இந்த பாட்டை எல்லாம் கேட்டா அந்த நாளுக்கே போயிடலாம்..!

நம்ம வாழ்க்கையில் ஒரு சில தருணங்களையும் ஒரு சில நாள்களையும் பாடல்கள் மூலம் நினைவில் வைத்துக்கொள்ளும் பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி நம் நினைவில் ஒரு சில தினங்கள் என்றாலே குறிப்பிட்ட பாடல்கள்தான் நினைவுக்கு வரும். அது என்னென்ன தினங்கள் அது என்ன பாடல் என்பதைப் பார்க்கலாம்.

நாம குடியிருக்க தெருவிலோ அல்லது பக்கத்திலோ ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்னு இருக்கும். அங்க கண்டிப்பா ஆயுதபூஜை கொண்டாடுவாங்க. அப்போ லூப்ல போடுற பாட்டுதான் நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்.

பாட்ஷா படத்துல வர இந்தப் பாட்டோட சிச்சுவேஷனும் ஆட்டோ டிரைவர்ஸ் எல்லாருமே ஆயுதபூஜை கொண்டாடுற மாதிரிதான் இருக்கும்கிறனால, அவங்களுக்கு இந்தப் பாட்டு ரொம்பவே கனெக்ட் ஆகியிருக்கும். நமக்கும் ஆயுதபூஜைனா இந்தப் பாட்டுதான்னு ஒட்டிக்கிச்சு.

அதேபோல் புத்தாண்டு என்றால் அன்று முதல் இன்று வரை சகலகலா வல்லவன் படத்தின் இளமை இதோ இதோ பாடல்தான். ஏரியா தெருவில் கேக் கட்டிங் என்றாலும் சரி ஐடி கம்பெனியில் பார்ட்டி என்றாலும் சரி, கரெக்டா மணி 12 ஆனதும் இந்த பாடலைத்தான் ஒலிக்க விடுவார்கள்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

இந்தப் பாடலுக்கு பிறகு பல பாடல்கள் புத்தாண்டை கொண்டாடுவது போல் வந்துவிட்டாலும், ஏனோ இந்தப் பாடலில் இருக்கும் ஒருவித பெப் மற்ற பாடல்களில் சற்று குறைவதால், என்றுமே இந்த சகலகலா வல்லவனுக்கே முதலிடம்.

புத்தாண்டிற்கு கமல் பாடலைப் போலவே பொங்கலுக்கும் கமல் பாடல்தான். மகாநதி படத்தின் பொங்கலோ பொங்கல் பாடல்தான் அந்த தினம் முழுக்கவே டிவி நிகழ்ச்சிகளின் ப்ரோமோ மியூசிக், ஏரியாவின் பொங்கல் விழாவின் தீம் பாடல்.

இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு புத்துணர்ச்சியும் சித்ராவின் குரலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் நம்மை பொங்கல் தினத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.

குடியரசு தினம் என்றாலும் சரி சுதந்திர தினம் என்றாலும் சரி ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்... தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி என்று எஸ்.பி.பி.யின் கணீர் குரலில் பாடலோடுதான் அந்த நாள் ஆரம்பமாகும்.

அதேபோல் ரஹ்மானின் வந்தே மாதரம், இந்தியன் படத்தின் கப்பலேறி போயாச்சு போன்ற பாடல்கள் அடுத்தடுத்து ஒலிக்கப்பட்டாலும், தாயின் மணிக்கொடிக்குத்தான் முதலிடம்.

இவை மட்டுமில்லாமல் மே தினம் என்றால் உழைப்பாளி இல்லாத பாடலும்; தீபாவளி என்றால் விஜய்யின் தீபாவளி தீபாவளி பாடலும் அஜித்தின் தீபாவளி தல தீபாவளி பாடலும் என அந்தந்த ரசிகர்கள் பிரித்துக்கொள்வார்கள்.

விநாயகர் சதுர்த்தி என்றால் லாரன்ஸ் ஆடிய மகா கணபதி, யப்பா யப்பா தொப்ப கணேசா, வீர விநாயகா என விநாயகருக்கு மட்டும் பல பாடல்கள் இருக்கின்றன.

இப்படி உங்களுக்கு எந்த பாடல் எந்த தினத்தை ஞாபகப்படுத்தும் என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.