தி.மு.க-வில் இவ்வளவு செல்வாக்காக இருக்கும் கே.என்.நேருவின் சொந்த ஊர் திருச்சியில் உள்ள காணக்கிளியனூர். அவருடைய பெற்றோர் நாராயணன் ரெட்டியார்-தனலெட்சுமி அம்மாள். நாராயணசாமி ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்தவர். அதனால், ஜவஹர்லால் நேருவின் நினைவாக, தன் மூத்த மகனுக்கு நேரு என்று பெயர் வைத்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.யூ.சி வரை படித்தார். அந்த நேரத்திலேயே அந்த ஊர் மக்களின் அவசர உதவிகளுக்கு நேருவைத்தான் அணுகுவார்கள். புல்லட்டில் வைத்து அவசர உதவி தேவைப்படுபவர்களை அழைத்துச் செல்வது நேருவின் வழக்கம். அப்படியே எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனால், புல்லட் தம்பி, புல்லட் நேரு என்ற அடைமொழி உருவானது.