத்தத் தொடங்கலாம். கிளப் ஹவுஸில் புதிதாக இணைபவர்கள், இரண்டு பேருக்கு இன்வைட் அனுப்ப முடியும். இதன்மூலம்தான் கிளப் ஹவுஸில் புதிய பயனாளர்கள் குவிகிறார்கள்.
இன்வைட் அனுப்புவது எப்படி?
தற்போது வரை கிளப் ஹவுஸ் ஆப்பை நீங்கள் கம்யூட்டர்களில் பயன்படுத்த முடியாது. விரைவில் அந்த வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளப் ஹவுஸில் நீங்கள் இணைந்துவிட்டால், ஒருவருக்கு இன்வைட் அனுப்ப அவரது செல்போன் எண் அவசியம். அந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் வழியாக இன்வைட் லிங்க் அனுப்பப்படும். அதன்மூலம் ஆண்ட்ராய்ட் போனிலோ அல்லது ஆப்பிள் ஐபோனிலோ இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு ஆப் வசதிகள்
ஐ ஓஎஸ் பயனாளர்களை விட குறைவான வசதிகளையே கிளப் ஹவுஸ் கொண்டிருக்கிறது.
- Choose Topic
- Follow People
- Leave Room
- Browse Different Topics

இதன் பாப்புலாரிட்டி எந்த அளவுக்கு இருக்கிறதென்றால், அதில் தங்களுக்குக் கணக்கு இல்லை என பிரித்வி ராஜ், துல்கர் சல்மான், சுரேஷ் கோபி வரை விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. சேட்டன்கள் மத்தியில் கிளப் ஹவுஸ் செம ரீச்!