Karthigai Deepam: நினைக்க முக்தி தரும் அண்ணாமலையாரை வணங்குவோம்!

நினைக்க முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழா "கார்த்திகை திருநாள்". இத்திருநாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் தீபமேற்றப்படும். 

திருக்கார்த்திகை நாளுக்கு பத்து நாள்கள் முன்னதாக இருந்தே திருவிழா தொடங்கிவிடும். கொடியேற்றத்தில் தொடங்கி, பஞ்சமூர்த்திகள் உலாவும், அண்னாமலையாரின் பவனியும், கோயிலின் மகா தேரோட்டமும் இந்தப் பத்து நாள்களிலும் நடைபெறும்.

இக்கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வாக மகா தீபமேற்றப்படும்.  பக்தர்கள் மலையையே அண்ணாமலையாரின் வடிவமாய்க் கருதி இந்நாளில் கிரிவலமும் வருவர். 

திருக்கார்த்திகை நாளன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர நேரத்தில் இந்தத் தீபம் ஏற்றப்படுவதால் பரணி தீபம் எனப் பெயர். 

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும் விதமாக, பரணி தீபம் 5 அகல் விளக்குகளால் ஏற்றப்படும்.

அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். திருக்கார்த்திகை நாளில் மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபம் அடுத்த 11 நாள்களுக்கும் தொடரும். 

தீபமேற்றப்படும் திருவண்ணாமலை மலை 2668 அடி உயரம் கொண்டது. இந்தத் தீபத்திருவிழாவின் கொண்டாட்ட நாள்களில் பக்தர்கள் மலையேறி தீபத்தை தரிசிக்க முடியும்.  (கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் மலையேற்றத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.)

இப்போது தீபமேற்றப்படும் கொப்பரை, இரும்பால் ஆனது. 1991-ம் ஆண்டு முதல் இக்கொப்பரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 1668-ம் ஆண்டு 'பிரதானிவேங்கடபதி ஐயர்' என்பவர் வழங்கிய வெண்கலக் கொப்பரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

மகாதீபம் ஏற்றுவதற்கு 1000 மீட்டருக்கும் அதிக அளவுள்ள காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படும். 3000 கிலோவுக்கும் அதிகமாக நெய் பயன்படுத்தப்படும். 

புண்ணியத்தைப் பெற எண்ணினால் போதும் அண்ணாமலையாரை பக்தர்கள் நினைத்த இடத்தில் இருந்தே திருக்கார்த்திகை நாளில் அரோகரா பாடி முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை.