ஐஐடி வினாத்தாள்

`கேள்வியும் நீங்களே.. பதிலும் நீங்களே..!’ – ஐஐடி கோவாவின் புதிய முயற்சி

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தேர்வுகளை நடத்த வழக்கமான முறைகள் உள்ளன. ஆசிரியர்கள் கேள்விகளை உருவாக்கி மாணவர்களிடம் அளிப்பார்கள். மாணவர்கள் அதற்குப் பதில் எழுதுவார்கள். இதை வைத்து மாணவர்களின் பதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும். பின்னர், ஓப்பன் புக் எக்ஸாம் என்ற முறை வந்தது. இந்த முறையில் மாணவர்கள் தங்களது பதில்களை எழுதுவதற்கு முன்பு புத்தகங்கள் அல்லது தாங்கள் எடுத்து வைத்துள்ள குறிப்புகளைப் பார்த்துக்கொள்ளலாம். தற்போது கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழியாக கேள்வித்தாள்களை அனுப்பி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களை மதிப்பீடு செய்ய கோவாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையம் புதிய, தனித்துவமான மற்றும் இன்ட்ரஸ்டிங்கான முறையை கையாண்டுள்ளது.

ஐஐடி நிர்வாகம் வினாத்தாளில் மாணவர்களிடமே கேள்விகளை தயாரிக்கவும் பின்னர் அதற்கு பதில் அளிக்கவும் கூறியுள்ளது. கேள்வித்தாளில், “முதல் கேள்வியில்… லெக்சர் 1 முதல் லெக்சர் 30 வரை உள்ள முழு செமஸ்டர் லெக்சர் மெட்டீரியலிலும் இருந்து 60 பதிப்பெண்களுக்கான கேள்விகளைத் தயார் செய்யவும். பாடம் குறித்த உங்களது புரிதலை இந்தக் கேள்விகள் பிரதிபலிக்க வேண்டும். இரண்டு மணி நேரத்தில் இதற்குப் பதிலளிக்கவும் வேண்டும். உங்களது நண்பர்களுடன் கலந்துரையாடுவதை தவிர்க்கவும். கேள்வித்தாள்களில் ஒற்றுமைகள் காணப்பட்டால் உங்களது மதிப்பெண்கள் குறைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது கேள்வியில்… நீங்கள் தயாரித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளது. முதல் கேள்விக்கு 30 மதிப்பெண்களும் இரண்டாவது கேள்விக்கு 40 மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த கேள்வித்தாள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடியின் தனித்துவமான முயற்சி பற்றி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் சரத் சின்கா, “ஐஐடி கோவாவில் பயிலும் மாணவர்கள் கல்வியை விரும்பி பயில வேண்டும் என்று நினைக்கிறோம். கல்வியாளர்களால் அவர்கள் ஒருபோதும் பாதிப்படையக் கூடாது. மாணவர்களின் கல்விக்கு முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறோம். மாணவர்களின் பதில் என்ன என்பதை பார்க்க விருபுகிறோம். சில மாணவர்கள் இதனை விரும்பலாம். சிலர் இதனை விரும்பமாட்டார்கள். தேர்வு தற்போது முடிந்துவிட்டது. கேள்விகளும் பதில்களும் மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பேராசிரியர்கள் அவர்கள் மதிப்பீட்டு செயல்முறையை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். பின்னர், மாணவர்கள் தங்களின் பேராசிரியர்களை அணுகி முன்னேற்றத்துக்கான செயல்களை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாடம் பற்றிய புரிதலை மதிப்பிடுவதற்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இந்த கேள்வித்தாள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வினாத்தாளை வடிவமைத்த ஆசிரியருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். என்ன ஒரு தனித்துவமான தேர்வு! மாணவர்களே கேள்விகளை தயாரித்து அதற்கு பதிலளிக்க வேண்டும். ஐஐடி கோவாவில் பயிலும் மாணவர்களை மதிப்பீடு செய்ய தனித்துவமான வழியைக் கண்டறிந்துள்ளனர். நிச்சயம் இது எளிமையான ஒன்றாக இருக்காது. ஒவ்வொருவரின் நேர்மையையும் சோதனை செய்யும் ஒன்றாக இந்த தேர்வு இருக்கும்” என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் ஒருவர் இந்த கேள்வித்தாளை சேர்த்து பதிவிட்டுள்ளார். “மதிப்பெண்கள் அவர்களுடைய வாழ்க்கைக்கு உதவி செய்யாது. ஆனால், இதேபோன்ற புதுமையான ஐடியாக்கள் அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்” என்றும் “கான்செப்ட் முழுமையாக தெரியாவிட்டால் இந்த தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். ஆசிரியர்களால் எளிதாக மாணவர்கள் Copy செய்வதை கண்டுபிடிக்க முடியும்” என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்

ஐஐடி கோவாவின் புதிய முயற்சி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமென்ட்ல சொல்லுங்க!

Also Read : நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சட்டங்கள், உரிமைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top