`கம்யூனிஸ்ட் - சிவில் இன்ஜினீயர்’ - கருணாநிதி... 9 சுவாரஸ்யங்கள்!

வைதீக குடும்பத்தில் பிறந்த கருணாநிதி 10 வயதுவரை தீவிர ஆத்திகராகவே இருந்தார்.  பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பெரியாரின் பேச்சுக்களைக் கேட்டு, நாத்திகராக மாறினார்.

கருணாநிதியிடம் அண்ணா, படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார். ஆனால், கருணாநிதி முன்னைவிட அரசியலிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.  

தமிழ் திரை உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இரண்டு துருவங்களாக உருவானதன் பின்னணியில் கருணாநிதிக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.

அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானபோது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சொன்ன முதல் வார்த்தை, ``கருணாநிதியா அவர் மத்திய அரசோடு ஒத்துழைப்பாரா? கொள்கை ரீதியில் பிடிவாதக்காரர் என்றும், தகராறு செய்யக்கூடியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே” என்பதுதான்.

தமிழகம் என்றால் கருணாநிதி... கருணாநிதி என்றால் தமிழகம் என்ற நிலை எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கும் வரை நீடித்தது.

தமிழில் அதிகம் பேசியவர்கள் எழுதியதில்லை. எழுதியவர்கள் பேசியதில்லை. ஆனால், இரண்டிலும் சாதனை படைத்தவர் கருணாநிதி.

பாண்டிச்சேரியில், காங்கிரஸ்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட கருணாநிதிக்கு பெரியார் தன் கைகளால் மருந்துபோட்டு, அவரை தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டார்.

பெரியாரையும், அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால் ஒரு கம்யூனிஸ்டாக தன் வாழ்க்கை அமைந்திருக்கும் என்று அடிக்கடி சொல்வார் கருணாநிதி.

கருணாநிதிக்குள் எப்போதும் ஒரு அரசியல்வாதியைப்போல, கதை வசனகர்த்தாவைப்போல, கவிஞரைப்போல, எழுத்தாளரைப்போல, ஒரு கட்டடப் பொறியாளரும் இருந்து கொண்டே இருந்தார்.