ரிஷப ராசிக்காரரா நீங்க? அப்போ நீங்க செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

ரிஷப ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

கார்த்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரிஷப ராசியாகும். இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன்.

ரிஷபம் என்பது நந்திபகவானைக் குறிப்பதால், அவரின் கொம்புகளுக்கு இடையே அருள் பாலிக்கும் ஈசனை வழிபடுவது விசேஷம்.

கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் அருள்புரியும் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில் ரிஷப ராசிக்காரர்கள் அவசியம் சென்று வழிபட வேண்டிய கோயிலாகும்.

ரிஷப ராசிக்காரர்களுக்குப் பரிகாரத் தலமாக இருக்கும் இந்தத் தலத்தில், சித்திரை முதல் மூன்று தேதிகளில் நடைபெறும் சூரிய ஒளி பூஜை சிறப்பு பெற்றது.

கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார். சித்திரை முதல் மூன்று நாட்களில் சூரிய ஒளி கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. இந்த நாட்களில் நடக்கும் சூரிய ஒளி பூஜை சிறப்பு வாய்ந்தது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபட்டால் எல்லா வளமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆலயத்தில் இருக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாசையில் கங்கை பொங்கி வரும் என்று நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று கங்கை பொங்குகிறது. அன்றைய தினம் இரவு முழுவதும் திவ்யநாம சங்கீர்த்தனம் நடைபெறும்.

ரிஷப ராசிக்காரர்கள் இதில் கலந்துகொண்டு புனித நீராடினால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை. தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 43-வது தலமாகும்.

திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரரைத் தரிசித்துவிட்டு அருகில் இருக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியையும் மறக்காமல் தரிசித்துவிட்டு வாருங்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிசநல்லூர் என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால், இந்த ஊரை பண்டாரவாடை திருவிசநல்லூர் என்றழைக்கிறார்கள். மேலும், திருவியலூர், திருவிசலூர் உள்ளிட்ட பல பெயர்களில் இந்த ஊரை அழைக்கிறார்கள்.