Phone

உங்க பெயர்ல எத்தனை சிம் கார்டு இருக்கு… கண்டுபிடிக்க ஈஸியான வழி!

உங்கள் பெயரில் வாங்கப்பட்டிருக்கும் சிம்கார்டுகள் பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகம் https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளம் மூலம் சேவையைத் தொடங்கியிருக்கிறது.

சிம் கார்டு மோசடிகள் அரசுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி தீராத தலைவலியாக நீடித்து வரும் ஒரு பிரச்னை. ஒருவழியாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க புதிய முயற்சியை மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகம் முன்னெடுத்திருக்கிறது. அரசு விதிகளின்படி ஒருவரின் பெயரில் 9 சிம்கார்டுகள் மட்டுமே இயங்க முடியும். அந்த எண்ணிக்கைக்கு மேலான சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தால், அது சட்டவிரோதம்.

எத்தனை சிம்கார்டு என் பெயர்ல இருக்குனு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு கேக்குறீங்களா… அதற்குத்தான் அரசு புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. https://tafcop.dgtelecom.gov.in/index.php இணையதள முகவரியில் சென்று உங்கள் மொபைல் நம்பரைப் பதிவு செய்தால், குறிப்பிட்ட எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி மூலம் லாக் இன் செய்யும்போது உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும். இந்தத் தகவலை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகக் கொடுப்பதாகச் சொல்கிறது தொலைதொடர்புத் துறை அமைச்சகம்.

உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டுகளை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு அந்த பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது. குறிப்பிட்ட எண்ணை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதை பிளாக் செய்யவும் நீங்கள் ரெக்வெஸ்ட் கொடுக்க முடியும். அதன்மூலம் உரிய விசாரணைக்குப் பின்னர் அந்த நம்பர் பிளாக் செய்யப்படும்.

Website Homepage
Website Homepage

என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

  • ஒரு வாடிக்கையாளர், அவர் பெயரில் 9-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை எஸ்.எஸ்.மூலம் கொடுக்கிறது.
  • அந்த எண்ணிக்கையைத் தாண்டியிருக்கும் வாடிக்கையாளர்கள், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ரெக்வெஸ்ட் கொடுக்க முடியும்.
  • குறிப்பிட்ட ரெக்வெஸ்டின் ஸ்டேட்டஸை அறிந்துகொள்ள, சரியான மொபைல் நம்பர், இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்தபோது கொடுக்கப்பட்ட டிக்கெட் ஐ.டி ரெஃபரென்ஸ் நம்பர் இரண்டையும் கொடுக்க வேண்டும்.
Website

டிஜிட்டல் மோசடிகள்

டிஜிட்டல் மோசடிகளைத் தடுத்து ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தொலைதொடர்புத் துறை டிஜிட்டல் இண்டலிஜன்ஸ் யூனிட் (DIU) என்ற புதிய பிரிவை ஏற்படுத்தியிருக்கிறது. டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக இந்தப் பிரிவு விசாரணை நடத்தும். இதுதொடர்பாக மத்திய தொலைதொடர்புத் துறை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டிருக்கிறது. டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக விசாரணை அமைப்புகள், வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து விசாரணை நடத்த இந்தப் பிரிவு உதவும்.

Website

எப்படி சிம் கார்டுகளை டிராக் செய்வது?

  • முதலில் தொலைதொடர்புத் துறையின் https://tafcop.dgtelecom.gov.in/index.php இணையதள முகவரிக்கு சென்று நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல் நம்பரைக் கொடுத்து ரெக்வெஸ்ட் ஓடிபி பட்டனைத் தட்டுங்கள்.
  • ஓடிபி வந்தவுடன் அதைப் பதிவு செய்து வேலிடேட் செய்ய வேண்டும்.
  • ஓடிபியை வேலிடேட் செய்தவுடன் உங்கள் பெயரில் இருக்கும் மொபைல் நம்பர்கள் லிஸ்ட் வரும். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருந்தால், குறிப்பிட்ட நம்பரை செலக்ட் செய்து அந்த நம்பரை புகார் செய்யலாம்.

Also Read – உங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்… செக் பண்ணலாமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top