தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
மழைக்கால நோய்கள்
பருவ மழைக்காலம் என்பது வெப்பத்தைத் தணிப்பது மட்டுமின்றி, சுகாதாரமற்ற நீரினால் ஏற்படக் கூடிய நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டே வரும்.
மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு வைரஸ், பாக்டீரியாக்கள் என பல்வேறு நுண்ணுயிரிகள், கிருமிகள் காரணமாக அமைகின்றன.
குறிப்பாக மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.
மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வீட்டிலிருக்கும்போதோ அல்லது வீட்டுக்கு வெளியில் இருக்கும்போதோ சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பிறகும், கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னரும் கைகளை சோப் மூலம் நன்கு கழுவுவது உங்கள் உடலுக்குள் நோய்க்கிருமிகள் செல்லாமல் இருக்க உதவும்.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மூக்கு, கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இருமல், சளி இருப்பின் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
மழைக்காலங்களில் நோய்களைப் பரப்புவதில் சுகாதாரமற்ற குடிநீருக்கு ரொம்பவே பெரிய பங்குண்டு. அதனால், மழைக்காலங்களில் நீங்கள் அருந்தும் குடிநீர் சுகாதாரமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சுகாதாரமற்ற முறையில் தாயாரிக்கப்படும் உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிடுவது நலம். சுத்தமான குடிநீரைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் பெஸ்ட்.
முடிந்தவரை இதுபோன்ற மழைக்காலங்களில் வெளி உணவுகளைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலங்களில் வீட்டின் மேல்தளம்/கூரைகள் வழியாக தண்ணீர் வழிகிறதா… பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உருவாக இது வழிவகுக்கும் என்பதால், உடனடியாக அதை சரிசெய்யுங்கள்.
குடிநீர் குழாய், செப்டிக் டேங்க் குழாய்களில் லீக்கேஜ் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்து, இருந்தால் உடனே சரிசெய்யுங்கள்.
ஏ.சி, கூலர்கள், குடிநீர் சுத்திகரிப்பான்கள், தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
தேங்கியிருக்கும் நீரினால் கொசுக்கள் உற்பத்தி அதிகம் இருக்கும். இதனால், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், உரல் போன்ற நீர் தேங்கும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க கொசுவலை, மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக உடல்நலன் பாதிக்கப்பட்டால், அருகிலிருக்கும் மருத்துவரை அணுகி தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.