பெர்சவரன்ஸ் ரோவர்

Perseverance: நாசாவின் மார்ஸ் ரோவரைக் கட்டுப்படுத்துவது யார் தெரியுமா?

நாசாவின் `பெர்சவரன்ஸ்’ ரோவர் சுமார் 7 மாதங்கள் பயணத்துக்குப் பின்னர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தரையிறங்கியது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய நாடுகளுடன் முதன்முறையாக இணைந்து செவ்வாய் கிரக ஆய்வுக்காக பெர்சவரன்ஸ் ரோவரைக் கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி அனுப்பியது. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாகக் கருதப்படும் ஜெஸீரோ கிராட்டர் (Jezero crater) பகுதியில் தரையிறங்கியது.

பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்த படம்

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு 2027ல் பூமிக்குத் திரும்பும். அத்தோடு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் இருக்கிறதா… இதற்கு முன்னர் அங்கு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது.

பெர்சவரன்ஸ் மார்ஸ் ரோவரைக் கட்டுப்படுத்தும் பேராசியர்!

மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கும் பெர்சவரன்ஸ் மார்ஸ் ரோவரின் கண்ட்ரோல் லண்டனில் இருக்கும் சிங்கிள் பெட்ரூம் அபார்மெண்டில் இருந்து பேராசிரியர் சஞ்சீவ் குப்தா என்பவரிடம்தான் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

நாசாவின் 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து மார்ஸ் ரோவரைக் கட்டுப்படுத்தும் சஞ்சீவ் குப்தா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். புவியியல் ஆய்வில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் சஞ்சீவ் குப்தா, தெற்கு லண்டனில் இருக்கும் தனது அப்பார்ட்மெண்டையே கண்ட்ரோல் ரூமாக மாற்றி மார்ஸ் ரோவரைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த மிஷனுக்காக அமைக்கப்பட்டுள்ள கலிஃபோர்னியா மிஷன் கண்ட்ரோல் ரூமில் இருக்க வேண்டிய சஞ்சீவ் குப்தா, கொரோனா சூழலால் இங்கிலாந்தில் மாட்டிக் கொண்டார். அவரால் அமெரிக்கா செல்ல முடியாத சூழலில், இதற்காக தெற்கு லண்டனின் லீவிஷாம் பகுதியில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஐந்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், சக விஞ்ஞானிகளுடன் வீடியோ கான்ப்ரஸுக்கென இரண்டு பெரிய திரைகள் என தனது பெட்ரூமையே கண்ட்ரோல் ரூமாக மாற்றி இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவ் குப்தா
சஞ்சீவ் குப்தா

இதுகுறித்து பேசும் சஞ்சீவ் குப்தா, “நான் கலிஃபோர்னியாவின் ஜெட் புரபோல்சன் ஆய்வகத்தில் இருக்க வேண்டியது. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தங்கள் லேப்டாப்களில் மூழ்கியிருக்கும் மிகப்பெரிய அறை கொண்ட அமைப்பு அங்கிருக்கிறது. ஆனால், தற்போதைய சூழலால் என்னால் செல்ல முடியவில்லை’’ என்று கூறியிருக்கிறார். லண்டனின் புகழ்பெற்ற இம்பீரியல் கல்லூரியில் புவியியல் பேராசியராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ் குப்தா, நாசா விஞ்ஞானிகளுடன் ஆன்லைனில் இணைந்து பெர்சவரன்ஸ் மார்ஸ் ரோவரைக் கட்டுப்படுத்தும் பணியில் பிஸியாக இருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top