ஃபர்னூஸ் முதல் நிவர் வரை... தமிழகத்தை உலுக்கிய 10 புயல்கள்!

தமிழகத்தை பல புயல்கள் கடுமையாக தாக்கியுள்ளன. அதில் பல மாவட்டங்கள் உருகுலைந்துள்ளன. முக்கியமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எந்தெந்த புயல்களால் தமிழகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது தெரியுமா? பட்டியல் இதோ...

ஃபர்னூஸ் - கடந்த 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் இந்தப் புயல் உருவானது. மணிக்கு 85 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. இந்தப் புயல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த ஆண்டில் மொத்தம் 773 மி.மீ மழை பெய்தது. இயல்பை விட இது 79% அதிகம். இந்தப் புயல் நேரத்தில் தமிழகமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. பலகோடி ரூபாய் இழப்புகள், பயிர் சேதங்கள் ஏற்பட்டன.

நிஷா - கடந்த 2008-ம் ஆண்டு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறியது. மணிக்கு 85 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. சுமார் 20 நாள்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், சுமார் 12 மாவட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின. சுமார் 170 பேர் உயிரிழந்தனர்.

ஜல் - கடந்த 2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் இந்த ஜல் புயல் உருவானது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. சென்னைப் பகுதியில் இந்தப் புயல் கரையைக் கடந்தது. அப்போது 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

தானே - கடந்த 2011-ம் ஆண்டு வங்கக்கடலில் இந்தப் புயல் உருவானது. இந்தப் புயல்தான் தமிழகத்தைத் தாக்கிய முதல் அதிதீவிரமான புயல். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. ஆயிரக்கணக்கான மரங்கள், பயிர்கள் என இதனால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். சுமார் 40,000 மின்கம்பங்கள் முறிந்தன.

நீலம் - கடந்த 2012-ம் ஆண்டு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறியது. மணிக்கு 85 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. பல மாவட்டங்களில் இந்த புயலால் ஏற்பட்ட அலை சீற்றத்தின் காரணமாக கடல்நீர் ஊருகளுக்குள் புகுந்தன. கடலோர மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிப்படைந்தன.

மடி - 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேதாரண்யம் அருகே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. இதனால், வேதாரண்யம் பகுதியில் வாழ்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

வர்தா - கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ரோனு, கியான்ட், நடா ஆகிய புயல்கள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், கடைசியில் உருவான வர்தா புயல் அதிதீவிர புயலாக மாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசியது. இதனால், சென்னை திக்குமுக்காடியது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பல நாள்கள் மின் விநியோகங்கள் நிறுத்தப்பட்டன.

ஒக்கி - கடந்த 2017-ம் ஆண்டு கன்னியாகுமரி மற்றும் கேரளாவை ஒக்கி புயல் புரட்டிப் போட்டது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் சென்றனர். மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள் கடுமையாக சேதமடைந்தன. மணிக்கு 155 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுவர பலநாள்கள் ஆகின.

கஜா - கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தின் டெல்டா பகுதிகளை கஜா புயல் தாக்கியது. மணிக்கு 128 கி.மீ வேகத்தில் இந்தப் புயல் வீசியது. மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து கடுமையாக பாதிப்படைந்தனர். பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன.

நிவர் - கடந்த 2020-ம் ஆண்டு வங்கக்கடலில் இந்தப் புயல் உருவானது. மணிக்கு சுமார் 120 கி.மீ வேகத்தில் நிவர் புயல் வீசியது. வடக்கு கடற்கரை மாவட்டங்கள் இந்தப் புயலால் கடுமையாக பாதிப்படைந்தன.

Chennai Rains: `ஸ்மார்ட் சிட்டி’ தி.நகர் தண்ணீரில் தத்தளிக்க என்ன காரணம்?