லேடி உதித் நாராயண்... யார் இந்த `மல்லிப்பூ’ மதுஸ்ரீ!

மதுஸ்ரீ குரலில் மல்லிப்பூ பாடலை இப்போ நம்ம எல்லாரும் கேட்டு வைப் பண்ணிட்டு இருக்கோம். ஆனால், 20 வருஷத்துக்கு முன்னாடி இதே மதுஸ்ரீக்கு பாலிவுட்டில் பாடுறதுக்கு எந்த இசையமைப்பாளரும் வாய்ப்பே கொடுக்கலை. அதுக்கு காரணம் நெப்போடிஸம்.

உடைச்சு மதுஸ்ரீக்கு வாய்ப்பைக் கொடுத்தது வேற யாரும் இல்லை; இப்போ மல்லிப்பூ பாட்டைக் கொடுத்த அதே ரஹ்மான்தான்.

மதுஸ்ரீயோட தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது பலருக்கும் உதித் நாராயன் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார். இதுல சுவாரஸ்யம் என்னன்னா, தமிழில் மதுஸ்ரீ அறிமுகமான முதல் பாடலை உதித் நாராயனோடுதான் சேர்ந்து பாடியிருப்பார். வித்யாசாகர் இசையில் ஆஹா எத்தனை அழகு படத்தோட நிலாவிலே நிலாவிலே பாடல்தான் மதுஸ்ரீக்கு விசிட்டிங் கார்ட்.

மதுஸ்ரீ பாடிய தமிழ் பாடல்களை பார்த்தால், தமிழ் தெரியாத ஒரு பாடகிக்கு தமிழில் இத்தனை சோலோ பாடல்களா என வியக்குற அளவுக்கு இருக்கும். ஆயுத எழுத்து படத்தோட சண்டக்கோழி பாட்டுல ஆரம்பிச்சு இப்போ மல்லிப்பூ வரைக்கும் பல ஹிட் பாடல்களை சோலோவாக பாடியிருக்கிறார்.

குறிப்பா சண்டக்கோழி பாடலைப் பற்றி சொல்லணும்னா, முதலில் இந்தப் பாட்டோட ஹிந்தி வெர்ஷனைத்தான் ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவுட்புட்டை கேட்டுட்டு இவங்களையே தமிழுக்கும் பாட வைக்கலாமேனு தமிழில் பாடி வெச்சிருக்கார். அப்படியே தெலுங்கிலும் பாட வைக்கலாமேனு தமிழ், ஹிந்தி, தெலுங்கு என ஒரு பாட்டை மூணு மொழிகளிலும் பாடினார்.

அதன் பிறகு இவர் பாடிய முக்கியமான சோலோ பாடல்களான காளை படத்தோட எப்போ நீ என்ன பாப்ப; சக்கரக்கட்டி படத்தோட மருதாணி; எங்கேயும் எப்போதும் படத்தோட உன் பேரே தெரியாது; மங்காத்தா படத்தோட ஹே நண்பனே; இவன் வேற மாதிரி படத்தோட என்னை மறந்தேன்; இப்போ மல்லிப்பூனு பல பாடல்களை ரசிகர்கள் மறக்காமல் இருக்குற அளவுக்குப் பாடியிருக்கிறார்.

சோலோவிலேயே இவ்வளவு ஹிட்னா, ஜோடி சேர்ந்து பாடும் போது சொல்லவே வேணும்கிற ரேஞ்சுக்கு பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இதில் பல பாடல்களை மதுஸ்ரீயா பாடுனதுனு உங்களில் பல பேருக்கு ஆச்சரியமும் வரலாம்.

ஜி படத்தோட டிங் டாங் கோவில் மணி; அன்பே ஆருயிரே படத்தோட மயிலிறகே; பொறி படத்தோட பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்; சிவாஜி படத்தோட வாஜி வாஜி; தீபாவளி படத்தோட கண்ணன் வரும் வேளை; உன்னாலே உன்னாலே படத்தோட வைகாசி நிலவே; பீமா படத்தோட ரகசிய கனவுகள்; ஜெயம் கொண்டான் படத்தோட நான் வரைந்து வைத்த சூரியன்; சர்வம் படத்தோட சிறகுகள் வந்தது என லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வாஜி வாஜி பாடலுக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்தப் பாடலை மதுஸ்ரீக்கு சொல்லிக்கொடுத்தப்போ அவருக்கு உச்சரிப்புகள் சரியாகவே வரவில்லையாம். அதனால், ரஹ்மான் இந்தப் பாட்டை நான் வேற பாடகியை வெச்சு ரெக்கார்ட் பண்ணிக்கிறேன்.

ஆனால், நாளைக்கு இந்தப் பாடலுக்கான ஷூட் ஆரம்பிக்கிறாங்க. அதுனால நீங்க ட்ராக் பாடிக்கொடுங்கனு சொல்லி டம்மி வெர்ஷனை ரெக்கார்ட் செய்து ஷூட்டிங்கிற்காக கொடுத்திருக்கிறார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

மூன்று நாள்கள் ஷூட்டிங்கில் இந்தப் பாட்டையே லூப்பில் கேட்ட ரஜினியிடம், கடைசியாக இந்தப் பாட்டோட டம்மி வெர்ஷன்தான் இது. படத்துல வேற சிங்கர்தான் பாடுவாங்க என சொன்னதும் பதறிட்டாராம். இவங்க குரல்தான் இந்தப் பாட்டுக்கு சரியா இருக்கும்னு ரஜினி சொன்னதால்தான் ரஹ்மானும் ஓகே சொல்லியிருக்கிறார்.

கொல்கத்தாவில் ஓர் இசை குடும்பத்தில் பிறந்த மதுஸ்ரீ, சின்ன வயசுல இருந்தே இசை மேல ரொம்ப ஆர்வமா இருந்தார். 5 வயசுலேயே மேடை ஏறி பாடுவாராம். மைக் எட்டாதுனு ஒரு சேர் போட்டு அது மேல ஏறி நின்னு பாடுவாராம். அந்தளவுக்கு இசை மேல ஆர்வமா இருந்தவர்.

இசையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டு, படிக்கவும் செய்தார். படிச்சுட்டு அதை பலருக்கும் கத்துக்கொடுக்கணும்னு தென் அமெரிக்காவில் வேலையும் பார்த்தார்.

இவர்கிட்ட இசை கத்துக்க வந்தவர்தான் மதுஸ்ரீயின் கணவர் ராபி. அவருக்கு இவர் இசை கத்துக்கொடுக்க; பதிலுக்கு அவர் மதுஸ்ரீக்கு தென் அமெரிக்காவை பழக்கப்படுத்தியிருக்கி-றார்.

இப்படி அறிமுகமான இவர்களின் நட்பு, காதலானது. பிறகு இவர் மும்பைக்கு திரும்ப வந்ததும் அவரையே திருமணமும் செய்தார். இதற்கு பிறகுதான் அவர் பாலிவுட்டில் பாடல்கள் பாட வாய்ப்பும் கிடைத்தது.

வெந்து தணிந்தது காடு படத்தோட ஆடியோ லான்சில் மல்லிப்பூ பாட்டை மதுஸ்ரீ லைவ்வாக பாடுனதை எல்லாருமே ரசிச்சிக் கேட்டிருப்போம். அவரோட வேற எந்தப் பாட்டை அப்படி லைவ்வாக கேட்கணும்னு நினைக்கிறீங்கனு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.