விஜய் டிவி புகழ் ராமரோட அப்பா ஒரு ஒயிலாட்டக் கலைஞர். அவர்கிட்ட இருந்துதான் ராமர் நடனத்தை கத்துக்கிட்டார். ராமரோட அம்மா அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க மாதிரி நல்லா இமிட்டேட் பண்ணுவாங்களாம். அவங்ககிட்ட இருந்துதான் அந்தக் கலைகளையும் ராமர் கத்துக்கிட்டார். இந்த ரெண்டு திறமைக்கு மேல ராமரோட சென்ஸ் ஆஃப் ஹூயூமரையும் தூவிதான், ராமர் இந்த உயரத்துக்கு வந்திருக்கார். அவரோட கலைப்பயணம் எப்படி பட்டதுங்கிறதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.
ராமருக்குள்ள மத்தவங்களை இமிட்டேட் பண்ற திறமை இருந்தாலும் அதோடு மிமிக்ரியையும் அவர் சேர்த்தது, கல்லூரியில் படிக்கிற காலத்தில்தான். கல்லூரி முடிந்ததும் ஹாஸ்டலில் தங்கியிருந்த ராமர், முதலில் மிமிக்ரி செய்யப் பழகியது ஹாஸ்டல் வார்டனின் வாய்ஸைத்தான். இரவில் அவரைப் போல சத்தம் போட்டு பக்கத்து ரூம் பாய்ஸை எல்லாம் ப்ராங்க் பண்ணியிருக்கிறார். அவர்களும் அந்தக் குரலை நம்ப, பரவாயில்லையே நமக்கு மிமிக்ரியும் வரும் போல என்று அடுத்தடுத்த வாய்ஸை பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
ராமரின் இமிட்டேஷனையும் மிமிக்ரியையும் அதிகம் ரசிக்க ஆரம்பித்த அவரின் நண்பர்களால், ராமருக்கு ஒரு நம்பிக்கையும் பிறந்தது. இதையே நம்முடைய கரியராக மாற்றினால் என்ன? என்று அதற்காக வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார். அப்படி, மதுரையில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் இயங்கிவந்த ஹூயூமர் க்ளப்பில் சேர்ந்தார். அங்குதான் ராமர், ரோபோ சங்கர், மதுரை முத்து எல்லாம் ஒன்றாக வேலை பார்த்திருக்கிறார்.
இந்த க்ளப்பிற்கு மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களில் காமெடி நிகழ்ச்சிகள் செய்வதுதான் வேலை. அதுமட்டுமில்லாமல் மீனாட்சி மிஷன் போன்ற பல மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை சிரிக்க வைப்பதும் பல கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்த காமெடி நாடகங்கள் செய்வதும் இந்த க்ளப்பின் வேலை.
இந்த க்ளப்பில் ராமர் தீவிரமாக இருந்த சமயத்தில்தான் கலக்கப்போவது யாரு மூன்றாவது சீசனுக்கான ஆடிஷன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது. டிவி ஷோக்களால் பெரிய மாற்றம் எதுவும் நடக்காது என நினைத்துக்கொண்டு அந்த ஆடிஷனுக்கு போக வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார். ஆனால், அவரது நண்பர்களால் ராமரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த ஆடிஷனில்தான் ராமரும் சிவகார்த்திகேயனும் தேர்வாகியிருக்கிறார்கள்.
அதுவரைக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களை இயக்கிய டீம் விஜய் டிவியை விட்டு வெளியேற இயக்குநர் தாம்ஸனிடம் மூன்றாவது சீசனை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது. அதனால், பல வித்தியாசமான கான்செப்ட்களை முயற்சி செய்து அந்த சீசனை ஹிட் சீசனாக மாற்றினார். அதனால் ராமருக்கும் நல்ல ரீச் கிடைத்ததால், இந்த சீசன் முடிவடைந்ததும் விஜய் டிவியிலேயே ராமர் பயணிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ராமரும் அமுதவாணனும் சேர்ந்து காமெடி செய்தார்கள். அந்த சீசனில் டைட்டிலையும் வென்றார்கள். இந்த வெற்றியோடு ராமரின் கலை பயணத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததுனு சொல்லாம். ஆமாங்க. இந்த சமயத்தில்தான் ராமருக்கு கல்யாணம் ஆச்சு. கல்யாணத்திற்குப் பிறகு பொறுப்புகள் கூடிடுச்சு. வேலை, வருமானம்னு பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிலைமைக்கு வரவே ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுனு சொல்ற மாதிரி கைதட்டல்கள் வாங்குன கலைஞனும் சும்மா இருக்க மாட்டான். அப்படித்தான் ராமருக்கும் தன்னோட இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கணும்னு தோணிருக்கு. அதே சமயம் இயக்குநர் தாம்ஸனும் விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளை இயக்கிட்டு இருந்ததால், அவர் மூலமாக அது இது எது நிகழ்சியோட சிரிச்சா போச்சு மூலமா ரீ-என்ட்ரி கொடுத்தார் ராமர்.
அந்த சமயம் ராமர் மதுரை மேலூரில் வேலை பார்த்துட்டு இருந்தனால, லீவ் போட்டுத்தான் சென்னைக்கு வந்து ஷூட்டை முடிஞ்சிட்டு போவாராம். 15 நாள்களுக்கு ஒரு முறை ஷூட் இருக்கும். 2 நாள்கள் லீவ் போட்டு சென்னைக்கு வந்து, 1 நாள் ரிகர்சல்; 1 நாள் ஷூட்னு ரெண்டு நாளில் வேலையை முடிஞ்சிட்டு ஊருக்கு போயிடுவார். இப்போது வரைக்கும் ராமர் இப்படித்தான் லீவ் போட்டுத்தான் ஷூட்டிங்கிற்கு வந்துப்போகிறார்.
செகண்ட் இன்னிங்ஸில் ராமருக்கு கிடைத்த ப்ரேக் என்றால், அது ‘என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா’ எபிசோடுதான். ஆனால், முதலில் அவர் அதை பண்ண மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஏன்னா, ராமர் பெண் வேஷம் போடுறது அவங்க மனைவிக்கு பிடிக்கலைனு சொல்லியிருக்காங்க. அதுனால மறுத்த ராமரை விடாப்பிடியாக இருந்து ஓகே பண்ண வைத்திருக்கிறார்கள். அந்த எபிசோடுதான் ராமருக்கு பெரிய ரீச்சைக் கொடுத்த அதே உற்சாகத்தில் அவர் செய்த, ‘ஆத்தாடி என்ன உடம்பி’, ‘சலக்கு சலக்கு சரிகச் சேல சலக் சலக்’ என அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் ராமர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
ராமரோட மிகப்பெரிய ப்ளஸே அவரோட மிமிக்ரிதான். கவுண்டமணி, மதன் பாபு, மம்முட்டி மாதிரியெல்லாம் சூப்பரா பேசுவார். அதுமட்டுமில்லாமல், லேடி கெட்டப் போடும் போதும் அதற்கேற்ப வாய்ஸ் எடுப்பார். அதுதான் மற்றவர்கள் லேடி கெட்டப் போட்டு நடிக்கிறதுக்கும் ராமர் லேடி கெட்டப் போட்டு நடிக்கிறதுக்குமான வித்தியாசம். என்னம்மா இப்படி பண்றீங்களேமா எபிசோடுல அந்த கெட்டப்பிற்காக மட்டும் 10 டைப்ல வாய்ஸ் ப்ராக்டீஸ் பண்ணியிருக்கிறார். அதுல ஃபைனலா ஓகே பண்ணி பேசுன வாய்ஸைத்தான் நாம கேட்டோம். அந்தளவுக்கு கெட்டப்பிற்காக நியாகம் சேர்க்கிறவர்தான் ராமர். அதேபோல் ராமர் நடித்த பல ஸ்கிட்களில் அவர் அதிகமான நடித்த கதாபாத்திரம் குடிக்காரனாகத்தான். ரியலாக குடிச்சிட்டு சலம்பல் பண்ற ஆள் மாதிரியே நடிப்பார். சில சமயம் பார்க்கிறவங்களுக்கே இவர் குடிச்சிட்டுத்தான் நடிக்கிறாரா என்கிற கேள்விக்கூட வரலாம். அந்தளவுக்கு பக்காவா நடிப்பதும் ராமரின் ப்ளஸ்.
Also Read – டிரம்மர் டு மியூஸிக் டைரக்டர் – இசையமைப்பாளர் தமனின் இசைப்பயணம்!
இவைமட்டுமில்லாமல் ராமர் இத்தனை ஆண்டுகள் லைம்லைட்டில் இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அது அவரது குணம்தான். ராமருக்கு பின் விஜய் டிவிக்கு வந்தவர்களிடம் எப்போதும் தான் ஒரு சீனியர் என்பதை காட்டிக்கொள்ளவே மாட்டார். ஆன் ஸ்கிரினில் யார் அவரை கலாய்த்தாலும் அதை அவர் பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு, அதை தனக்கான மைலேஜாக மாற்றிவிடுவார். இதுவும் அவரது வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.
ராமர் எப்படி பல வருடங்களாக ஒரு விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாமல் இருந்தாரோ, அது மாதிரிதான் நானும் அந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்தே சொல்லாமல் வந்தேன். அது என்னன்னா, ராமர் நமக்கு தெரிஞ்ச காமெடியன் மட்டுமில்ல; நம்மில் பலருக்கும் தெரியாத விஓஏ ராமர் என்கிற முகமும் அவருக்கு இருக்கு. இதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லாமல் தவிர்ந்த வந்தார் ராமர். ஆனால், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துவிட்டார். அதன்பிறகுதான், பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி பல திறமைக்கு சொந்தக்காரர்தான் ராமர்.