நேதாஜி முதல் பிபின் ராவத் வரை... இந்தியாவில் ஹெலிகாப்டர்/விமான விபத்துகளில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல. இதுவரை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபலங்களின் பட்டியல் இங்கே...

சுபாஷ் சந்திர போஸ் - ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய விடுதலை போராட்ட வீரர் 1945-ம் ஆண்டு தைவான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது விமான விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

மோகன் குமாரமங்கலம் - சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த பி.சுப்பராயனின் மகன் இவர். ஒன்றிய இரும்பு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1973-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா மற்றும் காதில் அணியும் கருவி மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

சஞ்சய் காந்தி - இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் இவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவராக இந்திரா காந்திக்குப் பிறகு இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 1980-ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

என்.வி.என்.சோமு - திமுகவை சேர்ந்த அப்போதைய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் என்.வி.என்.சோமு 1997-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

மாதவராவ் சிந்தியா - ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர், ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராகவும் கருதப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

ஜி. எம். சி. பாலயோகி - இந்தியாவின் 12-வது மக்களவைத் தலைவராக இருந்தபோது 2002-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

நடிகை சவுந்தர்யா - தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்தவர், சவுந்தர்யா. கடந்த 2004-ம் ஆண்டு  பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கரிம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது விமானம் வெடித்து சவுந்தர்யா உயிரிழந்தார்.

ஓம் பிரகாஷ் ஜின்டல் - இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக திகழ்ந்தவர். ஹரியானாவில் மின்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி - ஆந்திராவின் முதல்வராக இருந்தவர், ராஜசேகர ரெட்டி. கடந்த 2009-ம் ஆண்டு இவர் பயணித்த ஹெலிகாப்டர் ருத்திரகொண்டா மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில், ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

டோர்ஜி காண்டு - அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. மே 5-ம் தேதி டோர்ஜி காண்டுவின்  உயிரிழப்பை உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது.

பிபின் ராவத் - இந்தியாவில் முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றி வந்த பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர்.