மு.க.ஸ்டாலின் சென்னை கிறிஸ்தவ கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவர் படிக்கும்போது தன்னை பிரபல அரசியல்வாதியின் மகன் என ஒருபோதும் காட்டிக்கொண்டது இல்லை என அவரது வகுப்புத் தோழர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க-விற்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் அவரை வம்புக்கு இழுப்பார்களாம். எனினும் அமைதியாக தன்னுடைய படிப்பில் மட்டுமே ஸ்டாலின் கவனத்தை செலுத்துவாராம்.
பேரறிஞர் அண்ணாவிற்கு இளைஞர் தி.மு.க சார்பில் மணிவிழா கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அனுமதி வாங்க ஸ்டாலின், அண்ணாவை சந்திக்க சென்றுள்ளார். ஆனால், அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை என அவரது உதவியாளர்கள் ஸ்டாலினை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையறிந்த அண்ணா உடனே, ஸ்டாலின் வீட்டுக்கு கார் அனுப்பி அழைத்து வர செய்துள்ளார். மகிழ்ச்சியுடன் சென்ற ஸ்டாலின் பிடிவாதமாய் நின்று விழாக்கான தேதியையும் வாங்கி வந்துள்ளார்.