23 வயதில் ஐ.ஏ.எஸ்... கீழடி அறிமுகம் - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்-ன் சுவாரஸ்ய பயணம்

நேர்மையான அதிகாரிக்கு நிகழ்கால உதாரணங்களில் ஒருவர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ் ஆன இந்த நாமக்கல்க்காரர், தன் கால்பட்ட துறைகளிலெல்லாம் சாதனைகளை நிகழ்த்திய துணிச்சல்காரர்.

சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 38-வது இடத்தைப் பிடித்த உதயசந்திரனுக்குக் கிடைத்த முதல் பொறுப்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் சப் கலெக்டர்.

அறிவு ஒன்றுதான் தமிழகத்தின் அற்றம் காக்கும் கருவி என்று தீவிரமாக நம்பும் உதயச்சந்திரன் தனது பணி அனுபவத்தில் கல்வி சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்.

ஈரோட்டில் 8500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 110 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கச் செய்தது, சமச்சீர் கல்வியை வடிவமைத்தது,  மாணவர்களுக்கான தர மதிப்பீட்டு முறையினை மாற்றியமைத்தது என்று கல்விக்கு இவர் ஆற்றிய பணி நீண்ட நெடியது.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சுமார் பத்து ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த தேர்தல்களை நடத்தி பரவலாக கவனத்தைப் பெற்றார்.

புத்தகங்களின் மீது தீராக்காதல் கொண்ட உதயச்சந்திரன் புத்தகப் பிரியர்களுக்காகவும் புத்தகங்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசையாலும் மதுரையில் மெகா புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்தார்.

ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என்றும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் வழக்குகள் நீதிமன்றங்களில் வந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தார். உரிய வழிகாட்டுதல்களோடு விளையாட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

கீழடி... இவர் கிரீடத்தில் மின்னும் மற்றுமொரு வைரம். தமிழரின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய கீழடிதான், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்-ன் பெருமையை தமிழகம் முழுவதும் பரவச் செய்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது ஊழலுக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்தினார்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் முறை, கணினி வழித்தேர்வு போன்ற புதுமையான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை அறிமுகப்படுத்தினார்.

பப்ளிக் சர்வீஸ் பணிகளில் ஆட்களை சேர்ப்பது தொடர்பாக அவர் எடுத்த துணிச்சலான முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிகளவில் பயனளித்தது.

இதனால், அரசு தேர்வாணையத்தின் மீது மக்களுக்கு இருந்த அவநம்பிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

தற்போது தமிழக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரான உதயசந்திரன் IAS. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத முகம்.