மதுரைன்னாலே பல விஷயங்கள் ஃபேமஸ்னு சொல்லுவாங்க… அதுல முக்கியமானது போஸ்டர். பிறப்பு தொடங்கி இறப்பு வரை போஸ்டர்கள் பல கதைகள் சொல்லும்; சில நேரங்கள்ல பழி வாங்குற கதைகளையும் போஸ்டர்கள் சொல்லிருக்கு. அரசியல், சினிமா, வீட்டு விசேஷம்னு பல விஷயங்களுக்கு மதுரைல போஸ்டர் வாசகங்கள் பிரபலமா இருந்துருக்கு. இந்த மாதிரி சீரியஸ் விஷயங்களை விடுங்க… சுவாரஸ்யமா சில விஷயங்களுக்கும் போஸ்டர் அடிச்சு வைரல் ஆகியிருக்காங்க மதுரைக்காரங்க… அப்படி, இதுக்கெல்லாமாடா போஸ்டர் அடிப்பீங்கனு நாம ஆச்சர்யப்படுற சில விஷயங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
மதுரை போஸ்டர் கலாசாரம் பற்றிய கேள்வி ஒருமுறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்கப்பட்டது.. அதுக்கு அவர் என்ன பதில் சொன்னாரு தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க அதுக்கான பதிலை நான் பின்னாடி சொல்றேன்.
எமனுக்குக் கண்டனம்
மதுரை மாநகர் எத்தனையோ அரசியல் கட்சி, தலைவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து போஸ்டர் அடித்ததைப் பார்த்திருக்கிறது. ஆனால், எமனுக்கு கண்டனம் தெரிவித்து அடிக்கப்பட்ட போஸ்டரை அப்போதுதான் முதல்முறையாகப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன். மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த அய்யாவு இறந்த துக்கம் தாளாமல், அவரது உறவினர்கள் தங்கள் எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பினர். ’சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்’ என்கிற தலைப்பில் கடந்த 2020 பிப்ரவரியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பத்தி சோசியல் மீடியா உள்பட எல்லா மீடியாக்களிலும் பேசப்பட்டது.
ஏய் கொரோனா…
கொரோனா முதல் அலை வீரியம் எடுக்கத் தொடங்கிய 2020 மார்ச் வாக்கில் இது மதுரையை டரியல் ஆக்கிய போஸ்டர். நாரதருக்கும் முருகப் பெருமானுக்கும் நடக்கும் ஒரு டயலாக் வடிவில் ஒட்டப்பட்டிருந்தது அந்த போஸ்டர். அதில், இன்னோரு சுவாரஸ்யம் நாரதர் வடிவில் இருந்தது வடிவேலு. `வேலோடு விளையாடி போரடித்துவிட்டது நாரதரே. விளையாட வேறு எதாவது பொருள் இருக்கிறதா’ என முருகன் கேட்க, `முருகா, பூமியில் கொரோனா வைரஸ் எனும் கிருமி மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனையே பிடித்துக் கொண்டுவந்துள்ளேன். அதனிடம் காட்டு உன் திருவிளையாடலை’ என்று பதில் சொல்கிறார். தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பின்பற்றினால் கொரோனா வராது என்கிற கான்செப்டை அடிப்படையாக வைத்து அடிக்கப்பட்டிருந்த இந்த போஸ்டரும் வைரல்தான்.
சொக்கிப்போவீங்க..!
நீண்ட நாள் காதலியான நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் 9-ம் தேதி கரம்பிடித்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்கள் திருமண போட்டோவை வைத்து மதுரையைச் சேர்ந்த ஹோட்டல் ஒன்று அடித்திருந்த விளம்பர போஸ்டர் வைரலானது. அந்த போஸ்டரில், ‘நயனைக் காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி… எங்க இடியாப்பத்தைச் சாப்பீட்டா போவீங்க சொக்கி’னு இடம்பிடிச்சிருந்த வாசகம், வேற லெவல் ரீச்.
மனிதக் கடவுளே..!
போஸ்டர் அரசியல்ல நாங்களும் களத்தில் இருக்கோம்னு மாணவர்கள் போஸ்டர் போர்ல இறங்குன ஒரு சம்பவமும் மதுரைல நடந்துச்சு. கொரோனா சூழல் அப்போ அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பல டிசைன்களில் போஸ்டர்கள் சுவர்களில் மின்னின. எளிமை, நேர்மை, தாய்மை – மாணவர்களுக்கு வரம் கொடுத்த கல்விக் கடவுளே, மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே என வாசகங்கள் பளிச்சிட்டன.
மணமகள் தேவை
மதுரை போஸ்டர்கள்ல இது லேட்டஸ்ட் சென்சேஷன். வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜெகன், கடந்த ஐந்தாண்டுகளாக திருமணத்துக்குப் பெண் தேடியும் கிடைக்கவில்லையாம். ஒரு கம்பெனியில் மேனேஜராக இருந்துகொண்டு, போஸ்டர் டிசைன் செய்யும் பப்ளிசிட்டி கம்பெனி ஒன்றில் பார்ட் டைமாக வேலைபார்த்து வரும் அவர், தனது மனக்குமுறலை போஸ்டராகவே வெளிப்படுத்தியிருந்தார். 90ஸ் கிட்ஸான அவர், தன்னுடைய ராசி, வேலைவாய்ப்பு, சம்பளம் போன்ற தகவல்களோடு, போட்டோ, அட்ரஸ் கொடுத்து மணமகள் தேவை என போஸ்டர் அடிக்கவே, அது உள்ளூர் மீடியா முதல் உலக மீடியா வரை பேசுபொருளானது.
மதுரை போஸ்டர்கள் பத்தி ஒருமுறை செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், `உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் மதுரைக்காரர்கள். அரசியலாக இருந்தாலும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக இருக்க வேண்டும்; அது மனதில் பதிய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். குடும்பத்துக்காக சிந்திக்காவிட்டாலும் வால் போஸ்டருக்காக சிந்திக்கக் கூடியவர்கள்’ என்று பதில் சொல்லியிருந்தார்.
இப்படி, நீங்க எதாவது விநோதமான மதுரை போஸ்டர்ஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – டவுன் பஸ் பாட்டுகளோட மியூசிக் டைரக்டர்லாம் யாரு தெரியுமா?