ரெட் அலர்ட் தெரியும்... ஆரஞ்சு, மஞ்சள், பச்சை அலர்ட் பற்றி தெரியுமா?

வானிலை நிகழ்வுகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அதன் தீவிரத்தை உணர்த்தவே நிறங்களின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகச் சொல்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

நிறங்கள் அடிப்படையிலான இந்த எச்சரிக்கை அரசு அதிகாரிகளையும் பேரிடர் மேலாண்மைத் துறையைச் சார்ந்தவர்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீட்புப் பணிகள் எந்த அளவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துபவை.

ரெட் அலர்ட் (Red Alert)

உடனடியாக நடவடிக்கை தேவை என்ற மிகவும் ஆபத்தான சூழ்நிலையைக் குறிப்பது. புயல் கரையை நெருங்கும் சூழல்களில் காற்றின் வேகம் 130 கி.மீ வரை இருக்கலாம் என்று எச்சரிக்கை செய்ய விடுக்கப்படுவது.

புயல் கரையைக் கடக்கும்போது அதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசுகளை அறிவுறுத்த வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுக்கும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவதோடு, மின் இணைப்பும் முன்னெச்சரிக்கையாகத் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பகுதிகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படும்.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைப்பொழிவு 30 மிமீ-க்கும் அதிகமாக இருக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம். அதேபோல், தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு அதிகமாக மழை நீடிக்கும்.

யெல்லோ அலர்ட் (Yellow Alert)

வானிலை மோசமான நிலையில், பாதிப்புகள் இருக்கலாம் என்கிறரீதியில் மக்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்த இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 7.5 மிமீ முதல் 15 மிமீ வரை மழைப் பொழிவு இருக்கலாம்.

யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் வானிலை மாற்றங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

ஆரஞ்சு அலர்ட் (Orange Alert)

மோசமான வானிலை அடுத்த சில நாட்களுக்கு இருக்கலாம், அதனால் பொதுமக்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படலாம் என்ற சூழலில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும்.

இதுபோன்ற சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தயார் நிலையில் இருக்க அரசு இயந்திரத்துக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தும். யெல்லோ அலர்ட்டைத் தொடர்ந்து வானிலை மோசமாகும்பட்சத்தில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படும்.

புயல் சின்னம் வானிலையை மோசமாக்குவதோடு, சாலை – வான் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால், உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படும்.

கிரீன் அலர்ட் (Green Alert)

மழை பெய்யும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் இந்த பச்சை அலர்ட் விடப்படுகிறது. பச்சை அலர்ட் விடப்பட்டால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. 

Red Alert: நிறங்களை வைத்து வானிலை எச்சரிக்கை விடப்படுவது ஏன்… பொருள் என்ன?