Nellore Kurrallu team

டிரெண்டாகும் `Nellore kurrallu’ வக்கீல் சாப் சண்டைக்காட்சி! – யார் இந்த சிறுவர்கள்?

இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிங்க்.’ இந்தியா முழுவதும் இந்தப்படம் பரவலாக கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீ மேக்கும் ஆனது. வெளியான மொழிகளிலும் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியான `வக்கீல் சாப்’ படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகளை நெல்லூரைச் சேர்ந்த சிறுவர்கள் படமாக்கி தங்களது யூ டியூபில் பதிவேற்றியுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்களையே மிரண்டுபோக வைக்கும் அந்த சிறுவர்கள் யார் என்பதைப் பற்றி தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்தான் இவர்கள். கோடிக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்கி எடுக்கப்படும் திரைப்படத்துக்கு இணையாக எடிட்டிங், ஷாட்டுகள், இயக்கம், நடிப்பு, ஸ்டண்ட் மற்றும் கேமரா ஆங்கிள் என தெறிக்கவிடும் சிறுவர்கள் `வக்கீல் சாப்’ திரைப்படத்தில் வரும் சண்டைக் காட்சியை இயக்குவதற்கு முன்பே மகேஷ் பாபுவின் SARILERU NEEKEVVARU’ என்ற திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தனர். மகேஷ் பாபு படத்தில் வரும் அந்த இன்டர்வெல் காட்சிகளை வெறும் ரெட் மீ மொபைல் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்.

நெல்லூர் சிறுவர்கள்
நெல்லூர் சிறுவர்கள்

`NELLORE KURRALLU LK ENTERTAINMENT’ என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் இந்த சிறுவர்கள் பல பிரபலமான படங்களின் சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்தி தங்களது யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். மேக்கிங் சீன்களையும் தங்களது பக்கத்தில் அவர்கள் பதிவேற்றுகின்றனர். அதில் அவர்கள் அனைத்து காட்சிகளையும் வெறும் மொபைல் போன்களில் இயக்குகின்றனர். அதில் சில வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூஸ்களையும் பெற்றுள்ளன. பல வீடியோக்கள் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளன. இவர்களின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு பேர் முக்கியமானவர்களாக உள்ளனர். ஒருவர் லாயிக் ஷேக், மற்றொருவர் கிரண். ஷேக் எடிட்டிங் வேலைகளைப் பார்த்துக்கொள்கிறார். கிரண் காட்சிகளை இயக்குகிறார்.

நெல்லூர் சிறுவர்கள்
நெல்லூர் சிறுவர்கள்

சிறிய வயதில் இருந்தே அந்த சிறுவர்கள் தீவிரமான சினிமா வெறியர்களாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கிரணின் தந்தை வெல்டராக இருந்துள்ளார். கிரண் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய தந்தை காலமாகியுள்ளார். அப்போது முதல் பல்வேறு வேலைகளை கிரண் செய்து வந்துள்ளார். தற்போது அவர் தேநீர்கடை ஒன்றில் வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரணும் ஷேக்கும் தங்களது ஓய்வு நேரத்தை சண்டை காட்சிகளை படமாக்குவதிலும் பாடல்கள் மற்றும் குறும்படங்களை இயக்குவதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் நடன வீடியோக்களால் நிறைந்துள்ளது.

சண்டைக் காட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சிறுவனின் பெயர், முன்னா. மகேஷ் பாபு கதாபாத்திரம் முதல் பவன் கல்யாண் கதாபாத்திரம் வரை அனைவரின் கதாபாத்திரங்களையும் அதன் மாஸ் தன்மைக்கு ஏற்ப நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். முதலில் கிரண் மற்றும் ஷேக்குடன் முன்னா இணைந்துள்ளார். பின்னர், முன்னாவின் நண்பர்கள் இந்த டீமுடன் இணைந்து மற்ற வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கியுள்ளனர். மகேஷ் பாபு சண்டைக்காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி ஹிட் ஆனது தொடர்பாக கிரண் பேசும்போது, “நிறைய பேர் நகைச்சுவை மற்றும் நடன வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். எனவே, நாங்கள் சற்று வித்தியாசமாக சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்த முடிவு செய்தோம்” என்று தெரிவித்தார்.

ஷேக் மொபைலில் உள்ள `kinemaster’ ஆப்பை பயன்படுத்தி இந்தக் காட்சிகளை எடிட் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தமாக இந்த டீமில் 14 சிறுவர்கள் உள்ளனர். அனைவரும் சுயமாகவே அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டு வீடியோவை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நிமிட படப்பிடிப்பையும் ரசித்து செய்வதாக கிரண் மற்றும் ஷேக் தெரிவித்துள்ளனர். இவர்களின் வீடியோ `SARILERU NEEKEVVARU’ இயக்குநர் வரை சென்று பாராட்டுகளைப் பெற்றது. தற்போது வெளியான `வக்கீல் சாப்’ பட சண்டைக் காட்சிகளையும் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். கிரண் மற்றும் ஷேக் இருவருக்குமே திரைத்துறைக்கு வர வேண்டும் என்பதுதான் ஆசை என்கிறார்கள். கிரண் சிறந்த இயக்குநராகவும் ஷேக் சிறந்த எடிட்டராகவும் ஆக விரும்புகிறார். அவர்களின் ஆசை விரைவில் கைகூடட்டும்!

Also Read: மாஸ்க், இ-பாஸ் அலப்பறைகள் – வைரல் போட்டோஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top