பாக்ஸிங் டு அ.தி.மு.க-வின் வடசென்னை முகம் - மதுசூதனன் நினைவலைகள்!

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியப் பிறகு வடசென்னையில் அக்கட்சியின் முகமாக இருந்தவர், மதுசூதனன்.

மதுசூதனன் மிகச்சிறந்த குத்துசண்டை வீரர். அதனாலேயே, அவர் மீது எதிர்க் கட்சியினருக்கும் அந்தப் பகுதியினருக்கும் பயம் கலந்த மரியாதை இருக்கும்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜா-அணி, ஜெ-அணி எனப் பிரிந்தபோது ஜெ -அணியை ஆதரித்தார்.

1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது கலவரம் ஏற்பட்டபோது சட்டமன்றத்துக்கு வெளியே ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக நிறுத்தப்பட்டவர்கள், மதுசூதனனின் ஆட்கள்தான்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அன்றைய அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்களால் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டது. அப்போது, மதுசூதனன் தனது ஆட்களுடன் தினமும் போயஸ் கார்டனில் இரவு நேர பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்தார். அது பல மாதங்கள் நீடித்தது.

1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் மதுசூதனனின் கடந்தகால உதவிகளுக்கு பரிசாக கைத்தறித்துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட விவகாரத்தில் மதுசூதனன் பெயர் அடிபட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை சந்திரலேகாவே தவறானது என்று தெளிவுபடுத்தினார்.

2010-ம் ஆண்டு அதிமுகவின் அவைத்தலைவர் பதவியை ஜெயலலிதா மதுசூதனனிடம் ஒப்படைத்தார். மரணமடையும் வரை மதுசூதனனே அந்தப் பொறுப்பை வகித்தார்.

மதுசூதனன் கோட்டையாக இருந்த வடசென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் ஆகியோர் அரசியல் செய்ய ஆரம்பித்த பிறகு கட்சியிலும் அந்தப் பகுதியிலும் மதுசூதனனுக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை ஆரம்பத்தில் ஆதரித்த மதுசூதனன் பிறகு ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டபோது அந்த அணியை ஆதரித்தார்.

2017-ம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு, அ.ம.மு.க-வின் டிடிவி தினகரனிடம் தோல்வியடைந்தார். அதுதான் மதுசூதனனின் கடைசி தேர்தல். 

2017-ம் ஆண்டு இரட்டை இலைச்சின்னம், அ.தி.மு.க கட்சிக்கொடி ஆகியவை முடக்கப்பட்டு, திரும்பக் கொடுத்தபோது அவற்றை தேர்தல் ஆணையம் மதுசூதனனிடம்தான் ஒப்படைத்தது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோரிடம் தனது கடைசி காலத்தில் மதுசூதனன் மாத உதவித்தொகைக் கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். கடைசி வரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அந்த வருத்தம் மதுசூதனனுக்கு இருந்தது.

அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அவைத்தலைவர் பொறுப்பில் மதுசூதனன் தனது கடைசி மூச்சு வரை இருந்தார்.

மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலா மற்றும் இ.பி.எஸ் அவரை நேரில் சென்றும் நலம் விசாரித்தனர். இது கட்சியில் அவரது முக்கியத்துவத்தை காட்டுகிறது.