கோவை குருடாம்பாளையம் 9-வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி தேசிய அளவில் டிரெண்டானது. அவரது குடும்பத்தில் 6 பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு 4-வது வார்டில் வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு கிணறு சின்னத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வந்த அவர், தோல்வியடைந்ததால் தரையில் புரண்டு அழுதார். அப்போது, `மாமா... கிணத்துல தள்ளிவிட்டுட்டாங்களே.. படுபாவிங்க’ என்று கூறி கண்ணீர் விட்டிருக்கிறார்.
விழுப்புரம் காணை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான மஞ்சள் நிற வாக்கு சீட்டில் மொத்தமிருந்த 6 சின்னங்களில் 4 சின்னங்களில் ஒரு வாக்காளர் வாக்களித்திருந்தார். அதேபோல், கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட 4 பேரில் 3 சின்னங்களில் வாக்காளர் ஒருவர் வாக்களித்திருந்தார். இவை செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டன.