இந்திய கிரிக்கெட் வாரியம் யோ-யோ டெஸ்டோடு புதிதாக DEXA Scan test-ஐயும் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

DEXA Scan test என்றால் என்ன?

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கென 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரோட் மேப் போட்டு பயிற்சி அளிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

விராட் கோலி - ரவி சாஸ்திரி இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட யோ-யோ டெஸ்ட் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது

யோ-யோ டெஸ்டில் பேட்டர்கள் 18 மற்றும் பௌலர்கள் 19 புள்ளிகளைப் பெற வேண்டும். அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் இதில் ஃபெயில் ஆனது குறிப்பிடத்தக்கது.

யோ-யோ (Yo-Yo Intermittent Recovery Test) என்பது மொத்தம் 23 லெவல்களை உள்ளடக்கியது. 20 மீ இடைவெளியில் இரண்டு புள்ளிகளை நிர்ணயம் செய்து குறிப்பிட்ட தூரத்தை ஓடிச் சென்று திரும்பி வர வேண்டும்.

ஒவ்வொரு லெவலுக்கும் இடையே வீரர்களுக்கு 10 விநாடிகள் இடைவெளி வழங்கப்படும். இதில், சிலர் 23 லெவல்களையும் முடிப்பதுண்டு. சிலர், 15, 16 லெவல்களோடு திருப்திப்பட்டுக் கொள்வதுண்டு.

இதில், எடுக்கும் புள்ளிகளைக் கொண்டே உடற்தகுதித் தேர்வில் வெற்றிபெற்றார்களா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள்.

இத்தோடு DEXA Scan test என்ற புதிய டெஸ்டையும் பிசிசிஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த டெஸ்ட் ஒன்றும் புதிதானது அல்ல. தேசிய கிரிக்கெட் அகாடமி இந்த டெஸ்டை வீரர்களுக்கு எடுக்கலாம் என கடந்த 2011-ம் ஆண்டே பிசிசிஐ-க்குப் பரிந்துரை செய்திருந்தது.

DEXA Scan test முடிவுகளை வைத்துக் கொண்டு, வீரர்களின் உடலில் இருக்கும் கொழுப்பின் சதவிகிதம், நீர்ச்சத்து, எலும்புகளின் அடர்த்தி உள்ளிட்டவைகளைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.

கொழுப்பு அளவைப் பொறுத்தவரை கால்பந்து வீரர்களுக்கு 5-8% இருக்கலாம் என்றும் கிரிக்கெட்டர்களுக்கு அது 10% வரை இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் வீரர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும், அவர்களின் எதிர்கால உணவு முறை, பயிற்சி முறைகள் போன்றவற்றை பயிற்சியாளர்கள் முடிவு செய்யலாம்.

வீரர்கள் அதிகம் பேர் உரிய ஓய்வு கொடுத்தும் காயமடைவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்தே அறிவியல்பூர்வமாக இந்த டெஸ்டை பிசிசிஐ கையிலெடுத்திருக்கிறது என்கிறார்கள்