விஜயேந்திரரோடு கூட்டு சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி! – ராமேஸ்வரம் கோவிலில் நடந்தது என்ன?

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சென்றார். அவருடன் பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரும் சென்றனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு நுழைந்த அவருக்கு கோவில் குருக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. வழக்கம்போல, அவர் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் கருதியுள்ளனர்.

ஆனால், கோவில் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், கோவில் கருவறைக்குள் சுவாமிக்கு நானே பூஜை செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார். இதனை ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த குருக்கள், ` கோவில் கருவறையில் சிவாகம முறைப்படி தீட்சை பெற்றவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும். ஆகம விதிகளை நீங்கள் மீறுவதை அனுமதிக்க முடியாது’ எனப் பணிவோடு தெரிவித்துள்ளனர்.

இதையும் கருவறைக்குள் நுழைவதற்கு விஜயேந்திரர் முயற்சி செய்யவே, கருவறையின் குறுக்கே படுத்துக் கொண்டு கோவில் குருக்கள் கெஞ்சியுள்ளனர். இதனை பொதுமக்களும் வேடிக்கை பார்த்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, விஜயேந்திரரை கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து, வழக்கத்துக்கு மாறாக கருவறையை செல்போனில் படம் எடுக்கும் வேலையையும் சிலர் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த குருக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுகுறித்து கோவில் குருக்களிடம் பேசியபோது, ` சங்கராச்சாரியார் ஏன் இப்படிச் செய்தார் எனத் தெரியவில்லை. பன்னெடுங்காலமாக ராமேஸ்வரத்துக்கு என பாரம்பரியமான சில வழக்கங்கள் உண்டு. அதனை மீறுவது நல்லதல்ல. கோவிலின் அர்த்த மண்டபத்துடன் நின்று அவர் ஆராதனை செய்யலாம். அதனைத் தாண்டி கருவறைக்குள் செல்வதற்கு அவருக்கு அனுமதியில்லை. பெரியவர் ஜெயேந்திரர் இருந்த வரையில் ஆகம விதிகளை அவர் மீறியதில்லை. அவர் சந்தித்த நேரடி அனுபவமும் ஒரு காரணம்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ” காஞ்சிபுரம் மடத்துக்குச் சொந்தமான காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்போதும், பெரியவர் ஜெயேந்திரர் கோபுரத்தில் ஏறி அபிஷேகம் செய்ய முயன்றார். அப்போது சிவாச்சாரியார்கள் ஒன்று திரண்டு, `நாங்கள் ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்?’ எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜெயேந்திரர் மன்னிப்புக் கேட்டார். இதே பாணியில் ராமேஸ்வரம் கோவிலில் விஜயேந்திரர் செயல்பட முயன்றுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தியும் ஹெச்.ராஜாவும் இருந்தால் கோவில் நிர்வாகத்தால் எதையும் செய்ய முடியவில்லை. தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவத்தால் நாட்டுக்கே கேடு விளையும். காஞ்சி விஜயேந்திரரின் இந்த அத்துமீறலால் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் இருக்கிறோம்” என்கின்றனர்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top