‘கோலிவுட்டின் செல்லம்’ பிரகாஷ்ராஜ் இதுவரை தன் கரியரில் தேர்ந்தெடுத்த ரோல்களில் சிறந்த பத்து ரோல்கள் பற்றி இங்கு பார்க்கலாம். (குறிப்பு : இது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல)
மகாராணி – ‘அப்பு’

எந்தவொரு நடிகனுக்குமே இப்படியொரு ரோலை செய்து பார்த்திடவேண்டும் என சில எதிர்ப்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். அப்படியான ஒரு எதிர்பார்ப்புக்குரிய சவாலான வில்லத்தனமிக்க திருநங்கை வேடத்தில் அவ்வளவு பிரயத்தனப்பட்டு நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். இந்த படம் வந்தபோது பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோகாத ரசிகர்களே இல்லை.
விஜி – ‘மொழி’

தொடர்ந்து குரூரமான வில்லன் வேடங்களிலேயே பிரகாஷ் ராஜ் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென சர்ப்பரைஸாக நடித்த கியூட் ரோல் இது. கல்யாண வயது வந்தும் கல்யாணம் ஆகாத, நண்பனின் முடிவுகளே தன் முடிவுகள் என வாழும் ஒரு ஜாலியான கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அழகாக உயிரூட்டியிருப்பார் பிரகாஷ் ராஜ். படத்தில் அவருக்கும் பிரம்மானந்திற்கும் இடையேயான காமெடி காட்சிகள் எல்லாமே வேற லெவல்.
முத்துப்பாண்டி – ‘கில்லி’

‘கில்லி’க்கு முன் ‘கில்லி’க்குப் பின் என பிரகாஷ் ராஜின் கரியரை இரு விதங்களாகப் பிரிக்கலாம். அப்படியாக பிரகாஷ் ராஜ் ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்கள் மனதில் பச்சைக் குத்தியதைப் போல தன்னுடைய பெயரை அழுத்தமாக பதிவு செய்த படம் இது. ஒரு படம் பார்க்கும்போது இந்தப் பாத்திரம் வில்லன்தான் ஆனாலும் நான் இந்தப் பாத்திரத்தை ரசிக்கிறேன் எனும் மனநிலைக்கு ரசிகர்கள் செல்வது மிக அரிது. அப்படியொரு அரிதான நிலைக்கு ரசிகர்களை தன்னுடைய நடிப்பின் மூலம் கொண்டு சென்றிருப்பார் பிரகாஷ் ராஜ்.
வேங்கடம் ‘ காஞ்சிவரம்’

நெசவுத் தொழிலாலர்களின் வாழ்க்கையை பிரியதர்ஷன் அச்சு அசலாக பதிவு செய்த ‘காஞ்சிவரம்’ படத்தில் ‘வேங்கடம்’ எனும் நெசவுத் தொழிலாளியாகவே வாழ்ந்திருப்பார் பிரகாஷ் ராஜ். அவருடைய இந்த இயல்பான நடிப்பை போற்றும் விதமாக மத்திய அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்கி கௌரவம் சேர்த்திருந்தது.
ரகுராம் – ‘அபியும் நானும்’

இப்படியொரு அப்பா வேண்டும் என ‘அபியும் நானும்’ படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு மகளையும் ஏங்க வைத்திருப்பார் பிரகாஷ் ராஜ். தன் மகள் மீதான பாசத்தால் ஏற்படும் உறவு சிக்கல்களையும் அதன் உண்மைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு அப்பாவாக அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். அதற்காக படம் முழுக்க அழுது வடியாமல் படு சுவாரஸ்யமான ஒரு ஆளாக வலம் வந்து அனைவரையும் கவர்ந்திருப்பார் பிரகாஷ் ராஜ்.
Also Read: மேஜர் மாதவன் முதல் சுப்ரமணியம் வரை… டாப் 10 பிரகாஷ் ராஜ் ரோல்கள் – பகுதி 1